Published:Updated:

`முன்கூட்டியே தொடங்கிய குற்றால சீசன்..!' - கொரோனா அச்சத்தால் தவிக்கும் சுற்றுலாவாசிகள்

குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து
குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால் பல்வேறு மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்க்கிறது. மழையின் தாக்கத்தால் நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுவதுடன் இதமான காற்று வீசுகிறது. 

தென் மேற்குப் பருவமழை இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி கேரளாவில் தொடங்கியது. அதனால்  கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கோழிக்கோடு, கொல்லம், திருவனந்தபுரம் எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

`கேரளா, கர்நாடகாவுக்கு மழை; ஒடிசாவின் 12 மாவட்டங்களுக்கு அலர்ட்’ - வலுப்பெறும் ஆம்பன் புயல்

கோழிக்கோடு மாவட்டத்தில் நேற்று (1-ம் தேதி) 15 செ.மீ மழை பதிவானது. அங்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் கோழிக்கோடு மாவட்டத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து கேரள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம், காசர்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 40 கி.மீ வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் ஏழு மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

வேகமாக வீசும் காற்றுடன் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
வானிலை ஆய்வு மையம்

தொடர்ந்து மழை பெய்யும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். கேரளாவின் பல்வேறு நகரங்களிலும் மழையால் நீர் நிலைகள் நிரம்பியதால் அணைகளிலிருந்து அதிகமாகத் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் தண்ணீர் கொட்டத் தொடங்கியிருக்கிறது.

சாரல் மழையின் பின்னணியில் குற்றாலம் அருவி
சாரல் மழையின் பின்னணியில் குற்றாலம் அருவி

குற்றாலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இதமான காற்றுடன் சாரல் பெய்வதால் இந்த ஆண்டு வழக்கத்தைவிடவும் முன்கூட்டியே சீசன் தொடங்கி விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், கொரோனா அச்சம் காரணமாக வெளி மாவட்டங்களிலிருந்து வருவதற்குப் போக்குவரத்து வசதி குறைவாகவே இருப்பதால் அருவிப் பகுதிகளில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது. 

கொரோனா பாதிப்பு எப்போது விலகும் என்பது தெரியாததால், சீசன் சமயத்தில் அருவிக்கு அருகில் தற்காலிகக் கடைகளை அமைக்கும் கடைக்காரர்கள், `இந்த ஆண்டு கடை போடுவதா.. வேண்டாமா?' என்கிற குழப்பத்தில் இருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு