Published:Updated:

`கதறிய வானம்.. கண்ணீர்விட்ட பெண் போலீஸார்..!’ - எப்படி இருக்கிறது நடுக்காட்டுப்பட்டி? #SujithWilson

நேற்று நள்ளிரவுவரை நாடே உற்று நோக்கிய நடுக்காட்டுப்பட்டி எப்படி இருக்கிறது என ஸ்பாட் விசிட் செய்தோம்.. ஒட்டுமொத்த தேசத்தின் பார்வையும், பேருந்து வசதிகூட இல்லாத நடுக்காட்டுப்பட்டி கிராமத்தை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது குழந்தை சுஜித் வில்சனின் மரணம்.

பலனளிக்காத வேண்டுதல்கள்..!

கடந்த 25-ம் தேதி மாலை 5.30 மணியளவில், திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் பிரிட்டோ - கலா மேரி தம்பதியின் இளைய மகன் சுஜித் வில்சன் அவனின் அண்ணனுடன், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். இதைத்தொடர்ந்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர், வருவாய்த் துறையினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் மற்றும் தேசிய மீட்புப் படையினர் பிரத்யேக இயந்திரங்கள் கொண்டு முயற்சி எடுத்தனர்.

``சுஜித் வில்சன் உயிர் பிழைக்க மாட்டானா?” என 4 நாள்களாக ஒட்டுமொத்த தேசமும் ஏங்கித் தவித்தது. தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கிராமங்களில் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் மக்கள் சுஜித் வில்சனுக்காக பிரார்த்தனை செய்தார்கள்.

வேதனையில் முடிந்த மீட்புப்பணி.. !

சுமார் 80 மணி நேரம் தொடர்ந்த மீட்புப் பணி, நேற்று, 29-ம் தேதி அதிகாலை 2 மணி வரை தொடர்ந்தது. நள்ளிரவில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சிறுவன் உயிர் இழந்துவிட்டதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். அடுத்த சில நிமிடங்களில், சுஜித் வில்சனின் மரணச் செய்திக் கேட்டு வானமும் கண்ணீர் சிந்தும் விதமாக மழை கொட்டித் தீர்த்தது.

அடுத்த சிலமணி நேரங்களில், சுஜித் வில்சன் இருந்த ஆழ்துளைக் கிணறு மொத்தமாகக் காவல்துறை பாதுகாப்பு வளையத்துக்குள் வந்தது. அங்கிருந்த பத்திரிகையாளர்கள் தூரம் அனுப்பப்பட்டார்கள். என்ன நடக்கிறது எனச் சுதாரிப்பதற்குள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சில நிமிடங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் வில்சனின் உடலை மூடிய ஒரு பெட்டியில் தூக்கி வந்தனர்.

சுஜித்தின் தாய்
சுஜித்தின் தாய்

அந்தப் பெட்டியின் வெளியே சுஜித் வில்சனின் கை மட்டும் தெரிந்தது. அடுத்து சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பிரேதப் பரிசோதனை முடிந்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர், நடுக்காட்டுப்பட்டி அடுத்த பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் சுஜித் வில்சன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கதறியழுத வானம்..!

அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வருகையால் நேற்று, சுஜித் வில்சனின் வீடு மற்றும் அந்தக் கிராமமே பரபரப்பாகவே காணப்பட்டது.

மாலை சுமார் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழையில் அந்த ஏரியாவே வெள்ளக்காடானது, முதல்வரின் வருகைக்காக எல்லாம் சரி செய்யப்பட்டது.

ஆழ்துளைக் கிணறு பகுதி
ஆழ்துளைக் கிணறு பகுதி

தி.மு.க தலைவர் ஸ்டாலின், தே.மு.தி.க சார்பில் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் வந்து ஆறுதல் சொல்லி அஞ்சலி செலுத்திச் சென்றார்கள். மாலை 6.30 மணிக்குச் சேலத்திலிருந்து நடுக்காட்டுப்பட்டி கிராமத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்துபோனபிறகு மொத்த காவல்துறையும் அங்கிருந்து கிளம்பியது.

முதல்வர் சுஜித் வில்சன் மாட்டிக்கொண்ட ஆழ்துளைக் கிணற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்ப்பார். அங்கு சென்று அஞ்சலி செலுத்தினால் மலர் வளையம் தேவை என சிலர் தயாராக வைத்திருந்தனர். அங்கு பந்தோபஸ்தும் போடப்பட்டது. ஆனால், அவர் அந்தப் பக்கம் செல்லவில்லை. மலர்வளையத்தை சுஜித் வில்சன் உருவப்படம் அருகே வைத்துவிட்டு போட்டோ எடுத்துக்கொண்டனர் அ.தி.மு.க-வினர்.

அடுத்த சில நிமிடங்களில், முதல்வர் வாகனம் வீறிடவே, காவல்துறை கட்டுப்பாடுகள் தளர்ந்தன. அதன்பிறகுதான் நிம்மதியாகக் கிராம மக்கள் திரண்டு வந்து, சுஜித் வில்சன் வீட்டையும், அங்கு வைக்கப்பட்டிருந்த உருவப்படத்தையும் பார்வையிட்டனர்.

பெண் போலீஸார்
பெண் போலீஸார்

4 நாள்கள் கொட்டித் தீர்த்த மழையிலும் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள், சுஜித் வில்சனின் படத்தைப் பார்த்து அழுதபடி வணங்கிச் சென்றனர், சில போலீஸ்காரர்கள் செல்போனில் படம் பிடித்துக்கொண்டனர். பாதுகாப்பு பணிக்கு வந்திருந்தாலும், இவ்வளவு சிரமப்பட்டும் சுஜித் வில்சனை உயிரோடு மீட்க முடியலையே எனக் கண்ணீரை துடைத்தபடியே பெண் போலீஸார் கிளம்பினர்.

அனைவருக்கும் நன்றி.. உருகும் சுஜித்தின் பெற்றோர் 

சுஜித் வில்சனின் அப்பா பிரிட்டோ, ``கடந்த 5 நாள்களாக தன் மகனை மீட்பதற்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். அருகில் உள்ள அறையில் அவரின் மனைவி கலாமேரி, உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்திருக்க, உறவினர்கள் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர்.

ரிக் இயந்திரம்
ரிக் இயந்திரம்

இந்நிலையில் வீட்டின் உள்ளே நுழைந்த கமல் கட்சியைச் சேர்ந்த கவிஞர் சினேகன் சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

கலங்கிய காவலர்கள்.. அழுத பெண் போலீஸார்

அங்கிருந்து மெல்ல வெளியே வந்தோம். ராஜபாளையத்திலிருந்து வந்த சிறப்பு காவல்படை வீரர்கள், ``திருவாரூர் குருப்பெயர்ச்சி விழாவுக்குப் போன எங்களை திடீரென்று இங்க அனுப்பி வைத்தாங்க. இரண்டு நாள்களாக எவ்வளவு மக்கள் வந்தாங்க. வந்தவங்க எல்லோரும் சுஜித் வில்சனின் உயிரைக் காப்பாற்றிவிடமாட்டார்களா என ஏங்கினார்கள். ஒரு சின்ன அசம்பாவிதம் இல்ல. மக்கள் கட்டுக்கோப்பாக காத்திருந்தார்கள். மொத்த மக்களின் நம்பிக்கையும் இப்படி ஆச்சே” எனப் புலம்பியபடி வேனில் ஏறினார்கள்.

கிராம பொதுமக்கள்
கிராம பொதுமக்கள்

கொஞ்ச தூரம் நடந்தோம். கடந்த இரண்டு நாள்களாக சுஜித் வில்சனை வெளியே எடுக்கப் பெரிய துளைகள் போட கொண்டுவரப்பட்ட ரிக் வாகனத்தை வெளியே எடுக்க முடியாமல் ஊழியர்கள் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்கள். `நேற்று வரும்போது எவ்வளவு வேகமாக வந்துவிட்டோம். இரண்டு இடத்தில் வண்டி பழுதானது. அப்போது ஒரு உயிரைக் காப்பாற்றப் போகிறோம் என பெருசா தெரியல. ஆனால், இன்று நினைத்தாலே சங்கடமாக இருக்கு' என இருட்டில் கிளம்பிப் போக முடியாமல் தவித்து நின்றனர்.

இரவு 10 மணி..

அங்கிருந்து கிளம்பி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுஜித் வில்சன் புதைக்கப்பட்ட பாத்திமாபுதூர் கல்லறைத்தோட்டத்துக்குச் சென்றோம். அஞ்சலி செலுத்துவோரின் வசதிக்காக மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

சுஜித் வில்சன் கல்லறை
சுஜித் வில்சன் கல்லறை

காலைமுதல் வந்துபோனவர்களைத் தாங்கிய நாற்காலிகள் இளைப்பாறியபடி கிடந்தன. அங்கிருந்த சுவரில் சுஜித் வில்சனின் உருவம் பொறித்த பேனர் ஆடியது. சுஜித் வில்சன் புதைத்ததாக சொல்லப்படும் இடத்தில் அஞ்சலி செலுத்தியவர்கள் வைத்த மாலைகள் குவியலாய் வைக்கப்பட்டிருந்தது.

சுஜித் வில்சன் கல்லறை
சுஜித் வில்சன் கல்லறை

நம்மைப் பார்த்து அருகில் வந்த அப்பகுதியில் குடியிருக்கும் மணி என்பவர் நம்மை விசாரித்துவிட்டு, ``எவ்வளவு ஜனம். காலையிலிருந்து எவ்வளவோ பேர் வந்தாங்க. இவ்வளவு பேரை தவிக்கவிட்டு அந்த ஜீவன் போயிடுச்சே. இந்த அதிகாரிகள் கொஞ்சம் சுதாரித்து முன்னாடியே யோசித்து துரிதநடவடிக்கை எடுத்திருந்தால் நல்லா இருந்திருக்கும்” எனக் கலங்கியபடி நடையைக் கட்டினார். சுஜித் வில்சன் புதைக்கப்பட்ட இடத்தில் மெழுகுவத்தி தலையாட்டியபடி எரிந்தது. ஒட்டுமொத்த தேசத்தையும் ஏங்க வைத்த அந்தக் குழந்தை ஓய்வெடுக்கிறான்…!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு