Published:Updated:

`சொத்தை அபகரித்து நடுத்தெருவில் விட்ட மகன்!'- தாய்க்கு நீதியைப் பெற்றுத்தந்த புதுக்கோட்டை ஆட்சியர்

சொத்தை மீட்ட மகிழ்ச்சியில் காளியம்மாள்
சொத்தை மீட்ட மகிழ்ச்சியில் காளியம்மாள்

நாம எதையும் கொண்டுபோகப்போறதில்லை. எனக்கு அப்புறம் பிள்ளைகளுக்குத்தான் சொத்து போகப்போகுது. ஆனா, நான் பெத்த மகனே என்னை ஏமாத்துவான்னு நெனச்சுக் கூட பார்க்கலை.

புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 5-ம் வீதியைச் சேர்ந்தவர்  காளியம்மாள்(71). இவரின் கணவர் சாத்தையா 40 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போகவே, 3 பெண் பிள்ளைகள், 2 ஆண் பிள்ளைகள் என 5 பேரையும் காளியம்மாள் தனி ஆளாக வளர்த்துள்ளார். 3 மகள்களையும் நல்ல இடத்தில் திருமணமும் முடித்து வைத்துவிட்டார். அதன்பிறகு தன் இரண்டு மகன்களுடன் கணவர் தனக்காக விட்டுச் சென்ற சாந்தநாதபுரத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம்
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம்

சாந்தநாதபுரத்தில் இவர்கள் வசித்த வீடு மற்றும் இடம் சுமார் ரூ.2 கோடி மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூத்த மகன் இறந்துவிட்டார். இந்த நிலையில்தான் இளைய மகன் தியாகராஜன், காளியம்மாளிடம் தனக்குத் தொழில் செய்வதற்கு வங்கியில் கடன் வாங்க வேண்டும் என்று கூறி ஏமாற்றி, சொத்தை தன் பெயருக்கு மாற்றி எழுதிவிட்டார். அதன்பின்பு தியாகராஜன் காளியம்மாளை விரட்டி அடித்ததாகக் கூறப்படுகிறது. அவர் சில நாள்கள் மகள்கள் வீட்டிலும், பல நாள்கள் கோயில்களிலும் குடியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி, கடந்த மாதம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். உடனே,  இதை விசாரித்த மாவட்ட ஆட்சியர் மூதாட்டியின் வேதனையைப் புரிந்துகொண்டு, இதுபற்றி விசாரணை நடத்த மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பாலதாண்டாயுதபாணிக்கு உத்தரவிட்டார். விசாரணையில், காளியம்மாளின் சொத்தை அவரின் மகன் தியாகராஜன் ஏமாற்றி எழுதி வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டத்தின்படி தியாகராஜன் பெயரில் எழுதப்பட்ட சொத்துப் பத்திரத்தை ரத்து செய்து வருவாய்த் துறையினர் மீண்டும் அதை காளியம்மாள் பெயருக்கே மாற்றம் செய்தனர்.

சொத்தை மீட்டுக்கொடுத்த அதிகாரிகள்
சொத்தை மீட்டுக்கொடுத்த அதிகாரிகள்

இதையடுத்து, பாதிக்கப்பட்ட காளியம்மாளை வரவழைத்த மாவட்ட ஆட்சியர், காளியம்மாள் பெயரில் மாற்றப்பட்ட பத்திரத்தைக் கையில் கொடுத்து அவரை நெகிழ்ச்சியடையச் செய்தார். உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதுபற்றி மூதாட்டி காளியம்மாளிடம் பேசினோம், ``இளைய மகன் நல்லா பாத்துக்குவான்னுதான் நெனச்சு இருந்தேன். சாகும்போது நாம எதையும் கொண்டுபோகப்போறதில்லை. எனக்கு அப்புறம் பிள்ளைகளுக்குத்தான் சொத்து போகப்போகுது.

ஆனா, நான் பெத்த மகனே என்னை ஏமாத்துவான்னு நெனச்சுக் கூட பார்க்கலை. நம்ப வச்சு கழுத்தை அறுத்திட்டான். என்னை விரட்டுனது பத்திக்கூட நான் கவலைப்படலை. மூத்த பையனோட மனைவியையும் பிள்ளைகளையும் நடுத்தெருவுல விட்டதைத்தான் என்னால தாங்கிக்க முடியல. நான் கும்பிட்ட தெய்வம் கைவிடலை. நீதி கிடைச்சிருச்சு. எனக்கு அப்புறம் பிள்ளைகள் எல்லாருக்கும் சொத்து சரிசமமாகப் போய் சேரணும் அதுதான் என்னோட ஆசை" என்றார்.

சொத்தை மீட்ட மகிழ்ச்சியில் காளியம்மாள்
சொத்தை மீட்ட மகிழ்ச்சியில் காளியம்மாள்

மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, ``இதுமாதிரி ஒரு சில பிள்ளைகள் கஷ்டப்பட்டு வளர்த்த தாய், தந்தையரைச் சொத்துக்கு ஆசைப்பட்டு நடுத்தெருவில் விட்டுவிடுறாங்க. இதுபோன்று சொத்தை ஏமாற்றிப் பெற்றோர்களை நடுத்தெருவில் விடுபவர்களுக்கு இந்த நிகழ்வு ஒரு பாடமாக அமையும். மாவட்டத்தில் இதுபோன்று முதியவர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், எந்த நேரத்திலும் புகார் கொடுக்கலாம். மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு