சீர்காழி அருகே உள்ள திருநகரி கல்யாண ரங்கநாதர் கோயிலில் பழைமை வாய்ந்த ஸ்ரீ தேவியின் ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது, அப்பகுதி பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருநகரி கல்யாண ரங்கநாதர் ஆலயத்தில், நந்தவனம் சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது. அப்போது, கோயில் சுற்றுச்சுவர் அருகே மண்ணில் புதைந்திருந்த 1 அடி உயரமும் 1.750 கிலோ கிராம் எடையுடன்கூடிய ஐம்பொன்னால் ஆன ஸ்ரீதேவி சிலை கண்டெடுக்கப்பட்டது. அதைக் கண்டு பரவசமடைந்த மக்கள், பெருமாளின் ஸ்ரீ தேவியே மீண்டும் அனுக்கிரகம் செய்ய வந்ததாய்க் கருதி மனமுருக வழிப்பட்டனர். அதன் பின்னர், கோயில் ஊழியர்கள் ஸ்ரீ தேவி சிலையைப் பாதுகாப்புடன் அலுவலகத்தில் வைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுபற்றி தகவல் அறிந்து வந்த இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, சிலையைப் பார்வையிட்டார். சிலை மீட்கப்பட்ட இடத்தில் வேறு சிலைகளும் உள்ளதா என்று மண்ணைத் தோண்டி ஆய்வு செய்ய உத்தரவிட்டார். ஆனால், வேறு சிலைகள் எதுவும் தென்படவில்லை.

அதன் பின், ஸ்ரீ தேவியின் ஐம்பொன் சிலையை சீர்காழி வட்டாட்சியர் ரமாதேவியிடம் அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா ஒப்படைத்தார். அதைத் தொடர்ந்து தொல்லியல்துறையிடம் ஸ்ரீ தேவி சிலை ஒப்படைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னரே, சிலையின் காலம் மற்றும் அதன் மதிப்புகுறித்து தெரியவரும் என்கின்றனர்.