Published:Updated:

`58 குழந்தைகளுடன் தவித்த 1,186 பேர்!’ - காட்பாடி டு மேற்குவங்க பயணத்துக்கு உதவிய ஐ.ஏ.எஸ்-கள்

மேற்குவங்கம் புறப்பட்ட சிறப்பு ரயில்
மேற்குவங்கம் புறப்பட்ட சிறப்பு ரயில்

காட்பாடியிலிருந்து மேற்கு வங்கத்துக்குப் புறப்பட்ட நான்காவது சிறப்பு ரயிலில் 1,186 பேர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெறவந்து ஊரடங்கால் தவிப்புக்குள்ளான ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தவர் சிறப்பு ரயில்கள் மூலம் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருகிறார்கள். இதுவரை காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மட்டும் நான்கு சிறப்பு ரயில்கள் மூலம் 4,630 பேர் வெளிமாநிலங்களுக்குப் பயணம் செய்துள்ளனர்.

மேற்குவங்க அரசின் கடிதம்
மேற்குவங்க அரசின் கடிதம்

கடந்த 6-ம் தேதி இரவு ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு இயக்கப்பட்ட முதல் சிறப்பு ரயிலில் 1,140 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். 8-ம் தேதி அதே ஜார்க்கண்ட்டுக்குச் சென்ற இரண்டாவது சிறப்பு ரயில் மூலம் 1,142 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். 9-ம் தேதி இரவு பீகார் மாநிலத்துக்கு இயக்கப்பட்ட மூன்றாவது சிறப்பு ரயில் மூலம் அந்த மாநிலத்தைச் சேர்ந்த 1,162 பேர் பயணம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலத்துக்கு இன்று இயக்கப்பட்ட நான்காவது சிறப்பு ரயிலில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த 58 குழந்தைகள் உட்பட 1,186 பேர் சென்றனர். கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் அவர்களுக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில் மற்றும் உணவுப் பொட்டலங்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடுத்தகட்டமாக இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்
பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்

வேலூரிலிருந்து மேற்குவங்க நோயாளிகள் ஊர் திரும்புவதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்தவரும் மேற்குவங்க அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்தவருமான பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு ஆணையருமான ராஜேஷ் ஐ.ஏ.எஸ் ஆகிய இருவரும்தான். மேற்குவங்க அரசுடனான தொடர்பைப் பயன்படுத்தி, தமிழக அரசுக்கு உதவியாக இருந்தார், பாலச்சந்திரன். அதன் பிறகே, வேலூரிலிருந்து மேற்குவங்க நோயாளிகளை அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டன.

இதுதொடர்பாக, பாலச்சந்திரனிடம் பேசிய தமிழக சுற்றுலா மேம்பாட்டு ஆணையர் ராஜேஷ், ``வேலூரில் தங்கியுள்ள மேற்குவங்க நோயாளிகளை அழைத்துச்செல்ல இரண்டு ரயில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் செய்துவருகிறார்" என்று கூறி உதவியதற்காக நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு