Published:Updated:

மத்திய அரசின் திட்டம்; வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட தள்ளுவண்டியில் ஸ்டாலின் படம்... பாஜக எதிர்ப்பு!

இலவச தள்ளுவண்டியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்
News
இலவச தள்ளுவண்டியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்

நலிவடைந்த சாலையோர வியாபாரிகளுக்காக இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதற்கான நிதியையும் ஒதுக்கி, இலவசமாக வழங்கிவருகிறது.

மத்திய அரசின் திட்டம்; வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட தள்ளுவண்டியில் ஸ்டாலின் படம்... பாஜக எதிர்ப்பு!

நலிவடைந்த சாலையோர வியாபாரிகளுக்காக இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதற்கான நிதியையும் ஒதுக்கி, இலவசமாக வழங்கிவருகிறது.

Published:Updated:
இலவச தள்ளுவண்டியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்
News
இலவச தள்ளுவண்டியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்

மத்திய அரசு 2014-ல் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டுச் சட்டத்தை அமல்படுத்தியது. அந்தச் சட்டத்தின்படி, சாலையோர வியாபாரிகளுக்குப் பொருள்களை விற்பனை செய்யும் வசதி, தங்கும் வசதி ஆகியவை மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளால் செய்து தரப்பட வேண்டும். இதற்கான செலவினங்களில் மத்திய அரசு பங்குவகிக்கும் என அறிவித்து செயல்படுத்திவருகிறது.

 இலவச தள்ளுவண்டி வழங்கப்பட்டது
இலவச தள்ளுவண்டி வழங்கப்பட்டது

மேலும், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு பொருள்களை இருப்பு வைக்கும் வசதி, வெயில் மற்றும் மழையிலிருந்து பொருள்களைப் பாதுகாக்கும் வகையில் மேற்கூரை வசதி, எளிதில் சேதமடையாத வகையில் அலுமினியத் தகடால் வடிவமைக்கப்பட்ட நவீன தள்ளுவண்டிகளை வழங்கிவருகிறது. அதன்படி, ராமநாதபுரம் நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுக்கப்பட்டு, 350-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. அதில் முதற்கட்டமாக தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 80 வியாபாரிகளுக்கு இந்த நான்கு சக்கர வண்டிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதற்காக, பயனாளிகளுக்கு நகராட்சி நிா்வாகம் டோக்கன் வழங்கியிருந்தது.

இதையடுத்து, ராமநாதபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் வியாபாரிகளுக்கு நான்கு சக்கர தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. அப்போது நகராட்சி நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த பேனரிலும், இலவச நான்கு சக்கர தள்ளுவண்டியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி படங்கள் மட்டும் இடம்பெற்றிருந்தன. `மத்திய அரசு திட்டம் மற்றும் நிதியில் வழங்கப்படும் இந்த இலவச வண்டிகளில் தமிழக முதலமைச்சர் படத்தை மட்டும் இடம்பெறச் செய்து, மாநில அரசு சொந்த நிதியில் வழங்குவதுபோல் விளம்பரம் தேடுவது எந்த வகையில் நியாயம், ஸ்டிக்கரைக் கிழித்துவிட்டுத்தான் வழங்க வேண்டும்’ என பா.ஜ.க கவுன்சிலர் குமார் கூச்சலிட்டதால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை மற்ற கவுன்சிலர்களும், அதிகாரிகளும் சமாதானப்படுத்தினர்.

பா.ஜ.க கவுன்சிலர் குமார்
பா.ஜ.க கவுன்சிலர் குமார்

இது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க கவுன்சிலர் குமார், "நலிவடைந்த சாலையோர வியாபாரிகளுக்காக இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதற்கான நிதியையும் ஒதுக்கி, இலவசமாக வழங்கிவருகிறது. ராமநாதபுரத்தில் மத்திய அரசு திட்டத்தில் வழங்கும் இந்த இலவசத் தள்ளுவண்டியில் மு.க.ஸ்டாலின், கருணாநிதி பட ஸ்டிக்கரை ஒட்டி, மாநில அரசு வழங்குவதுபோல் மக்களை ஏமாற்றுகின்றனர். இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர், மதுரை மண்டல நகராட்சி ஆணையாளரிடம் புகாரளிக்கவிருக்கிறோம்'' எனக் கூறினார்.