Published:Updated:

புகைப்படம் மூலம் வலியைக் கடத்திய 17 வயது ரிச்சர்ட்... வைரலான பதிவு; உதவிய உதயநிதி ஸ்டாலின்!

ரிச்சர்ட்

`தான் வாக்களிக்காத ஒரு முதல்வரிடம் எப்படி உதவியைக் கேட்பது என கலங்கிய அந்த க‌ண்களைப் பார்த்தேன்…

புகைப்படம் மூலம் வலியைக் கடத்திய 17 வயது ரிச்சர்ட்... வைரலான பதிவு; உதவிய உதயநிதி ஸ்டாலின்!

`தான் வாக்களிக்காத ஒரு முதல்வரிடம் எப்படி உதவியைக் கேட்பது என கலங்கிய அந்த க‌ண்களைப் பார்த்தேன்…

Published:Updated:
ரிச்சர்ட்

``என் பையனுக்கு 12 வயசு ஆகுது. ஒரு வயசு வரைக்கும் நல்லாதான் இருந்தான். அப்புறம் போலியோவால கை, கால் இப்படி ஆகிடுச்சு. கொஞ்ச தூரம் நடப்பான் கால் இழுத்துரும். அப்புறம் இடுப்புல தூக்கி வச்சுப்பேன்.

மூனு மாசத்திலேயே என்னோட கணவர் விட்டுட்டுப் போயிட்டார். வேலைக்குப் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போனார். ஆனா, அப்புறம் திரும்பி வரல. பையன பள்ளிக்கூடத்துல சேர்க்கணும்னு போனப்போ உங்க பையனுக்கு சீட்டு தர முடியாதுன்னு அசிங்கப்படுத்தி அனுப்பிச்சிட்டாங்க. உன் பையன் உச்சா போவான், பாத்ரூம் போவான் நாங்க இதெல்லாம் பாத்துட்டு இருக்க முடியாது. நீ வேணும்னா கூடவே இருந்து சொல்லிக்கொடுன்னு சொன்னாங்க.

புகைப்படம் மூலம் வலியைக் கடத்திய 17 வயது ரிச்சர்ட்... வைரலான பதிவு; உதவிய உதயநிதி ஸ்டாலின்!

நான் படிக்கல சார். ஆனா என் பையன் படிச்சு பெரிய ஆள் ஆகணுங்கிறதுதான் என்னோட கனவு." கண்ணீர் மல்க ராஜாமணி பேசும் இந்தக் காணொளியை புகைப்படக் கலைஞரான ரிச்சர்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

``தான் வாக்களிக்காத ஒரு முதல்வரிடம் எப்படி உதவியைக் கேட்பது என கலங்கிய அந்த க‌ண்களைப் பார்த்தேன்…

ஆதரவற்ற அந்தத் தாயின் அழுகுரல் ஏற்காடு உறை குளிரையும் உஷ்னமாக்கியது. உதவிடலாம் என்று உங்களையும் நம்பியிருக்கிறேன்" புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் விஜயகுமார் தன் இன்ஸ்டாகிராமில் தான் எடுத்த புகைப்படத்துடன் இப்படி ஒரு பதிவிட்டிருந்தார். அந்த படம் ஏற்காட்டிலுள்ள தாய் ஒருவர் போலியாவால் பாதிக்கப்பட்ட தன் மகனைத் தூக்கிக்கொண்டு செல்லும் புகைப்படம் அது. ரிச்சர்டின் இந்தப் பதிவால் அந்தத் தாய்க்கும், அவரின் மகனுக்கும் உதவி கிடைத்திருக்கிறது.

தன் கேமரா மூலமாக குரலற்ற மனிதர்களுக்கு உதவும் விதமாகப் பணி செய்துவருகிறார் 17 வயதான ரிச்சர்ட் விஜயகுமார். விகடன் குழுமத்தில் பணிபுரிந்த, மறைந்த புகைப்படக் கலைஞர் விஜயகுமாரின் மகன் ரிச்சர்ட் விஜய்குமார். ரிச்சர்டிடம் அந்தப் பதிவு குறித்துப் பேசினோம்.

புகைப்படம் மூலம் வலியைக் கடத்திய 17 வயது ரிச்சர்ட்... வைரலான பதிவு; உதவிய உதயநிதி ஸ்டாலின்!

"சேலம் மாவட்டம் ஏற்காட்டில் போலியோவால் பாதிக்கப்பட்ட தன் மகனை தாய் தூக்கிக் கொண்டு சென்றதைப் பார்த்தேன். அவர்களிடம் பேசியபோது உடலளவிலும் மனதளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. போலியோவால் பாதிக்கப்பட்டிருந்தார் அந்தச் சிறுவன். அவனைச் சுமந்துகொண்டிருந்தார் ஒரு ஏழைத் தாய். ஏற்காடு கடும் குளிரில்கூட மெல்லிய துணியை தான் தாயும் மகனும் அணிந்திருந்தார்கள். இதை பார்க்கும்போதே மனம் பாரமானது. தன் மகனை அங்குள்ள அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்ப்பதற்காக அவர் சென்றிருக்கிறார்.

`நாங்க எல்லாம் உங்க பையன பாத்துக்க முடியாது. நீங்க வேணும்னா பையன்கூட இருந்து பாத்துக்கோங்க' எனச் சொல்லியிருக்கிறார்கள். நான் பள்ளிக்கூடத்துல இருந்தா வேலைக்கு போய் எப்படி என் பையனுக்கு சாப்பாடு கொடுக்க முடியும் என பரிதாபத்துடன் கேட்டிருக்கிறார் அந்தத் தாய். மேலும், தாயாரைப் பற்றி லோக்கல் ஸ்டேஷனில் விசாரித்த போது ஆட்சியர் ரோகிணி காலத்தில் ஏற்காடு பூங்காவில் மாத சம்பளத்துடன் தூய்மை பணியாளர் வேலை தரப்பட்டிருக்கிறது என்றனர். மகன் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டதால் மகனை அழைத்துச் செல்ல, வீல் சேர் தேவைப்படுகிறது. அந்தச் சிறுவனுக்கு கல்வி, அவர்களுக்கு நிரந்தர வீடு என்பதை நான் எடுத்த புகைப்படம், டாக்குமென்ட்ரியிலும் கோரிக்கையாக வைத்திருந்தேன்.

ரிச்சர்ட்
ரிச்சர்ட்

அவர்களின் ஒத்துழைப்போடு ஆவணப்படம் எடுக்கப்பட்டு மறுநாளே சமூக வலைதளத்தில் வெளியிட்டேன். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு பகிர்ந்திருந்தேன். அடுத்த 24 மணி நேரத்திற்குள் உதயநிதி நற்பணி மன்றத் தலைவர் ராஜ்குமார் மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவிக் கரம் நீட்டினார். மகனுக்கு வீல் சேர், கல்விக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்காட்டில் உள்ள மருத்துவமனையில் தாயாருக்கு சிகிச்சை அளிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. என்னுடைய ஆவணப்படம் மூலம் சமூக வலைதளங்கள் வாயிலாக பல்வேறு உதவிகள் தாய் மகனுக்கு வந்து கொண்டிருக்கிறது" என்று பேசினார். 12-ம் வகுப்பு படிக்கிறபோதே தன் புகைப்படங்கள் மூலம் விளிம்பு நிலை மக்களின் வலியை உணர்த்திக் கொண்டிருக்கிறார் ரிச்சர்ட். கலை என்பது மனிதர்களுக்கானதுதான். தன் கேமிராவின் வழியே எளிய மக்களின் வாழ்வில் வெளிச்சம் பரவச் செய்திருக்கிற ரிச்சர்டுக்கு வாழ்த்துகள்.