Published:Updated:

`20 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த மகன்; ஆனந்தக் கண்ணீரில் தாய்'- கடலூர் அருகே நெகிழ்ச்சி!

இருபது ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகனைத் தாய் கண்டுபிடித்து, தன்னுடன் அழைத்துச்சென்ற சம்பவம் பெரும் நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.


தாயுடன் மணிகண்டன்
தாயுடன் மணிகண்டன்

பெரம்பலூர் மாவட்டம் திருவாலந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரா. இவரின் கணவர், பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு 6 வயது மகன் மணிகண்டனுடன் இந்திரா வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது அவர் வழி தவறிச் சென்றுவிட்டார். மகனைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர், மகளுடன் பெங்களூருக்கு கட்டட வேலைக்குச் சென்றுவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஊர் திரும்பிய இந்திரா, மகளுக்கு திருமணம் செய்துவைத்தார். தனிமையில் வசித்துவந்த இந்திரா, எப்போதும் இளம் வயதில் காணமால்போன தன் மகன் மணிகண்டன் நினைவுடனே இருந்துள்ளார்.

Vikatan

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் தொழுதூரில் கட்டட வேலை செய்துகொண்டிருந்தபோது, தன் கணவரின் சாயலில் இருந்த இளைஞர் ஒருவர், தன்னுடன் வேலை செய்வதைக் கண்டு ஆச்சர்யமடைந்தார். சிறுவயதில் காணாமல்போன தனது மகனாக இருக்குமோ என விசாரித்துள்ளார். அவர், தனது பெயர் இம்ரான் எனவும், தந்தை அபியுல்லாவுடன் ராமநத்ததில் வசிப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் இந்திராவோ, இவன் தன் மகன்தான் என நம்பிய நிலையில், இதுகுறித்து ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, இரு தரப்பினரையும் அழைத்து விசாணை நடத்தியுள்ளார்.

இதில், பல ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரத்தில் சுற்றித் திரிந்த சிறுவனை அபியுல்லா தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, தனது மகனைப்போல வளர்த்து வந்துள்ளார். மேலும், இந்திரா கூறிய அங்க அடையாளங்களை வைத்து, வாலிபரைப் பரிசோதித்த போலீஸார், அவர் மணிகண்டன் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, மணிகண்டன் சம்மதத்துடன் அவரை தாய் இந்திராவுடன் அனுப்பிவைத்தனர்.


தாயுடன் மணிகண்டன்
தாயுடன் மணிகண்டன்

தன் மகன் இருக்கிறானா இல்லையா எனத் தெரியாத நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த மகன் கிடைத்ததில் இந்திரா மனம் முழுவதும் மகிழ்ச்சியுடன் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். மணிகண்டனைப் பிரிந்து செல்வதைத் தாங்க முடியாமல் அபியுல்லா குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.