”எங்களை டார்ச்சர் செய்கிறார்!” - துணை இயக்குநருக்கு எதிராகக் களம் இறங்கிய ஊழியர்கள்

``பொது சுகாதாரத்துறையில் உள்ள முறைகேடுகளுக்குத் துணை இயக்குநரே காரணம் எனக் கூறுகிறார்கள்'' அத்துறையின் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்.
தேனி மாவட்ட பொது சுகாதாரத்துறையில் ஊழல் நடப்பதாகவும், அதற்கு துணை இயக்குநரே காரணம் என்றும் கூறுகிறார்கள், அத்துறையின் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்.
தேனி மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குநராகக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பதவியில் இருப்பவர், டாக்டர். வரதராஜன். இவர், பொது சுகாதாரத்துறையில் பல முறைகேடுகளில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்துள்ளதாகவும், ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் மனரீதியான தொந்தரவு கொடுப்பதாகவும், அத்துறையினர் மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டனர்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் கருப்பையா, ”தேனி மாவட்ட வரலாற்றில், பொது சுகாதாரத்துறை இணை இயக்குநரை மாற்றுங்கள் என இதுவரை நாங்கள் கோரிக்கை வைத்ததில்லை. அந்த அளவிற்கு நேர்மையான அதிகாரிகள் இருந்த இடத்தில் வரதராஜன் வந்து அமர்ந்துகொண்டு எங்களை டார்ச்சர் செய்கிறார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்துவதில் தொடங்கி, தேசிய குடற்புழு நீக்க நாள் பயிற்சி வழங்கியதாகக் கூறி பணம் கொள்ளையடித்தது வரை பல லட்சம் ரூபாய் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார், வரதராஜன்.

அவர், எந்தெந்த வழியில் லஞ்சம் வாங்கியுள்ளார், எப்படியெல்லாம் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என மொத்த பட்டியலையும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளோம்” என்றார். இது தொடர்பாக விளக்கம் பெற வரதராஜனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, விளக்கம் அளிக்க மறுத்துவிட்டார்.
தேனி மாவட்ட ஆட்சியரிடம் பேசியபோது, “நேர்மையான அதிகாரிகள் சில சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கும்போது, இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுவது வாடிக்கை. ஆனால், அனைத்து ஊழியர்களும் குற்றம் சாட்டுகிறார்கள் எனும்போது, நிச்சயம் இது தொடர்பாக நான் விசாரிக்கிறேன். அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மையானால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.