Published:Updated:

`சாதிரீதியாக மக்களிடம் பிளவை ஏற்படுத்த ஸ்டெர்லைட் முயற்சி!' - குற்றம் சாட்டும் எதிர்ப்பாளர்கள்

இ.கார்த்திகேயன்
ப.கதிரவன்

”பணத்தின் மூலம் மக்களிடையே சாதிரீதியாகப் பிளவை ஏற்படுத்தி, வேற்றுமையை உருவாக்க முயலும் ஸ்டெர்லைட் ஆலையின் ஊழல்மய நடவடிக்கைகளைத் தடுக்காவிட்டால், மக்கள் போராட்டம் நடைபெறும்” என ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மனு அளிக்க வந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள்
மனு அளிக்க வந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர், தூத்துக்குடியிலுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஸ்டெர்லைட் ஆலையின் ஊழல்மய நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தி, `தூத்துக்குடி மாவட்டத்தில் நிலம், நீர், காற்று, கடல் என அனைத்தையும் நஞ்சாக்கிய ஸ்டெர்லைட் ஆலை, இன்று மக்களிடையே சாதிரீதியான பிளவுகளை ஏற்படுத்திப் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஜூலை 24-ம் தேதி, சிப்காட் காவல் நிலைத்திலிருந்து பணிமாற்றத்தில் சென்ற ஆய்வாளருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தி, விருந்து வைத்து அனுப்பியுள்ளது, ஆலை தரப்பு.

அந்த விருந்தில், தூத்துக்குடியிலுள்ள மற்ற காவல் நிலையங்களின் ஆய்வாளர்களும் கலந்துகொண்டுள்ளனர். அதில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எந்தப் போராட்டம் நடந்தாலும், அதைப் பெரிதாக்காமல் பார்த்துக்கொள்கிறோம். அதற்காக, குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் வழங்குமாறு பேரம் பேசப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இத்தகவல், சமூக வளைதளங்களில் வைரலாகப் பரவியது. சம்பந்தப்பட்ட ஆய்வாளர்களிடம் எஸ்பி விளக்கமும் கேட்டுள்ளார். ஆய்வாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்பி-யிடம், நெல்லைச் சரக டிஐஜி-யிடமும் புகார் மனு அளித்துள்ளோம்.

ஊழல் தடுப்பு அலுவலகம்
ஊழல் தடுப்பு அலுவலகம்

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதேபோல, தூத்துக்குடி மாநகராட்சி எல்லைகளுக்கு உட்பட்ட 274 குடும்பங்களின் குடிநீர் இணைப்பிற்கான வைப்புத் தொகையாக 33 லட்ச ரூபாயை ஆலை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, பண்டாரம்பட்டி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடியுள்ள நிலையில், தமிழக அரசின் கொள்கைகளை எதிர்த்துச் செயல்படும் விதமாக இவ்வாறு நிதியுதவி வழங்குவதை லஞ்சம் வழங்குவதாகவே பார்க்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில், அரசு அலுவலகங்களை ஊழல் மயமாக்கும் நடவடிக்கைகளில் ஸ்டெர்லைட் நிறுவனம் இறங்கியுள்ளது. இதை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இதனால், அரசு கொள்கை முடிவு எடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடியது வெறும் கண்துடைப்புதானோ என்ற அச்சம் எங்களுக்கு உருவாகியுள்ளது. ஆலையை மூடிய பிறகும் ஸ்டெர்லைட் நிறுவனத்தினர் நேரடியாகவே கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் பணத்தின் மூலமாக மக்களிடையே சாதிரீதியாகப் பிளவை ஏற்படுத்தி, வேற்றுமையை உருவாக்க முயல்கிறார்கள்.

ஊழல் தடுப்பு அலுவலகம்
ஊழல் தடுப்பு அலுவலகம்

இத்தகைய ஊழல்மய செயல்களில் ஈடுபடும் ஸ்டெர்லைட் நிறுவன அதிகாரியின் மீதும் அதற்குத் துணையாக இருக்கும் பணியாளர்களின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். இது தடுத்து நிறுத்தப்படவில்லை எனில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் மீண்டும் மிகப்பெரிய அளவில் மக்கள் எழுச்சிப் போராட்டம் நடைபெறும்” என்றார்.