கோவை - திருச்சி சாலையில் சுங்கம் – ராமநாதபுரம் இடையே ரூ.253 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டது. அந்த மேம்பாலம் கடந்த 11-ம் தேதி திறக்கப்பட்டது. கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதால், மேம்பாலம் பயன்பட்டுக்கு வந்தால் அது சரியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆனால் மேம்பாலம் திறக்கப்பட்ட இரண்டு வாரங்களில் வெவ்வேறு விபத்து சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே கோவை காந்திபுரம் பகுதி மேம்பாலம் கட்டப்பட்டவிதம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
இதையடுத்து திருச்சி சாலை மேம்பாலம் குறித்தும் சர்ச்சைகள் வெடித்தன. அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழந்ததால் மக்கள் பீதியடைந்தனர். அந்தப் பகுதியில் அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். வேகத்தைக் கட்டுப்படுத்தி, விபத்தைத் தவிர்க்கும்விதமாக, மேம்பாலத்தின் இரண்டு பக்கமும் பேரி கார்டுகளை அமைத்தனர்.

இந்நிலையில், மேம்பாலத்தின் மீது வேகத்தடை அமைத்துள்ளனர். மேம்பாலத்தில் எட்டு இடங்களில் வேகத்தடை அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.
மேம்பாலத்தின் இரண்டு பக்கம், சுங்கம் வளைவு திரும்பும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் வேகத்தடை அமைக்கப்பட்டுவருகிறது. “பாதுகாப்பு காரணமாக வேகத்தடை அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு சுமார் 40 கி.மீ வேகத்தில் மட்டுமே வர வேண்டும்” என போலீஸார் கூறியுள்ளனர்.

``பாதுகாப்புக் காரணம் என்று போலீஸார் கூறினாலும், மேம்பாலங்களில் வேகத்தடை அமைப்பதே விபத்துகளுக்கு வழிவகுக்கலாம். எனவே, அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளைச் செயல்படுத்த வேண்டும்” என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.