Published:Updated:

ஸ்பெய்ன் டு கோவை... கல்லூரி மாணவிக்கு கொரோனா பாதிப்பு வந்தது எப்படி?

கொரோனா
கொரோனா

ஸ்பெய்ன் நாட்டில் இருந்து வந்த கோவைப் பெண்ணுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது.

கோவையைச் சேர்ந்த 25 வயது பெண், உயர் கல்விக்காக ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் வெளிநாட்டவர்கள் ஸ்பெய்ன் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

கோவை
கோவை

இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் கடந்த 12-ம் தேதி டெல்லி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிறகு பெங்களூர் சென்ற அவர், கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கோவை வந்துள்ளார். கொரோனா அறிகுறி ஏதும் இல்லாததால், கால்டாக்ஸி மூலம் வீட்டுக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்தப் பெண்ணை வீட்டில் இருந்தபடியே தனிமையில் இருக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அந்தப் பெண்ணும் தனது வீட்டில் வழக்கம் போல இருந்துள்ளார். இதனிடையே, அந்தப் பெண்ணின் நண்பர் ஒருவருக்கு பிரேசிலில் கொரோனா பாசிட்டிவ் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனை
கோவை அரசு மருத்துவமனை

இதில் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு தனது போக்குவரத்து தகவல்களைத் தெரிவித்ததையடுத்து அனுமதிக்கப்பட்டார்.

பிறகு, அவர் சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், கடந்த 19-ம் தேதி அந்தப் பெண்ணுக்கு கொரோனா பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இ.எஸ்.ஐ மருத்துவமனை
இ.எஸ்.ஐ மருத்துவமனை

அந்தச் சோதனையில் கொரோனா பாசிட்டிவ் என்று ரிப்போர்ட் வந்துள்ளது. இதைத்தான், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பெண்ணுக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து, அவரின் தந்தை, தங்கை மற்றும் அவர் வந்த கால்டாக்ஸி டிரைவர் ஆகிய மூன்று பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அவர் சம்பந்தப்பட்டவர்களை ட்ராக் செய்யும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா
கொரோனா

அவர் ஸ்பெய்னில் எம்.பி.ஏ படித்துவந்துள்ளார். அந்தப் பெண் மொத்தமாக ஆறு மாதங்கள் ஸ்பெயினில் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பெண்ணுக்கு தனி வார்டில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு