இலங்கையில் அத்தியாவசியப் பொருள்களான அரிசி, பருப்பு, பால், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபக்சே, பிரதமா் மகிந்த ராஜபக்சே ஆகியோா் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, வாழ வழியின்றி அங்குள்ள மக்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதுவரை 21 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேர் கள்ளத்தோணி மூலம் அகதிகளாக தமிழகம் வந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை ராமேஸ்வரம் அடுத்த சேரான்கோட்டை கடற்கரைப் பகுதியில் 2 மாத கைக்குழந்தை, ஒரு சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இலங்கையிலிருந்து அகதிகளாக நுழைந்திருப்பதாக கியூ பிராஞ்ச் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடலோரக் காவல்படை `ஹோவர் கிராப்ட்' கப்பல் மூலம் அவர்களை மீட்டு, மண்டபம் மரைன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸாரிடம் பேசிய இலங்கையைச் சேர்ந்த பெண் அகதி, ``எனக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் கேட்டு அரசு அலுவலகத்துக்குச் சென்றால் `பேப்பர் வாங்கக் கூட காசில்லாமல் இருக்கிறோம்... நிலைமை சீரானதும் பிறப்புச் சான்றிதழ்' தருகிறோம் எனக்கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.
இப்படிப்பட்ட நாட்டில் எப்படி வாழ முடியும், பொருளாதார நெருக்கடியால் மக்கள் பசி, பட்டினிக்கு ஆளாகி சீரழிந்து வருகிறோம். முழுக்க முழுக்க மக்கள் வாழ தகுதியற்ற நாடாக இலங்கை மாறிவிட்டது" எனக் கண்ணீர் வடித்தார். அதையடுத்து, அவர்கள் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.