Published:Updated:

`தமிழகத்தில் விரைவில் ரோபோ மூலம் துப்பரவுப் பணிகள்!' - ஜெகதீஷ் ஹிர்மாணி

`தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகளில் ரோபோ மூலம் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படும்’ - மத்தியத் துப்புரவுப் பணியாளர்கள் நலத் தேசிய ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மாணி.

‘ஜெகதீஷ் ஹிர்மாணி’ தலைமையில், நடந்த ஆய்வுக் கூட்டம்.
‘ஜெகதீஷ் ஹிர்மாணி’ தலைமையில், நடந்த ஆய்வுக் கூட்டம். ( கா.முரளி )

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மத்தியத் துப்புரவுப் பணியாளர்கள் நலத் தேசிய ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மாணி தலைமையில், துப்புரவுப் பணியாளர்களுக்கான மறுவாழ்வு மற்றும் அரசுத் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தேசிய ஆணையத்தின் உறுப்பினர், ஜெகதீஷ் ஹிர்மாணி, ``2013 -ம் ஆண்டிலிருந்து துப்புரவுப் பணியாளர்களுக்கான மறுவாழ்வு சட்டம், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்டம்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டுகளில் பல்வேறு நிலைகளில், 25 துப்புரவுப் பணியாளர்கள் பணியின்போது உயிரிழந்துள்ளார்கள். இந்த உயிரிழப்புகளைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

மாவட்ட ஆட்சியர் அரங்கில் ‘ஜெகதீஷ் ஹிர்மாணி’ தலைமையில், நடந்த ஆய்வுக் கூட்டம்.
மாவட்ட ஆட்சியர் அரங்கில் ‘ஜெகதீஷ் ஹிர்மாணி’ தலைமையில், நடந்த ஆய்வுக் கூட்டம்.

தற்போது, தமிழகத்தில் 6 மாவட்டங்களில் எங்கள் ஆணையத்தின் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 1,500 பணியாளர்களின் மறுவாழ்வுக்கு தலா ரூ.40,000 வீதம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கைகளால் சாக்கடையை அள்ளும் முறையிலிருந்து, எந்திரங்கள் மூலம் உறிஞ்சும் முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில், 4 பகுதிகளில் சோதனை அடிப்படையில் ரோபோ மூலம் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் சோதனை முடிவின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகளில் ரோபோ மூலம் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், துப்புரவுப் பணியாளர்களின் சம்பளம், சுகாதாரம், மருத்துவம், காப்பீடு, பாதுகாப்பு உபகரணங்கள், வீடுகள், கல்வி ஆகியவை குறித்து விரிவான ஆய்வுக் கூட்டம் நகராட்சி, பேரூராட்சி, தாட்கோ உட்பட அனைத்துத் துறை அலுவலர்களுடன் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், மத்திய அரசின் துப்புரவுப் பணியாளர்கள் நல தேசிய ஆணையம் மூலம் துப்புரவுப் பணியாளர்களின் வளர்ச்சிக்கு ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், துப்புரவுப் பணியாளர்கள் நல தேசிய ஆணையத்தின் நடைமுறைகளைச் சரியாக நடைமுறைப்படுத்தாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் துப்புரவுப் பணிகளில் 34,000 பேர் அவுட்சோர்சிங் முறையில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் பணியை நிரந்தரமாக்கக் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக அரசிடம் இப்பணியாளர்களை நிரந்தரமாக்குவதற்கு என்னுடைய பரிந்துரையை அளித்துள்ளேன். தமிழக அரசும் நல்ல பதில் தருவதாகக் கூறியுள்ளார்கள்.

மாவட்ட ஆட்சியர் அரங்கில் ‘ஜெகதீஷ் ஹிர்மாணி’ தலைமையில், நடந்த ஆய்வுக் கூட்டம்!
மாவட்ட ஆட்சியர் அரங்கில் ‘ஜெகதீஷ் ஹிர்மாணி’ தலைமையில், நடந்த ஆய்வுக் கூட்டம்!

இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள துப்புரவுப் பணியாளர்களும் படிப்படியாக நிரந்தரம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில், என்னுடைய பரிந்துரையை ஏற்று முதல் கட்டமாக 13,000 துப்புரவுப் பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2019-20-ம் ஆண்டு இரண்டாம் கட்டமாக 19,000 பணியாளர்கள் நிரந்தரம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் துப்புரவுப் பணியாளர்கள் நல தேசிய ஆணையத்தின் செயல்பாடுகளைக் கவனிப்பதற்காக, பொறுப்பு அலுவலர் ஒருவர் நியமிக்கப்படுவார். மேலும், தற்போது மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டங்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.