Published:Updated:

`அப்பாவின் ஆசி வேண்டும்!' - இறந்துபோன தந்தையின் உடல் முன் திருமணம் செய்துகொண்ட மகன்

ஜெ.முருகன்
தே.சிலம்பரசன்

உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்த தந்தையின் சடலம் முன், மகன் திருமணம் செய்துகொண்டது, விழுப்புரம் மாவட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தந்தை சடலத்தின் முன் திருமணம்
தந்தை சடலத்தின் முன் திருமணம் ( தே.சிலம்பரசன் )

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தையடுத்த சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த தெய்வமணி - செல்வி தம்பதியரின் மகன் அலெக்சாண்டர், வயது 30. இவரும், மயிலத்தை அடுத்த கொணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் - அன்னபூரணி தம்பதியரின் மகள் ஜெகதீஸ்வரி (27) இருவரும் மயிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றனர்.

ஜெகதீஸ்வரி கழுத்தில் தாலி கட்டும் அலெக்சாண்டர்
ஜெகதீஸ்வரி கழுத்தில் தாலி கட்டும் அலெக்சாண்டர்
தே.சிலம்பரசன்

ஒரே இடத்தில் பணியாற்றும்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக இருவரும் காதலித்துவந்துள்ளனர். இவர்களின் காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், செப்டம்பர் 2-ம் தேதி மயிலம் முருகன் கோயிலில் திருமணமும், அன்று மாலையே வரவேற்பு நிகழ்ச்சியும் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அழைப்பிதழ்கள், சமையல்காரர்கள், மேடை அலங்காரம் என திருமண வேலைகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த மணமகனின் தந்தை தெய்வமணி, நேற்று காலை திடீரென உயிரிழந்தார். திருமணத்திற்கு ஒரு மாதமே இருந்த நிலையில், தெய்வமணி உயிரிழந்ததால், குடும்பமே அதிர்ச்சியிலும் சோகத்திலும் மூழ்கியது. அதேபோல தனது திருமணத்தை உடனிருந்து நடத்தி ஆசீர்வதிக்காமல் தந்தை இறந்துவிட்டாரே என்ற சோகத்தில் இருந்தார், மணமகன் அலெக்சாண்டர்.

சடலமாக தெய்வமணி
சடலமாக தெய்வமணி
தே.சிலம்பரசன்

ஒருகட்டத்தில், ”அப்பாவின் ஆசி இல்லாமல் என்னால் திருமணம் செய்துகொள்ள முடியாது. அவர் முன்னிலையில்தான் எங்கள் திருமணம் நடைபெற வேண்டும். அவரது உடலின்முன் இப்போதே நாங்கள் திருமணம் செய்துகொள்கிறோம்” என்று கூற, உறவினர்கள் திகைத்துநின்றனர்.

ஆனாலும் தந்தைமீது மகனுக்கு இருந்த பாசத்தைப் புரிந்துகொண்ட உறவினர்கள், கொணமங்கலத்தில் உள்ள ஜெகதீஸ்வரி மற்றும் அவரது பெற்றோரிடம் நடந்ததை எடுத்துக்கூறி, திருமணத்துக்கு சம்மதம் பெற்றனர். அதையடுத்து, இறந்துபோன தெய்வமணிக்கு பட்டுச் சட்டை, பட்டு வேட்டி உடுத்தியதோடு, அவரது கையில் தாலியை வைத்து ஆசீர்வாதம் பெற்று, சடலத்தின் முன் கண்ணீரோடு ஜெகதீஸ்வரியின் கழுத்தில் தாலி கட்டினார் மணமகன் அலெக்சாண்டர். உறவினர்கள் அனைவரும் மணமக்களை கண்ணீரால் ஆசீர்வதித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருமணம்
திருமணம்
தே.சிலம்பரசன்

தாலி கட்டும்போது, மணமகன் அலெக்சாண்டர் கதறி அழுதது அங்கு கூடியிருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதன்பின்னர், தெய்வமணியின் கையில் அரிசி வைத்து மாப்பிள்ளை பெண்ணுக்கு ஆசீர்வாதம் செய்தனர்.