Published:Updated:

"எல்லோருக்கும் நன்றி".. கோவை டு பீகார்.. மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பிய தொழிலாளிகள்!

கோவை ரயில்
கோவை ரயில்

கோவையில் இருந்து பீகார் மாநிலத்துக்கு இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக் காரணமாக, இந்தியாவில் கடந்த 45 நாள்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அனைத்துப் போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருப்பதால், புலம் பெயர்ந்த கூலித் தொழிலாளிகள் ஆங்காங்கே முடங்கிவிட்டனர். பணி இல்லாமல் பசியில் வாடிய அவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் உணவு வழங்கி வருகின்றனர்.

பீகார் தொழிலாளிகள்
பீகார் தொழிலாளிகள்

இதனிடையே, பீகார், உத்தரப்பிரதேசம், மேற்குவங்காளம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கோவையில் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக, அவர்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அதன்படி கோவையில் இருந்து இரண்டு சிறப்பு ரயில்கள் மூலம் 2,280 தொழிலாளர்கள் பீகார் மாநிலத்துக்கு அனுப்பப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. தொழிலாளிகளுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு, மாஸ்க், சானிடைசர், உணவு, தண்ணீர் போன்றவை வழங்கப்பட்டன. ஆனால், டெம்போ போன்ற சரக்கு வாகனங்களில், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் அவர்கள் ரயில் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

பீகார் தொழிலாளிகள்
பீகார் தொழிலாளிகள்

நேற்று இரவு ஒரு ரயில் கிளம்பிய நிலையில், இன்று காலை மற்றொரு ரயில் பீகார் மாநிலம் தானாப்பூர் ரயில் நிலையத்துக்குப் புறப்பட்டது. இரண்டு ரயில்களிலும் தலா 24 கோச்களுடன், தனிமனித இடைவெளியுடன் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சொந்த ஊர்களுக்குத் திரும்புவதால் அவர்கள் அனைவரது முகங்களிலும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது. இதுகுறித்து ஊருக்குத் திரும்பும் தொழிலாளி ஒருவர், “பீகார்தான் எனக்குச் சொந்த ஊர். கோயம்புத்தூர்ல ஒரு பேக்கரில வேலை செஞ்சுட்டு இருந்தேன். முதல்ல ஒரு வாரம் கடைகள் இருக்காதுனு சொன்னாங்க. அப்பறம் 15 நாள்னு சொன்னாங்க. இப்ப இருக்கற சூழ்நிலையப் பாக்கறப்ப எல்லாம் எப்ப சரியாகும்னே தெரியல.

பீகார் தொழிலாளிகள்
பீகார் தொழிலாளிகள்

எங்க சொந்த பந்தங்கள பாக்க முடியாதோனு பயந்துட்டோம். சரியான நேரத்துல அரசு எங்கள எல்லாம் ஊருக்கு அனுப்பி வைக்கறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க எல்லாருக்கும் நன்றி. எல்லாம் சரியானப்பறம் நாங்க திரும்பி வருவோம்” என்றார்.

இதுகுறித்து கோவை மாட்ட ஆட்சியர் இராசாமணி, “பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளிகள் கோவையில் பணியாற்றி வருகின்றனர். தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, அவர்களில் விருப்பம் உள்ளவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக, பீகார் மாநிலத்துக்கு இரண்டு ரயில்களில் 2,280 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். அதேபோல, உத்தரப்பிரதேசம், ஒடிசா மாநிலத்துக்கு இரண்டு ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆட்சியர் இராசாமணி
ஆட்சியர் இராசாமணி

அதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட், அசாம் மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் சுமார் 20,000 தொழிலாளிகளை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான மொத்தச் செலவையும் தமிழக அரசே ஏற்றுள்ளது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு