
அலட்சியமாக இருப்பதும், அரசு தரப்பில் முறையாக அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதும்தான் இந்த அவல நிலை தொடர காரணமாக உள்ளது.
”எச்சில், சளி திவலைகள் மூலமாகத்தான் கொரோனா பரவுகிறது. பொது இடங்களில் எச்சில் துப்பும் பழக்கம் நம் நாட்டில் எல்லா இடங்களிலும் உள்ளது. அரசாங்கம் இந்த நேரத்தில் கடுமையான சட்டங்களை இயற்றி பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களைத் தண்டித்து இந்தப் பழக்கத்தை நிறுத்தலாமே..? என்று விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார் வாசகர் கலைச்செல்வி கோபாலன். அந்தக் கேள்வியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதே இந்தக் கட்டுரை.

எச்சில் துப்புவது நம் நாட்டில் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒரு செயலாகிவிட்டது. சில நாடுகளில் பொது இடங்களில் எச்சில் துப்புவது பெரும் தண்டனைக்குரிய செயலாகும். அபராதங்களில் தொடங்கி சிறைத் தண்டனைகள் வரை எச்சில் துப்புபவர்களுக்கு வழங்கப்படுகிறது.
பொது இடங்களில் எச்சில் துப்புவதால் ஏற்படும் சுகாதாரக் கேடு குறித்து பொது மருத்துவர் சுந்தரராமன் விரிவாக விளக்குகிறார்.
"பொது இடங்களில் சளித் திவலைகளைத் துப்புவதும், குட்கா மற்றும் பான் மசாலாக்களைப் போட்டுவிட்டு துப்புவதும் சுகாதாரச் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும். சுகாதாரம் மோசமான நிலையில் உள்ளபோது அது பலவகைகளில் சமூகத்துக்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக பல பாதிப்புகளை உண்டாக்கும்.

கொரோனா மட்டுமல்ல, காசநோய் நோயில் தொடங்கி பல நோய்கள் பரவுவதற்கு இந்த எச்சில் துப்பும் பழக்கம்தான் மூலக் காரணமாய் உள்ளது. பொது இடங்களில் புகை பிடிப்பது மற்றும் எச்சில் துப்புவதன் மூலம் ஏற்படும் தீங்குகளை அவர்கள் உணர்ந்து மாறினால் மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு உண்டாகும்" என்றார்.
இது குறித்து வழக்கறிஞர் அஜிதாவிடம் பேசினோம். "பொது இடங்களில் எச்சில் துப்புவது சட்டப்படி குற்றமாகும். எல்லா உலக நாடுகளிலும் சுகாதாரச் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் இந்தச் செயலுக்கு அபராதங்களும் தண்டனைகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிலும் பொது இடங்களில் எச்சில் துப்புவது என்பது தடை செய்யப்பட்ட ஒரு பொது குற்றமாகும். சில உலக நாடுகளில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் சிறைத் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் நம் நாட்டில் அதிகபட்சம் 500 ரூபாய் அபராதம் மட்டுமே இந்த ஒழுங்கீனச் செயலுக்கு விதிக்கப்படுகிறது.
பெரும்பாலும் அரசு அதிகாரிகள் இந்த விஷயத்தில் போதிய கவனம் செலுத்துவதில்லை. அவர்கள் கண்முன்னே இதுநடந்தாலும்கூட கண்டும் காணாமல் கடந்துசென்று விடுகின்றனர். நம் நாட்டில் அரசால் முழு முனைப்புடன் இயற்றப்படும் பல சட்டங்கள் காற்றில் எழுதிய வெற்று வாசகமாகவே இருக்கின்றன. இந்தியாவில் ரயில்வே சட்டத்தில் ரயில்வே துறையின் ஆக்கபூர்வ சொத்துகள் மற்றும் இடங்களில் எச்சில் துப்புவது அபராதத்திற்குரிய குற்றமாகும். ஆனால் முறையாக நடைமுறைப்படுத்தப்படாத வெற்று விதியாகவே அது இன்றளவும் இருக்கிறது. பெயருக்குச் சில வழக்குகளைப் பதிவுசெய்து அபராதம் வசூலித்து கணக்குகாட்டி வருகின்றனர்.
மற்றபடி இந்தியா முழுவதும் பொது இடங்களில் எச்சில் துப்புவதை தடுக்க தனிச் சட்டங்கள் ஏதும் கிடையாது. ஆனால் அனைத்து மாநிலங்களும் தங்களின் மாநிலச் சட்டங்களில் இந்த ஒழுங்கீனப் பொதுக் குற்றத்திற்கு அபராதங்கள் விதித்துள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், மாநில அரசு 2002-ல் பொது இடங்களில் எச்சில் துப்புவதை பொதுக் குற்றமாக அறிவித்து சட்டம் இயற்றியது. பொது இடங்களிலும் பொதுப் பயன்பாட்டில் உள்ள இடங்களிலும் எச்சில் துப்புவது தடைசெய்யப்பட்டது. அந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு நபர் பொது இடங்களில் எச்சில் துப்பினால் அவருக்குக் குறைந்தபட்ச அபராதமாக 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதே நபர் தொடர்ந்து இரண்டாவது முறை அதே குற்றத்தைச் செய்து அரசு அதிகாரிகளிடம் சிக்கும்போது 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இது அடுத்த முறையும் தொடரும் பட்சத்தில் அந்த நபரிடமிருந்து அதிகபட்ச அபராதமாக 500 ரூபாய்வரை வசூலிக்கப்படுகிறது.
சட்டத்தின் ஒரு பிரிவின்கீழ் பள்ளி, கல்லூரி, கல்வி நிலையங்கள், மத வழிபாட்டுத் தலங்களான மசூதி, தேவாலயம் மற்றும் கோயில்களின் 100 மீட்டர் சுற்றளவில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது மற்றும் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய பொதுக்குற்றமாக கருதப்படுகிறது.வழக்கறிஞர் அஜிதா
ஒருவர் எத்தனை முறை இந்த ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டாலும் அபராதம் மட்டுமே அதிகபட்ச தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அந்தச் சட்டத்தின் ஒரு பிரிவின்கீழ் பள்ளி, கல்லூரி, கல்வி நிலையங்கள், மத வழிபாட்டுத் தலங்களான மசூதி,தேவாலயம் மற்றும் கோயில்களின் 100 மீட்டர் சுற்றளவில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது மற்றும் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய பொதுக் குற்றம். ஆனால் கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் அருகிலேயே புகையிலை மற்றும் குட்கா விற்பனை நடைபெற்றுதான் வருகிறது. அதேபோல் எச்சில் துப்புவதும் கண்டுகொள்ளப்படாத செயலாகத்தான் இருந்துவருகிறது.
ஒரு தனி நபர் தன் வீட்டைவிட்டு வெளியே வந்து பொது இடங்களில் எச்சில் துப்பி அசுத்தம் செய்வது குற்றமே.
இன்று நம்மை அச்சுறுத்திக்கொண்டிருப்பது கொரோனா உயிர்கொல்லி நோய் என்றால் இதற்கு முன்னதாக காசநோய் உட்பட பல நோய்கள் நம்மை வதைத்தன.பொது இடங்களில் எச்சில் துப்புவதன் மூலம் இந்த நோய்கள் பரவியதை அடுத்து சுகாதார நடவடிக்கையாகத்தான் அரசால் 'புகையிலை மற்றும் எச்சில் துப்புதல் தடை சட்டம்' கொண்டு வரப்பட்டது.

ஆனால் அதை நம் நாட்டில் முறையாக நடைமுறை படுத்துவதில் அரசுகள் தவறிவிட்டன. நம் நாட்டில் பொதுமக்கள் காவலர்கள் முன்பே எச்சில் துப்புவதையும் அவர்களும் அதைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதையும்கூட நம்மால் பார்க்க முடிகிறது. அப்படியிருக்க இந்த விஷயத்தில் நாம் குறிப்பாக யாரையும் குற்றம் கூறிவிட முடியாது. அரசு ஒரு சட்டம் இயற்றினால் பொதுமக்கள் அதற்குப் பயந்து ஒழுங்காக நடந்து கொள்ளவேண்டும். அரசும் முறையாகக் கண்காணிக்க வேண்டும்.

கொரோனா, இந்தியாவில் தீவிரமடைந்துள்ள இந்த நேரத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பும் பழக்கத்தை அரசு கண்டிப்பாக நடவடிக்கைகள் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் ஒரு சட்டத்தின் வெற்றி அதை நல்ல முறையில் நடைமுறைப்படுத்துவதில்தான் உள்ளது என்பேன். இப்போது நாம் தீவிர நோய்த்தொற்றிடம் போராடி வருகிறோம். இந்தநிலையில் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களை அரசு கண்டறிந்து கடுமையான அபராதங்கள் மற்றும் தண்டனைகளை தாராளமாக விதிக்கலாம். இந்தநேரத்தில் மட்டும் இந்தப் பொது ஒழுங்கீனக் குற்றங்களைக் கண்டறிந்து தடுக்காமல் வரும் நாள்களிலும் தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே வருங்காலத்தில் நோய் அபாயங்களில் இருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ள முடியும்.
அரசு இந்த சமயத்தில் புதிதாக எந்தச் சட்டங்களையும் இயற்ற வேண்டிய அவசியமில்லை. ஏற்கெனவே இயற்றப்பட்டிருக்கும் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தினாலே போதும். அதே போல் நடைமுறையில் இருக்கும் அபராத தொகையின் அளவை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தலாம்.
குற்றங்கள் குறைய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு முழு முனைப்புடன் நடைமுறைபடுத்தப் படவேண்டும். அதேபோல் பொது மக்களும் தங்களின் தவறுகளை உணர்ந்து தனிமனித ஒழுக்கத்தை முறையாகப் பேணுவதன் மூலமாக மட்டுமே நாட்டில் இந்தப் பழக்கத்தை நிறுத்த முடியும் " என்றார்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!
