Published:Updated:

திடீரென உடைந்து விழுந்த அரசுப் பேருந்தின் படிக்கட்டு! - அதிர்ச்சியில் பயணிகள்

திடீரென உடைந்து விழுந்த அரசுப் பேருந்துப் படிக்கட்டு - அதில் பயணித்த மாணவர்கள் தப்பியது எப்படி?

மயிலாடுதுறை  -  பொறையாறு வழித்தடத்தில் 27 ஏ என்கிற அரசுப் பேருந்து இயங்கிவருகிறது. நேற்று (23.11.2021) மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்ட இந்தப் பேருந்தில் 106 பயணிகள் பிரயாணம் செய்துள்ளனர். அதிகமான பயணிகள்  காரணமாக பேருந்துக்குள் நிற்க இடமில்லாததால், கல்லூரி மாணவர்கள் சிலர் படிக்கட்டில் நின்றபடி பயணித்துள்ளனர்.

பேருந்துப் படிக்கட்டு
பேருந்துப் படிக்கட்டு

இந்த நிலையில் தரங்கம்பாடி சாலையில் பெரிய மாரியம்மன் கோயில் அருகில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, பேருந்தின் பின்பக்கப் படிக்கட்டு திடீரென உடைந்து கீழே விழுந்தது. பேருந்தில் அதிக கூட்டம் இருந்ததாலும், அந்தப் பகுதியில் வேகத்தடை இருந்ததாலும் பேருந்து மெதுவாகச் சென்ற காரணத்தால் படியில் நின்றபடி பயணம் செய்த மாணவர்கள் நல்ல வாய்ப்பாக கீழே இறங்கி எந்தவித காயமும் இன்றி தப்பினர். படிக்கட்டு உடைந்ததுகூட  தெரியாமல் சென்ற பேருந்தை, மாணவர்கள் கூச்சலிட்டு ஓட்டுநருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து பேருந்து நிறுத்தப்பட்டது.

நாகப்பட்டினம்: `ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம்!’ - மத்திய குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை

பின்னர் பேருந்தின் நடத்துநர் கீழே இறங்கிச் சென்று சாலையில் உடைந்து கிடந்த பேருந்தின் படிக்கட்டை எடுத்து பேருந்தில் போட்டுக்கொண்ட பின்னர் பேருந்து மீண்டும் புறப்பட்டுச் சென்றது. 

இதன் காரணமாக பயணிகள் பேருந்தில் அச்சத்துடனேயே தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

பேருந்துப் படிக்கட்டு
பேருந்துப் படிக்கட்டு

இது குறித்து, கும்பகோணம் போக்குவரத்துக்கழகக் கோட்ட மேலாளர் ராஜ்மோகன் கூறுகையில், "தினசரி பேருந்துகள் சோதனைக்குப் பின்னரே இயக்கப்படுகின்றன. அந்தப் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையின் பள்ளத்தில் பேருந்து இறங்கியதன் காரணமாகவே  படிக்கட்டு உடைந்திருக்கிறது. எதிர்காலத்தில் இது போன்ற அசம்பாவிதம் நடக்காமல் இருக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு