ஆட்டிசம், மூளை முடக்குவாதம் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுடன் கூடிய சிறப்புக் குழந்தைகளின் மறுவாழ்வுக்கான பணிகளைச் செய்துவருகிறது, சென்னையிலுள்ள `ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு' அமைப்பு. திருவள்ளூர் மாவட்டத்தில் ஆறு ஒன்றியங்களில் இந்த அமைப்பின் மறுவாழ்வு மையங்கள் செயல்படுகின்றன. அந்த மையங்களால் பயனடையும் சிறப்புக் குழந்தைகளின் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்த, ஆடுகள் வழங்கும் முன்னெடுப்பைத் தொடங்கியிருக்கிறது அந்த அமைப்பு. முதல்கட்டமாக ஏழு குடும்பங்களுக்கு தலா இரண்டு ஆடுகள் வீதம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த முன்னெடுப்பு குறித்து அந்த அமைப்பின் திருவள்ளூர் மாவட்டத்துக்கான சமூகம் சார்ந்த மறுவாழ்வு திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜீவாவிடம் பேசினோம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``சிறப்புக் குழந்தைகளுக்கு இருக்கும் குறைபாட்டை எவ்வளவு சீக்கிரமாகக் கண்டறிந்து சிகிச்சையளிக்கிறோமோ, அந்த அளவுக்கு அவர்களின் பாதிப்பின் தன்மையைக் குறைத்து முன்னேற்றம் ஏற்பட செய்யலாம். கிராமப்புற மக்கள் பெரும்பாலானோர் தங்களின் ஆரோக்கியத்துக்கான தேவைகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளையே நாடி வருவார்கள். எனவே, திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுபோன்ற மையங்களில் அரசின் ஒத்துழைப்புடன் எங்களுடைய சிகிச்சை மையங்களை நடத்திவருகிறோம்.
சிறப்புக் குழந்தைகளின் அம்மாக்கள், எந்நேரமும் கூடவே இருந்து குழந்தையைக் கவனித்துக்கொள்வார்கள். கூலி வேலைக்குச் செல்லும் அந்தக் குழந்தைகளின் தந்தையின் வருமானமும் குறைவாகவே இருக்கும். இதனால், குடும்பத்தில் பொருளாதார ரீதியான சிக்கல்கள் உருவாகும்பட்சத்தில், குழந்தையைச் சிகிச்சைக்கு அழைத்து வருவதிலும் தாய்மார்கள் சிரமங்களை எதிர்கொள்வார்கள். எனவே, முதல்கட்டமாக ஏழு குடும்பங்களைத் தேர்வு செய்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா இரண்டு ஆடுகளை வழங்கியிருக்கிறோம்.

குழந்தைக்கான தெரபி, படிப்பு உள்ளிட்ட தேவைகளைக் கவனித்துக்கொண்டு, கிடைக்கும் நேரத்தில் ஆடுகளை வளர்க்கத் தாய்மார்களை ஊக்கப்படுத்தியிருக்கிறோம். இந்த இரண்டு ஆடுகளிலிருந்து, அடுத்தடுத்து குட்டிகளைப் பெருக்கி, ஆடுகள் வளர்ப்பினால் கூடுதல் வருமானம் ஈட்டி, குடும்ப பொருளாதார நிலையை அவர்கள் ஓரளவுக்கு மேம்படுத்திக்கொள்ளலாம். வருங்காலத்தில் பல குடும்பங்களுக்கும் ஆடுகள் வழங்கும் திட்டத்தை நீட்டிப்பு செய்யத் திட்டமிட்டுள்ளோம். இது சிறிய உதவிதான் என்றாலும், இதன் மூலம் கிடைக்கும் பலன் அந்தக் குடும்பங்களில் பெரிய மாற்றத்தை உருவாக்கும்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.