Published:Updated:

`வழக்கு போட்டோம்; பதறி அடித்துக்கொண்டு வந்தனர்!’ - தாயைக் கவனிக்காத மகன்களுக்கு செக் வைத்த போலீஸ்

என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை அதனால் எங்க அம்மாவைப் பார்க்கமுடியாது என்றிருக்கிறார். மற்றொரு மகனிடம் பேசிய போது, "என்னைக் கேட்காமல் எங்க அண்ணனுக்குச் சொத்தை எழுதிக் கொடுத்துவிட்டார். அத்தோடு எங்க அம்மாவைப் பராமரிக்க போதிய வருமானம் இல்லை" என்று சொல்லியிருக்கிறார்.

சுலோச்சனா
சுலோச்சனா

எட்டுப் பிள்ளைகளைப் பெற்ற தாயை இரவு முழுவதும் கொசுக் கடியில் கிடத்தியுள்ளனர். அவர் கிடந்த கிடப்பைப் பார்த்து அரியலூர் போலீஸார் உதவிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த மகன்களுக்கு போலீஸார் வைத்த செக்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் போலீஸார்
மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் போலீஸார்

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள செங்குந்த புரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டம்மாள் என்ற மூதாட்டி மகன்களால் ரோட்டில் தூக்கி வீசப்பட்டு இரவு முழுவதும் பனியில் கிடந்தார். பொதுமக்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்து பின்பு போலீஸார் தலையிட்டு பிரச்னையை முடித்தார்கள். இந்தச் சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் அதே போன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. கவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுலோச்சனா. இவரது கணவர் ஜெகநாதன்.

பத்து வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இவருக்கு ஐந்து மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். மகன்கள் ரங்கராஜன், மனோகர், கஜேந்திரன் ஆகியோர் திருப்பூரிலும், இளங்கோவன், வீரராகவன் ஆகியோர் ஆண்டிமடத்திலும் வசித்து வருகின்றனர்.

ஆறுதல் கூறிய டி.எஸ்.பி
ஆறுதல் கூறிய டி.எஸ்.பி

மகள்களுக்குத் திருமணமாகி கவரப்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாகத் திருப்பூரில் மகன்களின் பாதுகாப்பிலிருந்த மூதாட்டி சுலோச்சனா தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு வீட்டில் விட்டுச் சென்றுவிட்டனர். வயது முதிர்ச்சி காரணமாக தன் மகன் மற்றும் மகள் வீட்டிற்குச் செல்ல வழி தெரியாமல் சுமார் மூன்று கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஜெயங்கொண்டம் - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் நள்ளிரவில் சுற்றித் திரிந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார்.

அவ்வழியாகச் சென்ற சிலர் சுலோச்சனாவை மீட்டு ஆண்டிமடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவரை அவரது மகனான இளங்கோவனிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இளங்கோவனின் மனைவிக்கும் உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும், தாயை என்னால் பார்க்கமுடியாது என்றிருக்கிறார். மற்றொரு மகனிடம் பேசிய போது, "என்னைக் கேட்காமல் எங்க அண்ணனுக்குச் சொத்தை எழுதிக் கொடுத்துவிட்டார். அத்தோடு எங்க அம்மாவைப் பராமரிக்க போதிய வருமானம் இல்லை" என்று சொல்லியிருக்கிறார். சுலோச்சனா உடலில் ஏற்பட்ட காயங்களுக்குச் சிகிச்சை அளிக்காததால் காயம் அழுகிய நிலையில் கவரபாளையம் கிராம பஸ் ஸ்டாப்பில் அநாதையாகக் கிடந்துள்ளார்.

`வழக்கு போட்டோம்; பதறி அடித்துக்கொண்டு வந்தனர்!’ - தாயைக் கவனிக்காத மகன்களுக்கு செக் வைத்த போலீஸ்

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அரியலூர் எஸ்பி-க்குத் தகவல் தெரிவித்தனர். அவரின் உத்தரவுப்படி ஆண்டிமடம் போலீஸார் 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு மருத்துவமனைக்கு வந்த டி.எஸ்.பி மோகன்தாஸ் நேரில் வந்து மூதாட்டி சுலோச்சனாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்ததோடு அந்த அம்மாவிற்குப் பழங்கள் மற்றும் துணிகளை வாங்கிக்கொடுத்தார்.

என்ன நடந்தது என்று டி.எஸ்.பி மோகன்தாஸிடம் பேசினோம். ``இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது. தாயைத் தவிக்கவிட்ட காரணத்தால் ஐந்து மகன்கள் மீது வழக்கு போட்டோம். அவர்கள் பதறி அடித்துக்கொண்டு அம்மாவைத் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பார்த்து வருகிறார்கள்.

டி.எஸ்.பி மோகன் தாஸ்
டி.எஸ்.பி மோகன் தாஸ்

அத்தோடு இன்று அல்லது நாளைக்கு தாசில்தார் தலையில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருக்கிறோம், அம்மாவைப் பராமரிக்க ஏற்றுக்கொண்டால் விட்டுவிடுவோம், இல்லையென்றால் அவர்கள் மீது வழக்கு போட உள்ளோம். இதுபோன்று தாயை மதிக்காதவர்கள் யாரேனும் தவறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் ஆதங்கத்துடன்.