Published:Updated:

``ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்!” - உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா மனு

பழைய நிலைமைக்கு மீட்டு இயங்க வைக்க 200 கோடி ரூபாய் வரை செலவாகும் என வேதாந்தா தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான முழு நுழைவுரிமை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது. 28 மே 2018-ல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு முழுவதுமாகச் சீல் வைத்தது தமிழக அரசு. அதன் பிறகு, தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உச்ச நீதிமன்றத்தில் கொடுத்த ஆய்வறிக்கையின்படி வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா மனு!
உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா மனு!

இருந்தும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் தமிழக அரசும் இதுதொடர்பாக முழு அனுமதியை இன்னும் அளிக்கவில்லை. உயர் நீதிமன்றமும் தமிழக அரசின் நிலைப்பாட்டிலேயே இருக்கிறது. ஆலையை மீண்டும் திறப்பதற்கான செயல்பாடுகள் கிடப்பில் இருக்கின்றன.

`சாதிரீதியாக மக்களிடம் பிளவை ஏற்படுத்த ஸ்டெர்லைட் முயற்சி!' - குற்றம் சாட்டும் எதிர்ப்பாளர்கள்

அதனால், ஆலைக்குள் நுழைய முழு உரிமை கோரி புதிய மனு ஒன்றை வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்துள்ளது. மேலும், திறக்கப்படாத இடைப்பட்ட காலத்தில் ஆலையில் உள்ள இயந்திரங்கள், இயங்காத காரணத்தால் பழுதடைந்துள்ளன. மழைபெய்த நீர்த்தேக்கத்தைக்கூடச் சரிசெய்ய இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இயந்திரங்கள் துருப்பிடித்திருக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால், அவற்றைச் சரிசெய்வதற்கும் ஆலையை மீண்டும் பழைய நிலைமைக்கு மீட்டு இயங்க வைப்பதற்கும் 200 கோடி ரூபாய் வரை செலவாகும்' என வேதாந்தா தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

அண்மையில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்திருந்த தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம், தூத்துக்குடியின் வளிமண்டலக் காற்று கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தூய்மை அடைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்ததை இந்தச் சூழலில் கவனிக்க வேண்டியிருக்கிறது. வாரியம் அளித்திருந்த பதிலின்படி 2017- ஆண்டில், 85 சதவிகிதம் வரை மாசடைந்திருந்த தூத்துக்குடி பகுதியின் காற்று, 2018-ம் ஆண்டில் 70.83 சதவிகிதமாகக் குறைந்திருந்தது எனவும் 2019-ம் ஆண்டில் அது 29 சதவிகிதமாக இருந்தது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.