தமிழ்நாட்டைச் சேர்ந்த விக்ரம் புத்தநேசன் என்பவர் தன்னுடைய அம்மா கடந்த 24 வருடங்களாக ஒரே தட்டில் சாப்பிட்டுவந்ததாகவும், அதற்குப் பின்னால் இருக்கும் காரணம் குறித்தும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். தற்போது அவருடைய அம்மா இறந்துவிட்ட நிலையில், அவரை நினைவுகூரும்விதமாக இந்தப் பதிவைப் பகிர்ந்திருக்கிறார்.
அதில், ``இது அம்மாவின் தட்டு. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இதில்தான் சாப்பிட்டுவந்தார். இது ஒரு சிறிய தட்டு. இந்தத் தட்டை நானும், என் அண்ணன் பொண்ணும் மட்டுமே பயன்படுத்த அம்மா அனுமதிப்பார். எங்களைத் தவிர வேறு யாரையும் இந்தத் தட்டைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டார். இந்தத் தட்டு நான் 7-ம் வகுப்பு படித்தபோது அதாவது 1999-ம் ஆண்டு நான் வாங்கிய பரிசு. அதை நான் இப்போதுதான் என் சகோதரி மூலம் அறிந்துகொண்டேன்.
என் அம்மா இந்த 24 வருடங்களும் நான் பரிசாக வாங்கிய இந்தத் தட்டில்தான் உணவு சாப்பிட்டிருக்கிறார். ஆனால் இதை என்னிடம் அவர் சொன்னதே இல்லை. மிஸ் யூ மா" எனப் பதிவிட்டிருக்கிறார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகப் பரவிவருகிறது. இந்தப் பதிவுக்குப் பலர் தங்கள் கருத்துகளையும் பதிவிட்டுவருகின்றனர்.
இந்த நிலையில், அவருடைய ட்வீட்டைக் குறிப்பிட்டு, மனிஷிதா எனும் பெண் தன் ட்விட்டர் பதிவில், "இது எனக்கு ஒரு சம்பவத்தை நினைவூட்டுகிறது. என் தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவருடைய அலமாரியில் சில ஆவணங்களைத் தேடிக்கொண்டிருந்தோம். அப்போது, அவருடைய டைரி கிடைத்தது. அதில் என்னுடைய, என் சகோதரியின் கலை, நடனம், ஒலிம்பியாட் போன்ற போட்டிகளில் பெற்ற சான்றிதழ்களைக் கண்டேன். இதற்கு முன்பு எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாமல் அழுதுகொண்டிருந்தேன். இதைப் பற்றி அவர் யாரிடமும் சொன்னதில்லை" எனப் பதிவிட்டிருக்கிறார்.