Published:Updated:

``இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டார்கள்; காலைப் பிடித்துக் கதறினோம்!" - தஞ்சமடைந்த அகதிகள்

மணல் திட்டில் இலங்கை அகதிகள்

தமிழக எல்லைக்குள் நுழைந்த அகதிகள்மீது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

``இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டார்கள்; காலைப் பிடித்துக் கதறினோம்!" - தஞ்சமடைந்த அகதிகள்

தமிழக எல்லைக்குள் நுழைந்த அகதிகள்மீது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

Published:Updated:
மணல் திட்டில் இலங்கை அகதிகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் கடந்த ஏழு மாதங்களாக ஏராளமானோர் வாழ வழியின்றி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்து வருகின்றனர். அதிலும் இந்தியாவை பொறுத்தவரையில், தமிழகத்தில் ராமேஸ்வரத்திற்கு மிக அருகாமையில் இலங்கை அமைந்துள்ளதால் அதிக அளவிலான அகதிகள் குடும்பம் குடும்பமாக கள்ளப்படகு மூலம் வந்து கொண்டே இருக்கின்றனர். இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் இலங்கையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு அகதிகள்போல் தப்பி வந்து முகாமில் தங்கியிருந்தவர்களை கண்டறிந்து தமிழக போலீஸார் கைது செய்துவரும் சம்பவங்களும் அரங்கேறிவருகின்றன.

மீட்கப்பட்ட இலங்கை அகதிகள்
மீட்கப்பட்ட இலங்கை அகதிகள்

இந்த நிலையில் ராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் கடலின் நடுவே 13 மணல் திட்டுகள் உள்ளன. இதில் ஏழு மணல் திட்டுகள் இலங்கைக்கும், ஐந்து மணல் திட்டுகள் தமிழகத்தை சேர்ந்ததாகவும், ஒரு மணல் திட்டு இரு நாட்டிற்கும் பொதுவாகவும் உள்ளது. கள்ளப்படகில் அகதிகளாக வரும் இலங்கை மக்கள் தமிழக எல்லையில் அமைந்துள்ள மணல் திட்டில் இறக்கிவிடப்பட்டுவருகின்றனர். தகவலறிந்து இந்திய கடற்படையினர் அவர்களை மீட்டு ராமேஸ்வரம் அழைத்து வந்து முகாமில் தங்கவைத்து வருகின்றனர். இலங்கை மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுப்பதற்காக இலங்கை கடற்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு அகதிகளாகச் செல்பவர்களை பிடித்து கைதுசெய்து வரும் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன.

கைக்குழந்தையுடன் அகதி ராதிகா
கைக்குழந்தையுடன் அகதி ராதிகா

அதன்படி இலங்கை மன்னார் மாவட்டம், தாளவாடி பகுதியைச் சேர்ந்த சபரி, அவர் மனைவி ராதிகா இருவரும்... ஆறு மாத கைக்குழந்தை உட்பட மூன்று குழந்தைகளுடன் கள்ளப்படகு மூலம் தமிழகத்திற்கு அகதிகளாக நுழைய கடல் மார்க்கமாக வந்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த மற்றொரு நபரும் அகதியாக அவர்கள் வந்த படகில் ஏறி வந்துள்ளார்.

தமிழக எல்லையில் உள்ள ஐந்தாவது மணல் திட்டை அவர்கள் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், அவர்களை கண்டறிந்து பின் தொடர்ந்து வந்த இலங்கை கடற்படையினர், அவர்கள் தமிழக எல்லையை கடந்த போதிலும், விடாமல் தமிழக எல்லைக்குள் வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் நடுக்கடலில் செய்வதறியாது இருந்த சபரியிடம், உடன் வந்த மற்றொரு அகதி, ``நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் படகில் படுத்துக் கொள்ளுங்கள். நான் இலங்கை கடற்படையிடம் பேசிக் கொள்கிறேன்" என எழுந்து நின்று கைகாட்டி உள்ளார். ஆனால் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே வந்த நிலையில் அவர் கடலில் விழுந்துள்ளார். துப்பாக்கிக் குண்டு பாய்ந்து கடலில் விழுந்தாரா? அல்லது கால் இடறி கடலில் விழுந்தாரா என்பது தெரியவில்லை என மிரட்சியுடன் கூறுகிறார் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் சபரி.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அகதி சபரி
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அகதி சபரி

இது தொடர்பாகப் பேசிய சபரி, ``எங்களுடன் வந்தவர் மாயமான பிறகு, எங்களை நெருங்கிய இலங்கை கடற்படையினரிடம் நானும் என் மனைவியும் காலைப் பிடித்து கதறியதால் எங்களை விட்டுச் சென்றனர். மூன்று நாள்களாக உணவின்றி குழந்தைகளுடன் தவித்து வந்தோம். நேற்று அந்த வழியாக மீன் பிடிக்க வந்த தமிழக மீனவர்கள்தான் அவர்களிடம் இருந்த உணவுகளை எங்களுக்குக் கொடுத்து உதவினர். அப்போது எங்களைக் கூட்டிச் செல்லுமாறு அவர்களிடம் கேட்டோம். `நாங்கள் அழைத்துச் செல்ல முடியாது. கரைக்குச் சென்று கடற்படையினரிடம் விவரத்தை தெரிவிக்கிறோம். அவர்கள் வந்து உங்களை கூட்டிச் செல்வார்கள்' என நம்பிக்கை அளித்து அளித்தனர். ஆனால் இன்று அதிகாலைதான் இந்திய கடற்படையினர் எங்களை மீட்டு கொண்டு வந்தனர்" என்றார்.

இதையடுத்த மீட்கப்பட்ட அகதிகள் மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழக எல்லைக்குள் அகதிகளாக நுழைந்த சொந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்மீது இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்து அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திச் சென்றுள்ள சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடலில் விழுந்ததாகக் கூறப்படும் நபரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.