Published:Updated:

`நீ வந்ததே எனக்குப் போதும்பா..!' - ஒரத்தநாட்டில் 16 வருடங்களுக்குப் பிறகு தாயைச் சந்தித்த மகன்

வீட்டுக்கு வந்த மகன்
வீட்டுக்கு வந்த மகன்

`எத்தனை வருஷமானாலும் அவன் என்னைப் பார்க்க வருவான் என நினைத்தேன். நான் கும்பிடற சாமி, என்னையும் என் புள்ளையையும் கைவிடவில்லை' எனக் கூறி கதறி அழுதார் தாய் வளர்மதி.

ஒரத்தநாடு அருகே வீட்டை விட்டுச் சிறுவனாக ஓடிய நபர் 16 வருடங்களுக்குப் பிறகு இளைஞராக வீடு திரும்பிய நிலையில், அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டு தாய் கதறியழுத சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வெற்றிச்செல்வன்
வெற்றிச்செல்வன்

ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் கீழத் தெருவைச் சேர்ந்தவர்கள் நாகமுத்து-வளர்மதி தம்பதி. விபத்து ஒன்றில் நாகமுத்து இறந்து விட்டார். இவர்களின் மூத்த மகன் வெற்றிச்செல்வன் 16 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். அதன்பிறகு எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்தநிலையில் சென்னை கோயம்பேடு காவல்நிலையத்திலிருந்து வளர்மதிக்குக் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், `உங்கள் மகன் உயிருடன் இருக்கிறான், வந்து அழைத்துச் செல்லுங்கள்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைக் கேட்ட வளர்மதி, மகன் கிடைத்த சந்தோஷத்தில் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அதன் பின்னர் வெற்றிச்செல்வனின் சித்தப்பாவான பிச்சமுத்து சென்று அவரை அழைத்து வந்திருக்கிறார்.

பிச்சமுத்துவிடம் பேசினோம். `` பத்தாம் வகுப்பு படிக்கும்போது வெற்றிச்செல்வன் வீட்டை விட்டு ஓடிவிட்டான். அதன்பிறகு அவனைப் பல ஊர்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஆண்டுகள் கடந்துவிட்டதால், அவன் இறந்திருப்பான் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம். வீட்டில் தலைமகன் காணாமல் போனதில் பாதி உசுராத்தான் அவன் அம்மா வாழ்ந்துட்டிருந்தாங்க.

இந்தநேரத்தில்தான் சென்னையிலிருந்து கடிதம் வந்தது. `உங்க மகன் பிரச்னை ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறான், வந்து அழைத்துச் செல்லுங்கள்' எனக் கூறப்பட்டிருந்தது. இதைக் கேட்ட வளர்மதி, `என் பையன் எந்தத் தப்பும் செஞ்சிருக்க மாட்டான். எத்தனை வருஷமானாலும் அவன் என்னைப் பார்க்க வருவான்னு நினைச்சேன். நான் வேண்டிய சாமி என்னையும் என் புள்ளையையும் கைவிடவில்லை. உடனே அவன அழைச்சிட்டு வாங்கன்னு சொன்னார்.

பின்னர் நானும் அவன் தம்பியும் கூப்பிடப் போனோம். எங்ககிட்ட பேசின போலீஸாரும், இன்னொருத்தன் செஞ்ச பிரச்னைக்கு இவன் மாட்டிக்கிட்டான். ஜாமீனில் அவனை அழைத்துச் செல்லுங்கள்' எனக் கூறி தேவையான உதவிகளையும் செஞ்சாங்க. இதையடுத்து அவனை ஊருக்கு அழைத்து வந்தோம். 16 வருஷம் கழிச்சு வெற்றி வர்றான்னு தெரிந்ததும் அவனைப் பார்க்க தெருவே கூடி நின்னுச்சு.

அவன் அம்மாவைக் கண்டதுமே ஓடிச்சென்று கட்டியணைச்சுட்டு, என்னை மன்னிச்சுடும்மான்னு அழுதான். `அம்மாவப் பார்க்கணும் என ஒருநாள் கூட உனக்கு தோணலையாப்பா' எனத் தலையைக் கோதிவிட்டபடியே கண்கள் கலங்கக் கேட்டார் அவன் அம்மா.

வீட்டிற்கு வந்த மகன்
வீட்டிற்கு வந்த மகன்

இதன்பிறகு, `உன்கூட பொறந்தவங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி குழந்தைகள் இருக்கு. நீ எப்படிப்பா இருக்க' என அம்மா கேட்டார். `எனக்கு சென்னையில் உறுதுணையாக இருந்த சகாயராணி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன்' என்றான். இதன்பிறகு, `நான் வந்துவிட்டேன். இனிமேல் உன்னைக் கண்கலங்காமல் கஷ்டப்படாமல் பார்த்துக் கொள்வேன்'ன்னு உறுதி கொடுத்தான். `நீ வந்ததே எனக்குப் போதும்பா’ எனப் பெருந்தன்மையுடன் கூறினார் வளர்மதி. ஊர்க்காரர்களின் வாழ்த்துகளால் உற்சாகமாக இருக்கிறார் 65 வயதான தாய் வளர்மதி.

அடுத்த கட்டுரைக்கு