Published:Updated:

`அ.தி.மு.க, தி.மு.க கூட்டங்கள்தான் சோறு போடுது!' -ரஜினி மீட்டிங்கில் கவனம் ஈர்த்த`ஸ்டிக்கர்’ சேகர்

`ஸ்டிக்கர்’ சேகர்
`ஸ்டிக்கர்’ சேகர்

``ராகவேந்திரா மண்டபத்துல ரஜினி சார் மீட்டிங்குன்னா அங்க போய்டுவேன். ரஜினி சாருக்கு என்னை அடையாளம் தெரியும். கார்ல போகும்போது கொஞ்சம் ஸ்லோ பண்ணி வணக்கம் சொல்வார். நானும் உடனே எழுந்து நின்னு வணக்கம் சொல்வேன்''.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடிகர் ரஜினி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்தச் செய்தியாளர் சந்திப்பு குறித்த அறிவிப்பு முதல்நாள் மாலையில்தான் வெளியானது. இதனால், லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வெளியே ரசிகர்கள் கூட்டத்தைப் பெரிய அளவில் காண முடியவில்லை. கூட்டத்துக்கு வந்திருந்த குறைவான ரசிகர்கள் மத்தியில் ரஜினியின் தர்பார், சிவாஜி, ரஜினி மக்கள் மன்றக் கொடியுடன் கூடிய பேட்ஜ் என பிளாட்பாரத்தில் கடை விரித்திருந்த ஒருவர் கவனம் ஈர்த்தார். ரசிகர்கள் பலரும் ஆர்வத்தோடு அவரிடம் ஸ்டிக்கர் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொண்டிருந்தனர். ரசிகர்கள் கூட்டம் கலைந்தபின்னர் அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

ரஜினி
ரஜினி

கூட்டம் கலைந்ததால், ஒரு கையில் டீ கப்போடும் மறு கையில் விற்றதுபோக மீதமிருந்த ஸ்டிக்கர்களை பையில் எடுத்து வைத்துக்கொண்டே நம்மிடம் பேசினார். நிதானமாகப் பேச்சைத் தொடங்கிய அவர், தனது பெயர் சேகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதோடு, திருவண்ணாமலையைச் சேர்ந்தவன் என்றும் கூறினார்.

``அரசியல் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் நடக்குற இடங்கள்ல அந்தக் கட்சியைச் சேர்ந்தவங்க அதிகம் பேர் கூடுவாங்க. அங்கதான் நம்ம பிஸினஸே. அ.தி.மு.க, தி.மு.க போன்ற கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள், மாநாடுகளுக்கு அந்தந்த கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், கொடி இப்படியான படங்களை ஸ்டிக்கர், பேட்ஜா அடிச்சுக்கிட்டு போய்டுவேன். கூட்டம் நடக்குற இடத்துக்கு வெளியில கடையைப் போட்டுடுவேன். கட்சித் தொண்டர்கள் ஆர்வமா ஸ்டிக்கர், பேட்ஜை வாங்கிட்டுப் போவாங்க. அதுதான் நம்ம பிஸினஸ். அரசியல் கட்சிகள்தான் நமக்கு சோறு போடுது. தினமும் 4 பேப்பர் வாங்குவேன். அரசியல் கட்சி மீட்டிங் பத்திலாம் அதுலதான் தெரிஞ்சுப்பேன். தி.மு.க மீட்டிங்னா முரசொலில கிளியரா போட்டுடுவாங்க. நானும் கரெக்டா ஆஜராகிடுவேன். 10 நாளா கொஞ்சம் உடம்பு முடியல. அதனால எந்த மீட்டிங்குக்கும் போகல.

ஏதோ கைக்கும் வாய்க்கும் போதுமான வருமானம் இதுல கிடைக்குது. எனக்கு வேற எந்தத் தொழிலும் தெரியாது. பல வருஷமா இதுதான் நமக்கு பிஸினஸ். கடந்த 10 வருஷமாத்தான் அரசியல் கட்சி மீட்டிங்குகளுக்குப் போறேன். அதுக்கு முன்னாடி கடவுள் படங்கள், பொன்மொழிகள் அப்டி இப்டினு பொதுவான ஸ்டிக்கர், படங்களோட மக்கள் அதிகமா கூடுற பஸ் ஸ்டாண்டு, மார்க்கெட்ல போய் வியாபாரம் பண்ணுனேன். இப்ப அப்படி பொதுவான வியாபாரம் முழுநேரமா பண்றதில்லை. கட்சி மீட்டிங் இருந்தா அங்க போய்டுவேன்.

சேகர்
சேகர்
`கமல் முதல்வர் வேட்பாளரா?' கேள்விக்கு ரஜினி ரியாக்‌ஷன்!  - லீலா பேலஸ் சந்திப்பில் என்ன நடந்தது?

மத்த நேரங்கள்ல இந்த வேலையைப் பாக்குறேன். இதுல பெரிய வருமானம் கிடைக்குறதுல்ல. ஆனால், வரவுக்கும் செலவுக்கும் போதுமானதா இருக்கு. தி.மு.க, அ.தி.மு.க மீட்டிங்குன்னா கொஞ்சம் நல்லா வருமானம் கிடைக்கும். குறிப்பா தி.மு.க மீட்டிங்குன்னா ஓரளவுக்கு காசு பாத்துடுவேன். இந்தக் கட்சிகளைத் தவிர திருமாவளவன் கட்சி மீட்டிங்குன்னா ஓ.கே. மத்த கட்சி மீட்டிங்குகளுக்குப் போக மாட்டேன். அங்க பெருசா பிஸினஸ் இருக்காதுனு சொல்வாங்க. இப்போ கமல், ரஜினி மீட்டிங் நடந்தாலும் போக ஆரம்பிச்சுருக்கேன்.

திருநெல்வேலில ஒருதடவை கமல் சார் கார்ல இருந்துக்கிட்டே மக்கள்கிட்ட பேசிட்டு இருந்தாரு. அப்போ ஓரமா பிளாட்பார்ம்ல கடை போட்டிருந்த என்னைப் பார்த்து, `நல்லா இருக்கீங்களா...நல்லா வியாபாரம் ஆகுதா’னு அக்கறையா கேட்டுட்டுப் போனாரு. அதேமாதிரி ராகவேந்திரா மண்டபத்துல ரஜினி சார் மீட்டிங்குன்னா அங்க போய்டுவேன். ரஜினி சாருக்கு என்னை அடையாளம் தெரியும். கார்ல போகும்போது கொஞ்சம் ஸ்லோ பண்ணி வணக்கம் சொல்வார். நானும் உடனே எழுந்து நின்னு வணக்கம் சொல்வேன். அவர் கார் உள்ள போன பிறகுதான் கடை போடுவேன்’’ என்றார் கண்கள் விரிய.

சேகர்
சேகர்

தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட அவரிடம் குடும்பத்தைப் பற்றிக் கேட்டோம். உடனே அவரது குரலில் சோகம் அப்பிக்கொண்டது. ``வீட்டை விட்டு வெளியேறி 25 வருஷமா தனியாத்தான் இருந்தேன். அதனால கல்யாணமே பண்ணிக்கல. கூடப்பொறந்தவங்க ரெண்டு அக்கா, அண்ணன், தம்பிக ரெண்டுபேருனு நாங்க மொத்தம் 5 பேரு. திருவண்ணாமலை டவுன்தான் சொந்த ஊரு. அங்க இருந்து 100 கி.மீ தூரத்துல பாண்டிச்சேரிலதான் 25 வருஷமா இருந்தேன். ஆனா, வீட்டுக்குப் போகத் தோணல’ என்றார் விரக்தியுடன். வீட்டை விட்டு வெளியேறியது ஏன் என்று கேட்டவுடன், தயங்கியபடியே பேசத் தொடங்கினார். `1993ல தேங்காய் வியாபாரம் பண்ணலாம்னு போனப்ப, ஒருத்தன் என்கிட்ட 14,000 ரூபாய ஏமாத்திட்டுப் போய்ட்டான். அப்போ அது பெரிய காசு. வீட்டுல என்ன சொல்றதுன்னு தெரியல. அதுல அப்டி இப்டினு தேத்தி 7,000 ரூபாய் வீட்ல கொடுத்துட்டேன். அதுக்கப்புறம் கொஞ்சம் காசு சம்பாதிக்கலாம்னு வீட்டைவிட்டு வெளியேறிட்டேன். ஆனா, வீட்டைப் பாத்துக்குற அளவுக்கு காசு சம்பாரிக்கணும்னு நெனச்சது, இப்போ வரைக்கும் நடக்கல’’ என்று விரக்தியாகச் சொன்னார்.

ரஜினி பிரஸ் மீட்டில் என்னவெல்லாம் நடந்தது? - தி லீலா பேலஸில் இருந்து நேரடி ரிப்போர்ட்

`தமிழ்நாட்டுல எந்த அரசியல் கட்சி மீட்டிங்குன்னாலும் ஸ்டிக்கரோட ஆஜராகிடுவேன். கலைஞர் முதல்வரா இருந்தப்ப நடந்த உலகத் தமிழ் மாநாட்டை மறக்கவே முடியாது. அங்க என்ன மாதிரி நிறைய பேரு ஸ்டிக்கர் விக்கப் போனோம். எல்லோரும் கொண்டுபோயிருந்த சரக்கு எல்லாம் வித்து, வெறும் பையைத் தான் உதறிட்டு வந்தோம். அந்த மாதிரி வியாபாரம் அப்புறமா இல்லை. இப்போலாம் பெருசா வியாபாரமே இல்லை. ஆனா, நமக்கு இதானே பொழப்பு; விட்டுட முடியுமா?’. வெளியூர் போறதுன்னா நமக்கு எப்பவுமே டிரெய்ன்தான் தோது. பஸ் டிக்கெட்டெல்லாம் இப்போ பயங்கரமா எகிறிடுச்சு. எங்களை மாதிரி வியாபாரிங்க 50, 60 பேரு இருப்போம். அவங்கள்ல 90 பர்சன்ட் சென்னைலதான் இருக்காங்க. வெளியூர்கள்ல இருந்து என்ன மாதிரி ஒருசிலர்தான் இந்த பிஸினஸ் பண்ணிட்டு இருக்காங்க. ஸ்டிக்கர்லாம் டிசைன் பண்ணி வாடிக்கையா மொத்தமா வாங்கிடுவோம். இதுல பெரும்பாலும் நட்டம் இருக்காது. அதேநேரம், பெருசா வருமானமும் இருக்காது. நான் ஒத்த ஆளா இருக்கதால சமாளிச்சுக்கிறேன்’’ என்றவர், மீண்டும் குடும்ப நினைவில் மூழ்கினார்.

ஏதோ கைக்கும் வாய்க்கும் போதுமான வருமானம் இதுல கிடைக்குது. எனக்கு வேற எந்தத் தொழிலும் தெரியாது. பல வருஷமா இதுதான் நமக்கு பிஸினஸ். கடந்த 10 வருஷமாத்தான் அரசியல் கட்சி மீட்டிங்குகளுக்குப் போறேன்.
`ஸ்டிக்கர்’ சேகர்

``ரெண்டு அக்காவும் கொஞ்ச நாளைக்கு முன்னாடி இறந்து போயிட்டாங்க. என்கூடப் பொறந்த எல்லாரும் கல்யாணம் முடிச்சு பேரன் பேத்தி எடுத்துட்டாங்க. எனக்கு 53 வயசாகுது. கொஞ்ச நாள் முன்னாடி கூட ரத்த டெஸ்ட் எடுத்தேன். எல்லாம் ப்யூரா இருக்கு; ஒரு பிரச்னையும் இல்லன்னு சொல்லிட்டாங்க. இந்தப் பல்லுதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி விழுந்துருச்சு. மத்தபடி எந்த பிராப்ளமும் இல்லை. மனச சந்தோஷமா வச்சிக்கிட்ட..நம்மளை சுத்தி எப்பவும் சந்தோஷம்தான் இருக்கும்’’ என்று சிரித்தார். நம்மிடம் பேசிக்கொண்டே பொருள்களையெல்லாம் எடுத்து வைத்த அவர், அருகிலிருந்து டீக்கடையில் அடுத்த டீக்கு ரெடியானார்.

கொரோனா டெஸ்ட், விழப்போன லைட்... ரஜினி பிரஸ்மீட் சுவாரஸ்யங்கள்! #Video

`தினமும் நமக்கு சாப்பாடு டீதான் தம்பி. எது இல்லாட்டினாலும் வெறும் டீயை வைச்சே பொழுத ஓட்டிடுவேன். ஒழுங்கா சாப்டாததாலதான் கொஞ்சம் சதைப்பிடிப்புல்லாம இருக்கேன். தினமும் 20 டீ சாப்டுவேன் தம்பி’ என்றவரிடம், `தினசரி 20 டீக்கு செலவு செய்யும் காசில் சரியாக உணவு எடுத்துக்கொள்ளலாமே?’என்றோம்.

புன்னகையுடன் அந்தக் கேள்வியை எதிர்கொண்ட `ஸ்டிக்கர்’ சேகர், `அப்டித்தான் நானும் நினைப்பேன். ஆனா, அதைச் சரியா செய்ய முடியல. டீ குடிக்காமவும் இருக்க முடியல’ என்றார்.

ரஜினி பிரஸ் மீட்
ரஜினி பிரஸ் மீட்

`சரி.. உங்க மொபைல் எண்’ எனக் கேட்ட நம்மை ஏற, இறங்கப் பார்த்த அவர், `அதெல்லாம் இப்ப இல்ல தம்பி. கனமான செல்போனு, பத்து நாள் முன்னாடி டிரெய்ன்ல போகும்போது குலுங்குனதுனல டாய்லெட்டுக்குள்ள விழுந்துடுச்சு. அதோட தேவையும் பெருசா இல்லங்கறதுனால, வாங்கவும் இல்லை. இனிமேல்தான் வாங்கணும். எங்காவது அரசியல் கட்சி மீட்டிங் நடந்துச்சுன்னா அங்க நான் இருப்பேன். வாங்க டீ சாப்டுட்டே பேசலாம்’’ என்றபடி பையோடு நம்மிடமிருந்து விடைபெற்றார்.

அடுத்த கட்டுரைக்கு