தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது நிறுவனங்கள் குழுவினர் நீலகிரி மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். குன்னூரில் உள்ள அரசு தேயிலை தோட்ட தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டு தொழிற்சாலை குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, ஊட்டியில் தாட்கோ மூலம் கட்டப்பட்டு வரும் மாணவர் விடுதியை பார்வையிட்டனர். பின்னர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்குட்பட்ட சிங்கார நீர்மின் உற்பத்தி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஊட்டியில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய குழுவின் தலைவர் எஸ்.ஆர்.இராஜா, ``தமிழக அரசின் வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் டேன்டீ நிறுவனத்தின் பிரச்னைகள் அனைத்தையும் முழுமையாக கேட்டறிந்திருக்கிறோம். 220 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாகத் தெரிவித்துள்ளனர். இதை எப்படி லாபத்தில் இயக்குவது என ஆய்வு மேற்கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட செயலர்களை வரவழைத்து சென்னையில் தனி கூட்டம் நடத்தப்படும். இதன் மூலம் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவும், தேயிலை விற்பனையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.