Published:Updated:

கூட்டமில்லாத ரயில் நிலையங்கள்... வெறிச்சோடிய மெரினா கடற்கரை... கொரோனாவும் சென்னையும்..! #SpotVisit

கொரோனாவும் சென்னையும்
News
கொரோனாவும் சென்னையும்

மாஸ்க், சானிடைசர் பயன்பாடெல்லாம் நடுத்தர மக்கள்வரை சாத்தியம். ஆனால், தினக்கூலிகள் முதல் நடைபாதையில் வசிக்கும் மக்கள்வரை கொரோனே குறித்து எந்தளவுக்குத் தெரிந்து வைத்திருப்பார்கள் என்ற குழப்பத்தோடு மெரினா கடற்கரையைச் சென்றடைந்தோம்.

எப்போதும் பயணம் செய்கிற கூட்ட நெரிசலான அதே ரயில் நிலையம்தான். ஆனால், இந்த முறை அதிகபட்சமாக 10 பேரை மட்டுமே பிளாட்பாரத்தில் பார்க்க நேர்ந்தது. பெரும்பாலானவர்களின் முகத்தில் மாஸ்க். பொதுவாக ரயில் ஏறச் செல்லும்போது, `நீயா நானா' என்று முந்திக்கொண்டு ஏறுவார்கள். ஆனால் இன்றோ, `மற்றவர்கள் ஏறட்டும், யாரையும் தொடாமல் இறுதியாக நாம் ஏறலாம்' என்ற சிந்தனையோடு ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்ட காட்சி, கண்ணிலே நிற்கிறது. காலியான இருக்கைகள் அவ்வளவு இருந்தும் நான்கடி தூரத்தில் கம்பியைப் பிடித்துக்கொண்டே பயணிப்பவர்கள்தான் தற்போது அதிகம்.

மெட்ரோ
மெட்ரோ

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இப்படி ஒரே மாதத்தில் ஒட்டுமொத்த உலகையும் மிரட்டி, புரட்டிப்போட்டிருக்கிறது 'கொரோனா' என்னும் அரக்கன். எல்லாம் சரி, மாஸ்க், சானிடைசர் பயன்பாடெல்லாம் நடுத்தர மக்கள்வரை சாத்தியம். ஆனால், தினக்கூலிகள் முதல் நடைபாதையில் வசிக்கும் மக்கள்வரை, கொரோனே குறித்து எந்தளவுக்குத் தெரிந்து வைத்திருப்பார்கள் என்ற குழப்பத்தோடு மெரினா கடற்கரையைச் சென்றடைந்தோம்.

மெரினா
மெரினா

சீனா தொடங்கி தற்போது இந்தியா வரை தொற்றிக்கொண்டிருக்கும் இந்த பேண்டெமிக் நோயின் தாக்கத்தைப் பற்றியும் அதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் அங்கிருந்த சிலரிடம் கேட்டோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`யாரேனும் வருவார்களா' என்ற தவிப்போடு தங்களின் ராட்டினத்துக்கு அடியில் அமர்ந்து தன் பேரக் குழந்தையோடு நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருந்தனர் ஜான்-மேரி தம்பதியர். நான்கு வருடங்களாக மெரினாவிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் இவர்களிடம் கொரோனா நோய் பற்றித் தெரியுமா என்றோம்.

மெரினா
மெரினா

"அது ஏதோ உயிர்க்கொல்லி நோயாமே. அத சரிபண்ண எந்த மருந்தும் இன்னும் கண்டுபிடிக்கலைன்னு எல்லாரும் சொல்லிக்கிட்டு இருக்காங்க" என ஆச்சர்யமாகப் பேசிய அவர்கள், "எலுமிச்சைப் பழ ஜூஸ், அப்புறம் பப்பாளியெல்லாம் சாப்பிட்டா ரொம்ப நல்லது. அதெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துமாமே. என் மருமகள் கார்ப்பொரேஷன்ல வேலை பார்க்குறா. அவதான் எங்களுக்கு இதைப் பத்தியெல்லாம் சொன்னாள். அது உண்மையா பொய்யான்னு எங்களுக்குத் தெரியாது. நாங்க வழக்கம்போல எங்க பொழப்பப் பார்த்துகிட்டு இருக்கோம்" என வெள்ளந்தியாகப் பதிலளித்தனர்.

கொரோனாவின் பாதிப்பையும், அதற்கான பாதுகாப்பையும் உணர்த்திவிட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றபோது, மெரினாவில் பொதுக்கழிப்பிடத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்த பிரசாத் அருகில் வந்தார். அவரிடம், மாஸ்க், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்துக் கேட்டோம்.

பிரசாத்
பிரசாத்

``3 வருஷமா இங்கதான் வேலை செஞ்சுகிட்டு இருக்கேன். அப்படியெல்லாம் ஏதும் எங்களுக்குக் கொடுக்கலையே. ஏதோ மிகப் பெரிய நோய் பரவுது, நாட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை மட்டும் வீட்ட விட்டு எங்கேயும் போகாம இருக்கணும்னு சொன்னாங்க. மத்தபடி முகமூடி, கைகழுவணும்னு இங்க யாரும் சொல்லல. யாருக்காவது போன் பண்ணுறப்போ மட்டும் யாரோ இதைப் பத்திச் சொல்லுறாங்க, அப்புறம் டிவில பார்க்குறதை வெச்சுதான் தெரிஞ்சுக்கிட்டோம். காலைல 5 மணில இருந்து இரவு10 மணிவரைக்கும் இங்கேயேதான் இருக்கோம். ஆனா, எங்களுக்குன்னு எந்த ஒரு சுகாதார வசதியும் இதுவரை அரசாங்கம் கொடுக்கலை" என்றார்.

வடபழனி தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கண்ணனிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பற்றிக் கேட்டபோது, "சுகாதாரமெல்லாம் இப்போதான் கண்ணுக்குத் தெரியுதா? ஷாப்பிங் மால் மூடுறது, ஒயின் ஷாப் மூடுறது எல்லாம் இப்போதான் பண்ணணுமா? முதல்ல போதுமான அளவு கழிப்பிடம் கட்டச் சொல்லுங்க. அதை ஒழுங்கா பராமரிக்கச் சொல்லுங்க. நீங்களும் சுத்தமா இருந்து நானும் சுத்தமா இருந்தா தானே நாடு நல்லா இருக்கும். ஆனா, இங்க அப்படி எதுவுமே இல்லை. குப்பைத்தொட்டி வைக்குறாங்க. இப்போ வரைக்கும் குப்பையெல்லாம் வெளியிலதான் கெடக்கு. அதை ஒழுங்கா பராமரிக்கப் போதுமான அளவு நடவடிக்கை எடுக்குறதில்ல. இப்படி இருந்தா எல்லா விதமான நோயும் நமக்கு வரும்.

கண்ணன்
கண்ணன்

அவ்வளவு ஏன், மாஸ்க் போடுங்க, சானிடைசர் உபயோகிங்கனு சொல்லுறாங்க. இவ்வளவு நாளா 5 ரூபாய்க்கு வித்துகிட்டு இருந்த மாஸ்க் இப்போ 50 ரூபாய்க்கு விக்கிறாங்க. இது நியாயமான்னு சொல்லுங்க. வாங்க முடியாதவனெல்லாம் எங்க போவான். இதுபோல சமயத்துல அரசாங்கம் 2 ரூபாய்க்கு கொறைச்சு வித்தாதான் கீழ்த்தட்டு மக்களும் வாங்குவாங்க. எதுவுமே சரியில்ல" என்று தன் கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்திய கண்ணனுக்கு பதில் சொல்ல முடியாமல் நகர்ந்தோம்.

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், விலங்குகள் மூலமாகத்தான் பரவியதாகப் பலராலும் சொல்லப்பட்டு வருகிறது. எனவே, விலங்குகளை வைத்து தங்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும் ஒருவர் எவ்வாறு விழிப்புணர்வோடு இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள, மெரினா கடற்கரையில், இதமான ஈரக்காற்றோடு குதிரையுடன் சவாரி செய்துகொண்டிருந்த சரவணனோடு பேசினோம்.

சரவணன்
சரவணன்

சற்று யோசித்த அவர், "எனக்கும், என்னோட லட்சுமிக்கும் (குதிரையின் பெயர்) எந்த விதமான வைரஸ் வந்தாலும் பயமில்லை. அரசு சார்புல இருந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், எப்போதும், அது எங்களுக்கு உதவப் போறதில்ல. எனக்குச் சோறு போடுறது என்னோட லட்சுமிதான். அவளைத் தினமும் காலை, மாலைனு குளிப்பாட்டுவேன். அவங்க சொல்லித்தான் நாங்க சுத்தமா இருக்கணும்னு அவசியமில்ல. எங்க சுத்தம்தான் எங்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையைத் தருது. சோறும் போடுது.

லட்சுமி மட்டுமல்ல எங்க கூட, நந்தினி, லட்டு, அர்ஜுனன்னு 4 பேரு (குதிரைகளின் பெயர்) இருக்காங்க. அவங்க எல்லோருக்கும் தினமும், அதிக சத்துகள் நிறைந்த மூலிகை உருண்டைகளைக் கொடுப்பேன்.
சரவணன்

சுக்கு, மிளகு, திப்பிலினு பலவகை ஆரோக்கியமான பொருள்களால் செய்யப்படும் இந்த மூலிகை உருண்டையைச் சாப்பிட்டால் எந்த விதமான நோயும், மனிதனை மட்டுமல்ல விலங்குகளையும் நெருங்காது. இப்போ பரவி வரும் கொரோனாவுக்கு நாட்டு வைத்தியம் மட்டுமே சரியான மருந்து. சரியாகப் பத்தியம் இருந்து மூலிகை மருந்தை எடுத்து வந்தா எந்த விதமான வைரஸும் தாக்காது. இந்த மூலிகை உருண்டையைக் குதிரைக்கு மட்டும் இல்லாமல் நாங்களும் தினமும் சாப்பிட்டு வர்றோம். கொஞ்சம் கசப்பா இருக்கும், ஆனா ஆரோக்கியமா இருக்கோம். தினமும் ஒரு டம்ளர் வேப்பிலை கசாயம் குடிச்சா போதும். இதை விட வேற மருந்து எதுவும் தேவையில்ல.

மூலிகை உருண்டை
மூலிகை உருண்டை

எங்களுக்கு ஒரே ஒரு கவலைதான், மக்கள் ஊரடங்கு அறிவிச்சிருக்கிற நாளைக்கு (ஞாயிற்றுக்கிழமை), குதிரைக்குச் சாப்பாடு கொடுக்க முடியாது. வீட்டிலேயே இருக்கணும்னு சொல்லிட்டாங்க. வேற வழி இல்ல. ஒரு நாள் கஷ்டப்பட்டுத்தான் ஆகணும். அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், 35 வருஷமா குதிரையை வெச்சு வாழ்க்கையை ஓட்டி வரும் எங்களுக்கு எந்தப் பயனும் இல்ல. எங்க வாழ்க்கையை எப்படி நடத்தணும்னு அவங்கதான் முடிவு பன்றாங்க" எனத் தன்னுடைய ஆதங்கத்தைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அடுத்த சவாரிக்குத் தயாரான குதிரை தன் எஜமானனைப் பார்த்துக் கனைக்கத் தொடங்கியது. கம்பீரமாக வளர்ந்திருந்த லட்சுமியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு நாங்களும் விடைபெற்றோம்.