Published:Updated:

`மறு உத்தரவு வரும்வரை கடைகளைத் திறக்கக்கூடாது!’ -வெறிச்சோடிய வேலூர் மாநகரம்

வெறிச்சோடி காணப்படும் வேலூர் மார்க்கெட்
வெறிச்சோடி காணப்படும் வேலூர் மார்க்கெட்

வேலூர் மாவட்டத்தில், ஞாயிறுதோறும் அனைத்து விதமான கடைகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. நேற்று வரை மாவட்டத்தில் 320 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகாயம் காவல் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மூன்று காவலர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து, அந்த காவல் நிலையம் இழுத்து மூடப்பட்டுள்ளது.

வேலூர் மார்க்கெட் பகுதி
வேலூர் மார்க்கெட் பகுதி

அதேநேரம், வேலூர் மாநகரின் இதயப் பகுதியாக விளங்கும் நேதாஜி மார்க்கெட்டும், மண்டித்தெருவும் தொற்று பரவலின் கொள்முதல் கூடாரமாக மாறியிருக்கிறது. இதையடுத்து, பொதுமக்கள் நலன் கருதி நேதாஜி மார்க்கெட், மண்டித் தெரு, லாங்கு பஜார், சாரதி மாளிகை ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்துக் கடைகளும், டாஸ்மாக் உள்பட, வணிக நிறுவனங்களும் இன்று முதல் மூடப்பட்டுள்ளன. ‘மறு அறிவிப்பு வரும்வரை கடைகளைத் திறக்கக்கூடாது’ என்று கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக கலெக்டர் கூறியிருப்பது, ‘‘நேதாஜி மார்க்கெட், சாரதி மாளிகை, மண்டித்தெரு, லாங்கு பஜாரில் உள்ள அனைத்துக் கடைகளையும் மூடுவதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்புத் தரவேண்டும். மீறி கடைகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நோய் பரவலைத் தடுக்காவிட்டால் நேதாஜி மார்க்கெட்டும் மண்டித் தெருவும் இன்னொரு கோயம்பேடாக உருவாகிவிடும்.

மூடப்பட்டுள்ள கடைகள்
மூடப்பட்டுள்ள கடைகள்

நகரின் பிற பகுதிகளில் உள்ள கடைகள் வழக்கம்போல் இயங்கலாம். வேலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எல்லா விதமான கடைகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் கட்டாய விடுமுறை அளிக்கப்படுகிறது. மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்குகள் மட்டுமே ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், வேலூர் மாநகரமே இன்று வெறிச்சோடி காணப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு