Published:Updated:

வறுமையால் படிப்பை நிறுத்திய மாணவி; கல்வி, இலவச வீடு வழங்க ஆட்சியர் உடனடி நடவடிக்கை!

விசாரணை
News
விசாரணை

``ஃபிளெக்ஸ் பேனர்களை எடுத்து வந்து டென்ட் அமைத்து வாழ்ந்து வருகிறோம். மனைவியும் நானும் மட்டும்தான் என்றால் எப்படியாவது காலத்தைக் கழித்துவிடுவோம். ஆனால், வயதுக்கு வந்த பெண்ணை வைத்துக்கொண்டு எத்தனை நாள் தெருவில் தூங்குவது?"

வறுமையால் படிப்பை நிறுத்திய மாணவி; கல்வி, இலவச வீடு வழங்க ஆட்சியர் உடனடி நடவடிக்கை!

``ஃபிளெக்ஸ் பேனர்களை எடுத்து வந்து டென்ட் அமைத்து வாழ்ந்து வருகிறோம். மனைவியும் நானும் மட்டும்தான் என்றால் எப்படியாவது காலத்தைக் கழித்துவிடுவோம். ஆனால், வயதுக்கு வந்த பெண்ணை வைத்துக்கொண்டு எத்தனை நாள் தெருவில் தூங்குவது?"

Published:Updated:
விசாரணை
News
விசாரணை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அமைச்சியார்பட்டியைச் சேர்ந்தவர் சந்தனம். இவரின் மனைவி ஆரோக்கிய மேரி. இந்தத் தம்பதிக்கு செல்வராணி (வயது 16) என்ற மகள் உள்ளார். அடிப்படை அடையாள அட்டைகளான ஆதார், ரேஷன், இருப்பிடச்சான்று, சாதிச்சான்று என எதுவும் இல்லாத நிலையில் வீட்டின் அன்றாட தேவைகளுக்கே சிரமப்பட்டு வந்த சந்தனம் குடும்பத்தினர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியை சந்தித்து உதவிகேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், `ஏழ்மையில் இருக்கும் எங்கள் குடும்பத்துக்கு அரசு உதவியின் பேரில் இலவச வீடு வழங்க வேண்டும். மேலும், ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட தேவைகளை நிவர்த்தி செய்து தர வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்பேரில், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி, உதவிகளைச் செய்ய மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, அமைச்சியார்பட்டியில் செல்வராணியின் குடும்பத்தை நேரில் சந்தித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், அந்தக் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

செல்வராணி வீடு
செல்வராணி வீடு

இதுகுறித்து சந்தனம் நம்மிடம் பேசுகையில், ``எங்களுக்கு செல்வராணி ஒரே மகள். பெண் பிள்ளையின் எதிர்காலம் குறித்த கனவுகள் எல்லாம் சிறகடித்துக்கொண்டிருந்தன. ஆனால், என் சம்பாத்தியம் வீட்டுக்குப் போதவில்லை. மேலும், மனைவிக்கு உடல்நலம் மோசமடைந்ததால், மருத்துவச் செலவுகளும் தலைமேல் ஏறிவிட்டது. அந்த நேரம் என் மகள் செல்வராணி பத்தாம் வகுப்பு முடித்திருந்தாள். மேற்கொண்டு படிக்க வைக்க வேண்டுமென்று எனக்கு ஆசை. ஆனால், வீட்டு நிலைமையோ தலைகீழ். எனவே, வேறு வழியின்றி, மனமில்லாமல் மகள் செல்வராணியை வேலைக்கு அனுப்பினேன்.

ராஜபாளையத்தில் தையல் நிறுவனம் ஒன்றில் துணிமடிக்கும் வேலைக்கு அவள் சென்று வந்தாள். தினக்கூலியாக 200 ரூபாய் கிடைக்கும் பணத்தைக் கொண்டு அன்றாடச் செலவுகளைக் கவனித்து வந்தோம். உடன்பிறந்தவர்கள் அனைவருக்கும் சொத்தில் பங்கு பிரித்தது போக எங்களுக்கு மிச்சமானது இந்தத் துண்டு நிலம் மட்டும்தான். நாங்கள் இருக்கிற இந்த இடம் எங்களுடைய சொந்த நிலம். இது ஒன்றுதான் கைவசம் சொத்து எனச் சொல்வதற்கு இருக்கும் ஒரே விஷயம்.

மனைவியும் நானும் மட்டும்தான் என்றால் எப்படியாவது காலத்தைக் கழித்துவிடுவோம். ஆனால், வயதுக்கு வந்த பெண்ணை வைத்துக்கொண்டு எத்தனை நாள்கள் தெருவில் தூங்குவது? இடம் மட்டும் இருக்கும் என்னிடம் வீடு கட்டுவதற்கு பணம் இல்லை. திருமண வீடுகள், நிகழ்ச்சி வீடுகளில் வெளியே கட்டியிருக்கும் ஃபிளெக்ஸ் பேனர்களை, நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர்களிடம் கெஞ்சிக் கேட்டு வாங்கி வந்து அதில்தான் டென்ட் அமைத்து மனைவி, மகளுடன் வாழ்ந்து வருகிறேன். உதவியென்று கேட்டுப்போக ஒரு வழியும் தெரியாததால் திக்கற்று பரிதவித்தேன். எங்களுக்கென ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்று, சாதிச்சான்று என எதுவுமே கிடையாது. அரசாங்க உதவிகள் வேண்டுமென மனு கொடுத்தாலும் அதற்கு இத்தனை ஆவணங்களும் தேவையாக இருந்தன. இவற்றை எடுப்பதற்குக் கூட என்னிடம் பணம் இல்லை. தினம், தினம் எனது இயலாமையை நினைத்து வருத்தப்படுவதுதான் என்னால் முடிந்தது.

விசாரணை நடத்திய ஆர்.டி.ஓ.
விசாரணை நடத்திய ஆர்.டி.ஓ.

வாழ்ந்து முடித்துவிட்ட நாங்கள் இனி எப்படி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், படிக்க வேண்டிய வயதில் வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றும் என் மகளை கரை சேர்க்க வேண்டும் என்ற கவலைதான் என்னைக் கொன்றது. எனவே, தெரிந்தவர்கள் மூலம் உதவி கேட்டு, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்றோம். மனு கொடுக்கச் செல்வதற்கும் கூட பஸ் செலவு உள்ளிட்டவற்றை எங்கள் நிலைமையைப் பார்த்து பரிதாபப்பட்ட நபர் ஒருவர்தான் தந்தார். அவருக்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.

மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியை சந்தித்துப் பேசியபோது, உடனடியாக அதிகாரிகள் குழுவை அனுப்பி உதவிகள் செய்ய நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கை தெரிவித்தார். அதேபோல மறுநாளே எனது இருப்பிடத்துக்கு தேடி வந்த அதிகாரிகள், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்று, சாதிச்சான்றிதழ், வருமானச் சான்று உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு குறிப்பு எடுத்துச் சென்றார்கள். மகள் செல்வராணியைப் படிக்க வைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, என் குடும்பத்துக்கு உதவிகள் கிடைப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் இனி நீடிக்கும் என்று நம்புகிறேன். எனக்கு நன்றாக வாழ வேண்டும் என்று ஆசை இல்லை. ஆனால், என் மகளை நன்றாக வாழ வைக்க வேண்டும். அந்தளவுக்கு என் நிலைமை சீரானால் போதும்" என வறுமை கலந்த ஏக்கத்தோடு பேசினார்.

வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதனிடம் பேசுகையில், ``உதவி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த செல்வராணி குடும்பத்தினரை, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவின் பேரில் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினோம். மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வரும் அவர்களிடம் ஆதார், ரேஷன் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை. அந்தக் குடும்பத்தில் செல்வராணிக்கு மட்டுமே ஆதார் எண் உள்ளது. பழைய ரேஷன் கார்டின் ஜெராக்ஸ் மட்டுமே அவர்களிடம் கைவசம் உள்ள ஒரே ஆவணப் பிரதி. எனவே, முதற்கட்டமாக அவர்களுக்கு தேவையான அடையாள அட்டைகளைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் மூலமாக செல்வராணியின் அப்பா சந்தனம், அம்மா ஆரோக்கியமேரி ஆகியோருக்கு ஆதார் அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுதவிர அவர்களுக்கான இருப்பிடச்சான்று, வருமானச்சான்று, சாதிச்சான்றிதழ் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வறுமையால் படிப்பை நிறுத்திய மாணவி; கல்வி, இலவச வீடு வழங்க ஆட்சியர் உடனடி நடவடிக்கை!

ஆதார் கார்டு பெறப்பட்ட பின்னர் அதை வைத்து ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்வராணியின் கல்வியைத் தொடர்வதற்கு கல்வி அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளோம். இந்தக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான நேரம் கடந்துவிட்டதால் இந்தக் கல்வி ஆண்டில் செல்வராணியின் படிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அவருடைய 10-ம் வகுப்பு சான்றிதழ்களை பெற்று எதிர்வரும் கல்வியாண்டில் சிவந்திபட்டியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் மேல்நிலைக் கல்வி தொடர்வதற்கு எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், கல்வி தொடர்பாக செல்வராணிக்குத் தேவைப்படும் உதவித்தொகை உட்பட அனைத்து உதவிகளைச் செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். விருப்பத்தின்பேரில் விடுதியில் தங்கி செல்வராணி பயில்வதற்கும் பரிந்துரைகளை வழங்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. குடும்பத்தின் வாழ்வாதார நிலையை மேம்படுத்துவதற்கு அரசு திட்டத்தின் மூலமாக இலவச வீடு வழங்குவதற்கும் ஆலோசித்து வருகிறோம். அதற்கான ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.