Published:Updated:

``நேற்று மாலை கைதட்டும்போது கண் கலங்கினேன்; என் கேள்விகளுக்குப் பதில் வேண்டும்!” - நடிகை ஸ்ரீப்ரியா

நடிகை ஸ்ரீப்ரியா
நடிகை ஸ்ரீப்ரியா

" ‘நோய் பாதிப்பு பரவுவதைத் தடுக்க மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று அரசு தொடர்ந்து சொல்லி வருகிறது. நானும் என் குடும்பத்தினரும், வீடுள்ள மக்கள் அனைவருமே எங்களைத் தனிமைப்படுத்திக்கொள்கிறோம். வீடில்லாத மக்கள் தங்களை எப்படித் தனிமைப்படுத்திக்கொள்வார்கள்?"

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், இந்தியா முழுவதும் நேற்று மக்கள் ஊரடங்கு அமைதியாக நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உட்பட இந்தியா முழுக்க கொரோனா பாதிப்பின் தாக்கம் அதிகமுள்ள 70-க்கும் அதிகமான மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டிலிருந்தே வேலை செய்வது, பள்ளிகளுக்கு விடுமுறை, சினிமா படப்பிடிப்புகள் ரத்து, கோயில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லத் தடை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து முடக்கம், மாநில மற்றும் வெளிநாடுகளுக்கு இடையேயான பயணங்களுக்குத் தடை என இதுவரை வரலாறு காணாத வகையில் உலக மக்கள் அனைவருடைய இயல்பு வாழ்க்கையையும் முடக்கிப்போட்டிருப்பதுடன், பெரும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியிருக்கிறது கொரோனா பாதிப்பு.

கொரோனா
கொரோனா

கொரோனாவுக்குத் தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொற்றுநோய் என்பதால், மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வதால் ஒருவர் மூலம் பிறருக்கு கொரோனா தொற்று ஏற்படாது. எனவே, மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என உலகின் பெரும்பாலான நாடுகளின் அரசு தங்கள் நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. அதன் ஒருகட்டமாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே, பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்தியாவில் `மக்கள் ஊரடங்கு’க்கு உத்தரவிட்டார்.

`வீடு உள்ள மக்கள் வீட்டில் இருந்தபடியே தங்கள் பணிகளைச் செய்வார்கள், தங்களைத் தற்காத்துக்கொள்வார்கள். ஆனால், வீடில்லாத ஆதரவற்றவர்கள் மற்றும் யாசகர்கள் என நம் நாட்டில் லட்சக்கணக்கானோர் பாதுகாப்பற்ற சூழலில்தான் வசிக்கிறார்கள். அவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படாதா? அவர்களின் உயிரும் பாதுகாப்பும் முக்கியம்தானே? அவர்களைக் காப்பாற்ற அரசு உட்பட நாம் எல்லோரும் என்ன செய்யப் போகிறோம்?’ என்ற கேள்வியைத் தொடர்ந்து முன்வைத்துவருகிறார், நடிகை ஸ்ரீப்ரியா.

இதுதொடர்பாக ஶ்ரீப்ரியா சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துவருகிறார். அவரிடம் பேசினேன்.

கொரோனா
கொரோனா

``மக்களின் நலன் கருதியே கொரோனாவின் பாதிப்பைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதுகுறித்த விழிப்புணர்வு செய்திகள், வீடில்லாத ஆதரவற்ற மக்களுக்கும் சரியாகப் போய் சேர்ந்திருக்கிறதா என்ற கேள்விதான் சமீபத்தில் என்னை மிகவும் யோசிக்க வைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா வைரஸ் குறித்து பி.ஹெச்டி முடித்திருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் பவித்ரா, கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது குறித்து ஊடகங்களில் அளித்திருக்கும் பேட்டிகளில் பயனுள்ள கருத்துகளைத் தெரிவித்துவருகிறார். அதில், `கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன’ என்கிறார். மழை, வெயில், பனி உட்பட எல்லாக் கால நிலையிலும் இருந்து பழக்கப்பட்டதால், வீடில்லாத மக்களுக்கு ஒருவேளை நோய் எதிர்ப்புச் சக்தி நம்மைவிடவும் கூடுதலாகவும் இருக்கலாம். ஆனாலும், கொரோனா தொற்று நோய் என்பதால் அந்த மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதா? ஒருவேளை அவர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதனால் பிறருக்கும் நோய் பரவாமல் இருப்பதை எப்படித் தடுக்க முடியும்?

தற்போது இத்தாலியில்தான் அதிக நோய்த் தொற்றும், உயிரிழப்புகளும் நிகழ்கிறது. அப்பாவி மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஆரம்பக்கட்டத்திலேயே ஏற்படுத்தாததால்தான் அதிக அளவிலான பாதிப்பு எனச் சொல்கிறார்கள். அதுபோன்ற இக்கட்டான சூழலுக்கு நாமும் இடம்கொடுத்துவிடக் கூடாது.
ஸ்ரீப்ரியா

மக்கள் ஊரடங்கின் ஒருபகுதியாக பிரதமரின் வேண்டுகோள்படி நேற்று மாலை 5 மணிக்கு என் வீட்டு மொட்டைமாடியில் கைதட்டும்போது, நான் வசிக்கும் சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியைச் சுற்றியிருந்த ஏராளமான மக்கள் ஆர்வமுடன் கைதட்டி, மணி அடித்து மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி கூறினார்கள். மக்களின் ஒற்றுமை மற்றும் ஆதரவைப் பார்த்து எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது. பிறகு, இதுகுறித்து என் மருத்துவர் நண்பர் ஒருவரிடம் தொலைபேசியில் கூறினேன். அவர், `இன்று மருத்துவமனைக்கு நான் செல்லும்போது சாலையின் ஓரத்தில் சில யாசகர்கள் உரிய பாதுகாப்பு இல்லாமல் இருந்ததைப் பார்த்து வருத்தப்பட்டேன்’ என்றார்.

ஒரே நாளில் 793 மரணம்... இத்தாலியைக் கொரோனா சூறையாடக் காரணம் என்ன?

`நோய் பாதிப்பு பரவுவதைத் தடுக்க மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று அரசு தொடர்ந்து சொல்லி வருகிறது. நானும் என் குடும்பத்தினரும், வீடுள்ள மக்கள் அனைவருமே எங்களைத் தனிமைப்படுத்திக்கொள்கிறோம். வீடில்லாத மக்கள் தங்களை எப்படித் தனிமைப்படுத்திக்கொள்வார்கள்? கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்கத் தினமும் பலமுறை கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். வீடில்லாத மக்களுக்கு அந்தத் தகவலை யார் சொல்வது? சாப்பாட்டுக்கே சிரமப்படும் அவர்களுக்கு கைகழுவுவதற்கு சோப்பு மற்றும் சானிடைஸர், முகக்கவசம் உள்ளிட்ட பொருள்களை யார் வாங்கிக் கொடுப்பது? வீடில்லாத நிலையில் அவர்கள் அடிக்கடி கைகழுவ தண்ணீர் வசதியை எப்படி உறுதி செய்வது? போன் வசதி இல்லாத, அன்றாட உலக நிகழ்வுகள் குறித்துச் சரியாகத் தெரியாத அம்மக்களுக்குத் தற்போதைய அசாதாரண சூழலில் தற்காப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டுமல்லவா?

ஸ்ரீப்ரியா
ஸ்ரீப்ரியா

`130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், எங்கோ சில மூலைகளில் இருக்கும் வீடில்லாத மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமா?’ என்ற கேள்வி சிலருக்கு ஏற்படலாம். அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தானே? அவர்கள் எங்கோ நம் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் இல்லை. நம் வீடுகளுக்கு அருகில், அன்றாடம் நாம் பயணிக்கும் சாலைகளின் ஓரத்தில்தான் இருக்கிறார்கள். அலுவலக வேலையை முடித்துவிட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதி வழியாக வரும்போது, அங்கு வீடில்லாமல் வாழும் மக்களைத் தினமும் பார்ப்பேன். `இந்த நிலையிலும் மகிழ்ச்சியுடன் இவர்களால் வாழ முடிவது பாராட்டுக்குரியது’ என நினைப்பேன். ஆனால், தற்போதைய அசாதாரண சூழலில் அந்த மக்களெல்லாம் எப்படி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு தோன்றிய சீனாவைவிட, தற்போது இத்தாலியில்தான் அதிக நோய்த் தொற்றும், உயிரிழப்புகளும் நிகழ்கிறது. அப்பாவி மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஆரம்பக்கட்டத்திலேயே ஏற்படுத்தாததால்தான் அதிக அளவிலான பாதிப்பு எனச் சொல்கிறார்கள். அதுபோன்ற இக்கட்டான சூழலுக்கு நாமும் இடம்கொடுத்துவிடக் கூடாது.

மக்கள் ஊரடங்கு
மக்கள் ஊரடங்கு

`மக்கள் ஊரடங்கு நடைபெறும்போது வீடில்லாத ஆதரவற்ற மக்கள் சென்னை மாநகராட்சி சமுதாயக் கூடங்களில் தங்க வைப்படுவார்கள்’ என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி வீடில்லாத மக்கள் அனைவருமே நேற்று தங்கவைப்பட்டார்களா எனத் தெரியவில்லை. ஒருவேளை சிலர் மட்டும் தங்க வைக்கப்பட்டார்கள் எனில், இனிவரும் காலங்களில் அந்த மக்களுக்கான பாதுகாப்புக்கு மாற்று ஏற்பாடு என்ன? யாரும் எதிர்பாராத வகையில், நோய்த் தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாகத் தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தைத் தனிமைப்படுத்தியிருக்கிறார்கள். அதனால் கிராமம் முதல் நகர்புறப் பகுதியினர் வரை அனைவரும் தற்காப்புடன் இருக்க வேண்டும் எனில், சென்னையைத் தவிர தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வீடில்லாத, யாசகர்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்யப்போகிறோம்?

இதையெல்லாம் குற்றச்சாட்டாக நான் சொல்லவில்லை. வீடில்லாத மக்களின் பாதுகாப்புக்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால், அதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அதன் மூலம் பல்வேறு தன்னார்வலர்களும் அரசுடன் இணைந்து ஆதரவற்ற மக்களுக்கு உதவ முன்வருவார்கள். அல்லது இனியாவது அந்த மக்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்பவர், தினக்கூலி தொழிலாளர்கள் குறித்துச் சில கருத்துகளை முன்வைத்தார்.

கொரோனா
கொரோனா

``அரசின் உத்தரவுப்படி, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பலரும் வீட்டில் இருந்தபடியே பணியாற்றுகிறார்கள். தனியார் நிறுவன பணியாளர்களுக்கூட டெல்லி அரசு முழு ஊதியத்துடன், மார்ச் 31-ம் தேதிவரை விடுமுறை அளித்திருக்கிறது. இதுபோல பல்வேறு தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளித்துள்ளன. இதனால், பொருளாதார ரீதியாக அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்குப் பெரிதாகப் பாதிப்பு ஏற்படாது. ஆனால், தற்போது வேலைவாய்ப்பை இழந்துள்ள தினக்கூலி தொழிலாளர்களின் பொருளாதாரப் பாதிப்பை எப்படிச் சரிசெய்வது? இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் விரைவாக உரிய நடவடிக்கை எடுத்தால், அது பல லட்சம் மக்களின் அச்சத்தை மட்டுமின்றி, கொரோனாவின் பாதிப்பு சரியாகும்வரை சிக்கலின்றி வாழ்வதற்கும் பேருதவியாக அமையும்.

இதையெல்லாம் ஓர் அரசியல் கட்சியின் உறுப்பினர், சினிமா பிரபலம் என்ற முறையில் இல்லாமல், சக குடிமகளாகவே அரசுக்கு இந்தக் கோரிக்கைகளை முன்வைக்கிறேன். அரசுக்குச் சொல்வதோடு என் கடமை முடிந்துவிட்டதாக நினைக்காமல், இதுகுறித்து தொடர்ந்து சில நாள்களாகச் சமூக வலைதளம் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். நேற்று ஃபேஸ்புக் லைவ் செய்து பலரிடம் உரையாடினேன். அரசுடன் இணைந்து தன்னார்வலர்களும் உதவ முன்வர வேண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அந்தப் பணிகளில் என்னால் இயன்ற பங்களிப்பை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்” என்றார் ஸ்ரீப்ரியா.

கொரோனா
கொரோனா

வீடில்லாத மக்களின் பாதுகாப்புக்கு அரசு செய்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து அறிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் உதவியாளர் மூலமாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள பலமுறை முயன்றோம். ஆனால், அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை. இதுதொடர்பாக அரசு மற்றும் மாநகராட்சி தரப்பில் அதிகாரிகள் விளக்கமளிக்க முன்வந்தால் அவர்களின் கருத்துகளையும் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

கொரோனா ஏற்பாடுகள்... இந்தியாவில் இந்த 5 மாநிலங்களின் நிலை என்ன? #Corona
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு