Published:Updated:

`அரசே கொள்முதல் செய்து விற்கிறது!’- நீலகிரி பழங்குடிகளை நெகிழவைத்த `நீல் கஃபே' காபித்தூள் விற்பனை

காபி தூள்
காபி தூள்

நீலகிரியில் பழங்குடியினர் உற்பத்தி செய்த `நீல் கஃபே' (NEEL CAFE) என்ற சிக்கரி கலக்காத காபி தூள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அனைத்து பூங்காக்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில் பணியர், இருளர், குறும்பர், காட்டு நாயக்கர், கோத்தர், தோடர் என 6 வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். Upper Nilgiri எனப்படும் நீலகிரி மலை மேலிடப்பகுதிகளில் தோடரும் கோத்தரும் வாழ்ந்து வருகின்றனர். மற்ற பழங்குடிகள் மித வெப்ப மண்டலப் பகுதிகளான சரிவுப் பகுதிகளில் வாழ்கின்றனர். வனத்தையும் வனம் சார்ந்த பகுதிகளையும் இன்றளவும் நம்பியுள்ள மக்களின் வாழ்வில் போதிய மோம்பாடுகள் ஏற்படவில்லை. அதேசமயம் இவர்களிடமிருந்து வன சேகரிப்பு பொருள்களை சில தனியார் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு வாங்கி கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். இதைத் தடுக்கவும் பழங்குடியினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

காபி தூள்
காபி தூள்

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் பழங்குடிகளில் பலர் ஆங்கிலேயர்களால் அறிமுகம் செய்யப்பட்ட காபி தூள் உற்பத்தியை நேர்த்தியான முறையில் செய்துவருகின்றனர். தனிச் சுவையைக் கொண்ட இந்தக் காபி தூளை சந்தைப்படுத்த வழி தெரியாமல் இருந்தனர். இந்தநிலையில், இவர்களுக்குப் பயன்படும் வகையில் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை, பழங்குடியினர் நலத்துறை ஆகியவை இணைந்து பழங்குடிகள் உற்பத்தி செய்யும் காபி தூளை சந்தைப்படுத்துவதற்காக அரசே உரிய விலை கொடுத்து வாங்கி `நீல் கஃபே' என்ற பெயரில் விற்பனையில் களமிறங்கியுள்ளது. இதன்மூலம் பழங்குடிகளுக்கும் நுகர்வோர்களுக்கும் பயன் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கைவிடப்படும் குழந்தைகளுக்காக புதிய திட்டம்! - அசத்தும் நீலகிரி

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைப்படி தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தோட்டக்கலைத்துறை ஆகியவை இணைந்து பழங்குடியின மக்களின் நலனுக்காக அவர்கள் வசிக்கும் இடத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி அப்பகுதியில் காபி சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த காபி கொட்டையை தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்தனர். இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் பழங்குடியினரிடம் இருந்து காபி பொடிகளை நல்ல விலைக்கு கொள்முதல் செய்து `நீல் கஃபே' (NEEL CAFE) என்ற பெயரில் நீலகிரி மாவட்டத்திலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காபி தூளை அறிமுகம் செய்து வைத்த ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா
காபி தூளை அறிமுகம் செய்து வைத்த ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

இதன், முதற்கட்டமாக பழங்குடியினர் உற்பத்தி செய்த நீல் கஃபே காபி தூளை ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிமுகம் செய்து வைத்தார். தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா மற்றும் இதர டான்ஹோடா விற்பனை நிலையங்களில் 200 கிராம் காபி தூள் ரூ.130-க்கு விற்பனை செய்யப்படும்” என்றார்.

இது குறித்து பழங்குடியின செயல்பாட்டாளர் வீரப்பன் கூறுகையில், ``இவர்கள் தயாரிக்கும் காபி சிக்கரி கலக்காதது. அதேசமயம் தனிச்சுவைமிக்கது. பழங்குடிகளிடம் இருந்து அரசே காபி தூளை கொள்முதல் செய்து விற்பனையை துவக்கியது நல்ல முயற்சி. இதன் மூலம் இவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். மேலும், பழங்குடிகளின் மற்ற உற்பத்தி பொருள்களையும் அரசு சந்தைப்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்" என்றார்.

பின் செல்ல