இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவுப்பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதைச் சமாளிக்க முடியாமல் இலங்கை மக்கள் கடல்வழியாக படகுகள் மூலம் பல்வேறு நாடுகளுக்குள் அகதிகளாக நுழைந்துவருவதாகக் கூறப்படுகிறது.
ராமேஸ்வரம் கடல் பகுதி இலங்கைக்கு அருகில் உள்ளது. எனவே இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் ராமேஸ்வரம் கடல்வழியாக தமிழகத்துக்குள் அகதிகளாக நுழைய தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 11-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் அருகே உள்ள ஜமீன்தார் வலசை கடற்கரைப் பகுதியில் இலங்கைப் பதிவு எண் கொண்ட படகில் வந்த சிலர், தமிழக மீனவர்களைக் கண்டதும் படகை விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர். அதேபோல், கடந்த 21-ம் தேதி நாகை மாவட்டம், கோடியக்கரை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில், காத்தான் ஓடை கடற்கரைப் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த கண்ணாடி இழைப் படகு கரையொதுங்கியது.
எனவே, இந்த படகுகளில் இலங்கையைச் சேர்ந்த நபர்கள் வந்திருக்கக்கூடும் என்ற கோணத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்நிலையில் இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் கடல்வழியாக தமிழகத்துக்குள் அகதிகளாக நுழைபவர்களை கண்காணிக்கும் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி மண்டபத்திலுள்ள இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான இரு அதிவேக ரோந்து கப்பல்கள் மற்றும் மூன்று ஹோவர் கிராஃப்ட் கப்பல்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றன. மேலும், ராமேஸ்வரத்திலுள்ள இந்திய கடற்படை நிலையத்திலிருந்தும் படகுகளில் கடற்படையினரும் கச்சத்தீவு வரையிலான இந்திய கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதுதவிர உச்சிப்புளி பருந்து கடற்படை விமான தளத்திலிருந்தும் அவ்வப்போது ஹெலிகாப்டர்களும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றன.

குறிப்பாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பாக் ஜலசந்தி கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மிகவும் தாழ்வாகப் பறந்தபடி சந்தேகப்படும்படியான படகுகள் நடமாட்டம் இருக்கிறதா என ஹெலிகாப்டரில் இருந்தபடி கண்காணித்துவருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை ஹோவர்கிராஃப்ட் கப்பலில் இந்திய கடலோர காவல் படை போலீஸார் தனுஷ்கோடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அரிச்சல்முனையில், கடலின் நடுவேயுள்ள மணல்திட்டையில் குழந்தைகளுடன் சுற்றிய ஆறு பேரைப் பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த கஜேந்திரன், மேரி கிளாரி ஆகியோர் தங்கள் கைக்குழந்தையுடன் படகில் ஏறி தமிழகத்துக்குப் புறப்பட்டுள்ளனர். அப்போது அங்கு மன்னார்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தியூரி தனது இரு குழந்தைகளான எஸ்தர், மோசஸ் ஆகியோரை அழைத்து வந்து `உங்களுடன் நாங்களும் தமிழகம் வந்து விடுகிறோம். எங்களையும் அழைத்துச் சென்று விடுங்கள்’ எனக் கூறி குழந்தைகளுடன் அவர்களும் படகில் ஏறியுள்ளனர். இன்று அதிகாலை ஆறு பேரையும் அந்தப் படகு தனுஷ்கோடி அரிச்சல் முனையில் கடலின் நடுவே மணல்திட்டையில் இறங்கிவிட்டுச் சென்றிருப்பது தெரியவந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
``இலங்கையில் பொருளாதார நெருக்கடியால், விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளதால் எங்களால் அங்கு வாழ முடியவில்லை, அதனால் எங்கள் குழந்தைகளுடன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தமிழகத்துக்குள் குடும்பத்துடன் தஞ்சமடைய நுழைந்துள்ளோம்” என போலீஸாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள், மண்டபம் இந்திய கடலோர காவல் படை அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்டு அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் அகதிகளாக நுழைந்துள்ளதாகக் கூறியுள்ளனர். அவர்கள் தெரிவிப்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அகதிகள் முகாமுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள், முன்னுக்குப் பின் முரணாக சந்தேகப்படும்படியாக பதிலளித்தால் அவர்களைச் சிறையில் அடைக்க வாய்ப்புள்ளதாக கடலோர காவல் படை போலீஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மேரி கிளாரா, ``இலங்கையில் அனுதினமும் உணவின்றி செத்து செத்துப் பிழைத்துவருகிறோம். ஒரு முட்டையின் விலை 35-க்கு விற்பனை செய்கிறார்கள். ஒரு ஆப்பிளின் விலை 200-க்கும், பேரீச்சம் பழம் கிலோ 900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அத்தியாவசியத் தேவையான அரிசி, பால், கோதுமை மாவு, சர்க்கரை, பருப்பு, பெட்ரோல் ஆகியவற்றின் விலையும் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் உயர்ந்துகொண்டேயிருக்கிறது.
900-க்கு விற்ற காஸ் சிலிண்டர் தற்போது நான்காயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இன்னும் நாளுக்கு நாள் விலை அதிகரித்துக்கொண்டேதான் செல்லும். குழந்தைக்கு பால் பவுடர் 100 கிராம் 400-லிருந்து ஊரில் இருந்து 800 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஒருவேளை உணவுக்குக்கூட வழியின்றி அனுதினமும் செத்து செத்துப் பிழைத்துவருகிேறாம். எங்கள் குழந்தைகள் உயிரையாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தமிழகத்துக்குள் அகதிகளாக நுழைந்துள்ளோம். எங்களைப்போல் ஆயிரக்கணக்கானோர் தமிழகம் உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாகச் சென்று தஞ்சமடையக் காத்திருக்கின்றனர். இலங்கை மக்களுக்கு அப்போதும் சரி... இப்போதும் சரி... ஆதரவாக இருப்பது தமிழகம் மட்டும்தான். எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்" எனக் கண்ணீர்மல்கக் கூறினார்.