Published:Updated:

`போலீஸாரைக் குவித்து பீதியை ஏற்படுத்துகிறார்கள்' - கொதிக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு

உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் மக்கள் கூடிவிடக்கூடாது என்பதற்காக போலீஸார் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். அஞ்சலி செலுத்த வருபவர்களிடம் ஆதார் அட்டையைக் கேட்கின்றனர்.

தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ம் ஆண்டு சுற்றுவட்டார கிராம மக்கள், 100 நாள்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், 100-வது நாளான மே 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் பொதுமக்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசாணை பிறப்பித்தது. ஆலையும் மூடப்பட்டது.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேர்
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேர்

`ஸ்டெர்லைட் ஆலை ஒருபோதும் திறக்கப்படமாட்டாது’ என முதல்வர் பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்தார். இருப்பினும், மீண்டும் ஆலையைத் திறக்கும் முயற்சியில் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளது ஆலை நிர்வாகம். இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்த வழக்குகளை சி.பி.ஐ-யும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம், மே 22-ம் தேதியான இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதில் உயிரிழந்த 13 பேரின் வீடுகள், ஆலைக்கு எதிராகப் போரட்டம் நடைபெற்ற கிராமங்கள், பொது இடங்களில் 13 பேரின் உருவப்படம் தாங்கிய புகைப்படங்கள், பேனர்களுக்கு மாலை அணிவித்து, மலர்தூவியும், மெழுகுவத்தி ஏந்தியும் பொதுமக்கள், போராட்டக்குழுவினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

நினைவஞ்சலி
நினைவஞ்சலி

நினைவு நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக விசாரணை நடந்து வருவதைக் காரணம் காட்டி பொது நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு போலீஸார் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், நீதிமன்றத்தின் மூலம் பல நிபந்தனைகளுடன் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கைக் காரணம் காட்டியும், ஏற்கெனவே பொது இடங்களில் நான்கு பேருக்கு மேல் கூடுவதற்கு அனுமதியில்லை என்பதாலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு மட்டுமே நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போலீஸார் அனுமதி அளித்தனர். அரசியல் கட்சிகள், வணிக அமைப்புகள், இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படாததால் தி.மு.க, சி.பி.எம், அ.ம.மு.க உள்ளிட்ட கட்சியினர்கள், கட்சி அலுவலகங்களில் நினைவு அஞ்சலி செலுத்தினர்.

குவிக்கப்பட்ட போலீஸார்
குவிக்கப்பட்ட போலீஸார்

சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமல் இருக்க தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தாலுகாக்களில் உள்ள 56 டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், ”உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் மக்கள் கூடிவிடக்கூடாது என்பதற்காக போலீஸார் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். அஞ்சலி செலுத்த வருபவர்களிடம் ஆதார் அட்டையைக் கேட்கின்றனர்” எனக் கொந்தளிக்கிறார்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவினர்.

இதுகுறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசினோம், `` துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் இறப்பு நாளான இந்தக் கறுப்பு நாளை, உயிர்ச்சூழல் பாதுகாப்பு தினமாக இரண்டாம் ஆண்டாக கடைப்பிடிக்கிறோம்.

கிராமங்களில் போடப்பட்ட கோலங்கள்
கிராமங்களில் போடப்பட்ட கோலங்கள்

ஒருவாரமாகவே ஆலைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்த போராட்டக்குழுவினர், உயிரிழந்தவர்களின் வீடுகளை மறைமுகமாக போலீஸார் கண்காணித்து வந்தனர். மடத்தூர் கிராமத்தில் வைக்கப்பட்ட நினைவேந்தல் பேனரை அப்புறப்படுத்தியதுடன், பேனர் வைத்தவர் மீதும் சிப்காட் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல தடைகளையும் மீறிப் போராட்டம் நடைபெற்ற ஆலையைச் சுற்றியுள்ள 14 கிராமங்களிலும் மீண்டும் பேனர் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர் அப்பகுதி மக்கள்.

அத்துடன், ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கண்டன வாசகங்களை கோலமாக வரைந்துள்ளனர். 13 பேரின் ரத்தம்சிந்தி உயிரிழந்த நாளான இன்று, பண்டாரம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் தலைமையில் 6 பேர் அரசு மருத்துவமனையில் ரத்ததானம் செய்தனர். போன வருசம் மாதிரியே இந்த வருசமும் கொரோனாவைக் காரணம் காட்டி பொது நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துவிட்டது காவல்துறை. இந்தச் சூழலிலும் நினைவஞ்சலியைச் செலுத்தியுள்ளோம். நினைவஞ்சலி நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸாரை தூத்துக்குடி மாநகர் முழுவதும் குவித்து அவர்களே மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

ரத்ததானம் செய்த போராட்டக் குழுவினர்
ரத்ததானம் செய்த போராட்டக் குழுவினர்

உயிர்ச்சூழல் காக்க உயிர் நீத்த தியாகிகளுக்கு தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் நினைவு மண்டபம் அமைத்திட மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் அனுமதி அளிக்க வேண்டும். எங்களின் இக்கோரிக்கையைக் கடந்த 2 ஆண்டுளாகவே வலியுறுத்தி வருகிறோம். இதற்கு அனுமதி அளித்தால்மட்டும் போதும். நினைவுமண்டபத்தை நாங்களே கட்டிக்கொள்வோம்.

அரசால் மூடி சீல் வைக்கபட்ட ஒரு ஆலை நிர்வாகம், மக்களுக்கு நிவாரணம் என்ற பெயரிலும், வளர்ச்சித்திட்டம் என்ற பெயரிலும் மீண்டும் கால் ஊன்ற முயற்சிக்கும் நடவடிக்கைகளை அரசு தடுக்க வேண்டும். அதேபோல மூடப்பட்ட ஆலை நிர்வாகத்திடமிருந்து அரசு கொரோனா நிவாரணமாகப் பெற்ற ஐந்து கோடி ரூபாயை ஆலைத்தரப்பிடமே திருப்பி அளிக்க வேண்டும்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு