Published:Updated:

`செயற்கைக் கால் பொறுப்பை நாங்கள் ஏற்போம்'- கோவை அ.தி.மு.க கொடி விபத்து தொடர்பாக ஸ்டாலின்

கோவையில் அ.தி.மு.க கொடிக்கம்பத்தால் விபத்து ஏற்பட்ட அனுராதா விஷயத்தில், எடப்பாடி பழனிசாமி அலட்சியம் காட்டுவதால், அனுராதா குடும்பத்தினருக்கு தி.மு.க துணை நிற்கும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கோவை சிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அனுராதா என்கிற ராஜேஷ்வரி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், கடந்த 11-ம் தேதி அவிநாசி சாலை கோல்டுவின்ஸ் பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அ.தி.மு.க சார்பில் சாலையில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் விழும் நிலையில் இருந்துள்ளது.

அனுராதா
அனுராதா

இதையடுத்து, அனுராதா சடர்ன் பிரேக் போட்டு கீழே விழுந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த லாரி அனுராதா மீது ஏறியது. இதில், அனுராதா படுகாயமடைந்தார்.

அ.தி.மு.க கொடியால் விபத்து... கோவைப் பெண்ணின் கால் அகற்றம்!

இந்த விபத்துக்கு அ.தி.மு.க கொடிக்கம்பம்தான் காரணம் என்று அனுராதா தரப்பில் சொன்னாலும், போலீஸார் லாரி டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அனுராதாவை மருத்துவமனையில் அனுமதித்த வடிவேல் என்பவரை நீண்ட நேரம் காவல்நிலையத்தில் வைத்து மிரட்டியதாகவும் புகார் உள்ளது.

அ.தி.மு.க கொடி
அ.தி.மு.க கொடி

ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் காவல்துறையும் கொடிக்கம்பத்துக்கும் விபத்துக்கும் தொடர்பு இல்லை என்று கூறி வருகின்றனர்.

ஆனால், ஆரம்பத்திலிருந்தே தி.மு.க, அனுராதா தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின், அனுராதா பெற்றோரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அப்போது, அனுராதா சிகிச்சைக்காக தி.மு.க தரப்பல் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை ஸ்டாலின் வழங்கினார்.

இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ‘எடப்பாடி பழனிசாமி கடந்த 11-ம் தேதி கோவை வந்திருந்தார். அவரை வரவேற்க, சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் கொடிக்கம்பங்கள் நடப்பட்டிருந்தன. விபத்தில் சிக்கிய அனுராதாவுக்கு ஒரு கால் எடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க கொடி
அ.தி.மு.க கொடி

நினைத்துப் பார்க்க முடியாத துயரமாக இந்தச் சம்பவம் இருக்கிறது. விபத்துக்கு முக்கிய காரணமான அ.தி.மு.க மீது வழக்குப் பதியப்படவில்லை.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அலட்சியமாக பதிலளித்திருப்பது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது. குறிப்பாக, இந்தச் சம்பவத்தை மறைப்பதற்கே அரசு அதிகம் முயற்சி செய்து வருகிறது. அனுராதாவைக் காப்பாற்ற அரசு முழுப் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அனுராதாவுக்குச் செயற்கை கால் பொறுத்துவதற்கான பொறுப்பை தி.மு.க ஏற்றுக்கொள்ளும். அனுராதாவின் குடும்பத்துக்கு நாங்கள் எப்போதும் துணை நிற்போம்’ என்றார்.