நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகில் உள்ள ஓவேலி ஆரூற்றுப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் 16 வயதான கோகுல். அருகில் உள்ள பாரதி நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இவர் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். தற்போது தேர்வு நடைபெற்று வருவதால் அருகில் இருக்கும் பார்வுட் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதி வருகிறார். நேற்று அறிவியல் தேர்வு என்பதால் அதிகாலையில் எழுந்து தேர்வுக்குத் தயாராகி வந்திருக்கிறார் மாணவன் கோகுல்.

இவரது தந்தை 43 வயதான ஆனந்த் அதே பகுதியில் சிறிய டீக்கடை ஒன்றை நடத்தி வந்தார். வழக்கம் போல டீக்கடையைத் திறப்பதற்காக நேற்று காலை 6.30 மணி வாக்கில் கிளம்பிச் சென்றிருக்கிறார். கோகுலும் தேர்வுக்குக் கிளம்பத் தயாராகியிருக்கிறார். டீக்கடைக்குச் சென்றுகொண்டிருந்த கோகுலின் தந்தை காட்டுயானை தாக்கி உயிரிழந்து கிடப்பதாகவும், வந்து பார்க்கும்படியும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி செய்தியை அழுகையும் கண்ணீருமாக வீட்டிற்கு வந்து தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதைக் கேட்டு இடிந்துபோன கோகுல் மற்றும் குடும்பத்தினர் பதறியடித்துச் சென்றுப் பார்த்துள்ளனர். சற்றுமுன் வீட்டிலிருந்து கிளம்பியவர் சடலமாகக் கிடக்கும் கொடூரக் காட்சியைக் கண்டு மொத்தக் குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். ஊர் மக்கள் வந்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கோகுலை தேர்வு எழுதச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். மாணவன் கோகுல் மறுத்திருக்கிறார். ஆனால் தாய் மற்றும் சகோதரி கேட்டுக்கொள்ள, தேர்வை எழுதுவிட்டு வந்திருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய ஆரூற்றுப்பாறை கிராம மக்கள், "புதர் மறைவில் மறைந்திருந்த காட்டுயானை ஒன்று திடீரென ஆனந்தைத் தாக்கியிருக்கிறது. இதில் படுகாயமடைந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கூச்சலிட்டு யானையை விரட்டி ஆனந்தின் உடலை மீட்டோம். தகவல் அறிந்த நியூஹோப் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆனந்தின் உடலை கூறாய்வுக்கு அனுப்ப முயன்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
யானையை காட்டுக்குள் விரட்டும்படி போராட்டத்தில் ஈடுபட்டோம். கும்கி யானைகள் மூலம் விரட்டவும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால், போராட்டத்தைக் கைவிட்டோம். ஆனந்தின் மனைவி சத்தியவாணி மகள்கள் நிவேதா, மற்றும் ஐஸ்வர்யா இறுதிச் சடங்கு ஏற்பாடுகளைப் பார்த்துக் கொள்ளட்டும், மகன் கோகுல் பொதுத் தேர்வை எழுதிவிட்டு வரட்டும் என ஊக்கம் அளித்து தேர்வுக்கு அனுப்பி வைத்தோம்.

அதன்படியே கண்ணீர் மல்கச் சென்று தேர்வை எழுதுவிட்டு வந்து தந்தைக்கு இறுதிச் சடங்கை செய்தார் கோகுல். இதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிகளான பிரவீனா, ரக்ஷிதா ஆகிய இருவரும், வீட்டின் அருகில் காட்டுயானை ஒன்று உலவியதால் தேர்வுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் தேர்வு எழுதச் சிறப்பு ஏற்பாட்டை கல்வித்துறை எடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம்" என்றனர்.