Published:Updated:

`16 கிலோமீட்டருக்கு 35 வேகத்தடைகள்!’ - சர்ச்சைக்குள்ளாகும் தேனி - பெரியகுளம் சாலை

முன்பெல்லாம் தேனியிலிருந்து பெரியகுளத்துக்கு 20 நிமிடத்தில் சென்றுவிடலாம். தற்போது 45 நிமிடத்துக்கு மேல் ஆகிறது.

தேனி - பெரியகுளம் சாலை
தேனி - பெரியகுளம் சாலை

சாலையில் சாமானியன் சென்றாலும் சரி, துணைமுதல்வரும் பெரியகுளத்தாருமான ஓ.பன்னீர்செல்வம் சென்றாலும் சரி, தேனி டு பெரியகுளத்துக்கான 16 கிலோமீட்டர் தூரத்தில் 35 வேகத்தடைகளில் ஏறி இறங்க வேண்டும். அதிகமான எண்ணிக்கையில் உள்ள வேகத்தடைகளை அகற்ற வலியுறுத்தி இந்து எழுச்சி முன்னணியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மாட்டு வண்டியில் வந்து மனு கொடுத்தனர்.

Protest in Collector Office
Protest in Collector Office

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பொதுமக்கள் , ``தேனி டு பெரியகுளம் சாலையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு, தேனியிலிருந்து லெட்சுமிபுரம், சரத்துப்பட்டி, கைலாசப்பட்டி, கள்ளிப்பட்டி, தாமரைக்குளம் வழியாக பெரியகுளம் வரை 35 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், லெட்சுமிபுரத்திலிருந்து பெரியகுளம் வரையிலான 8 கிலோமீட்டருக்கு 22 வேகத்தடைகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் அதிகமான வேகத்தடைகள் இருப்பது இங்கு தான். இதனால், வெளியூர் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிவிடுகின்றன’’ என்றனர்.

`16 கிலோமீட்டருக்கு 35 வேகத்தடைகள்!’ - சர்ச்சைக்குள்ளாகும் தேனி - பெரியகுளம் சாலை

இது தொடர்பாக பேசிய இந்து எழுச்சி முன்னணியினர், ``வரும் கார்த்திகை, மார்கழி மாதங்களில், பல்வேறு ஊர்களிலிருந்து சபரிமலைக்கு லட்சக்கணக்கானோர் இந்தப் பாதையில் பயணிக்க இருக்கிறார்கள். இந்த வேகத்தடைகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. முன்பெல்லாம் தேனியிலிருந்து பெரியகுளத்துக்கு 20 நிமிடத்தில் சென்றுவிடலாம். தற்போது 45 நிமிடத்துக்கு மேல் ஆகிறது. மாவட்ட நிர்வாகம் வேகத்தடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். தேவையான இடங்களில் மட்டும் வேகத்தடையை அமைக்க வேண்டும்” என்றார்.

உறையவைக்கும் பனி, மிரளவைக்கும் சாலை.. சண்டிகர் முதல் மணாலி வரை 1,200 கி.மீ த்ரில் பயணம்! #Vikatan360

இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறையிடம் விளக்கம் கேட்ட போது, ``காவல்துறையின் பரிந்துரையின் பேரில்தான் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன” என முடித்துக்கொண்டனர். மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் விளக்கம் கேட்டபோது, ``வேகத்தடை அமைக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் விபத்து அபாயம் உள்ள பகுதி. வேகத்தடை அமைக்கப்பட்ட பின்னர் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது” என்றனர்.

Protest in Collector Office
Protest in Collector Office

தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பஸ் ஸ்டாண்டு செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தால், வேகத்தடைகளில் வேகத்தை குறைக்காமல் அதிவேகமாக கடக்கின்றன. இதனால், பேருந்தில் பயணம் செய்பவர்களின் முதுகு மற்றும் இடுப்புப் பகுதி, கழுத்துப் பகுதி கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஆம்புலன்ஸ்கள், வேகத்தடைகள் அனைத்தையும் கடக்க வேண்டியுள்ளதால், கர்பிணிகள், முதுகெலும்பு பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள் பெரும் சிரமத்தைச் சந்திக்கிறார்கள். இப்படி சாமானிய மக்கள் தினம் தினம் பயணிக்கும் தேனி - பெரியகுளம் சாலை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.