Published:Updated:

`நான்கு மகன்களுக்கும் ரஜினி படத்தின் பெயர்கள்!' -மதுரையில் இப்படியும் ஒரு ரசிகர்

மாதவன்
மாதவன்

நான் தீவிர ரஜினி ரசிகன். ஆனால், அதற்காக பேனர் வைப்பதோ, பால் அபிஷேகம் செய்வதோ, மண் சோறு சாப்பிட்டதோ கிடையாது.

தன்னுடைய நான்கு மகன்களுக்கும் ரஜினியின் திரைப்படப் பெயரை சூட்டியிருக்கிறார் தீவிர ரசிகர் ஒருவர்.

மன்னன், முத்து, படையப்பா, பாபா - நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான இந்த 4 திரைப்படங்களின் பெயரை தன் மகன்களுக்கு வைத்திருக்கிறார் மாதவன் என்ற ரசிகர். மதுரை மாவட்டம் மேலூர் பழைய சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் மாதவன். இவர் ரஜினியின் மீது கொண்ட பற்றால் பல்வேறு சமூகப் பணிகளையும் செய்துவருகிறார்.

பத்திரிக்கையில் மகன்களின் பெயர்
பத்திரிக்கையில் மகன்களின் பெயர்

மாதவனிடம் பேசினோம். ``நான் தீவிர ரஜினி ரசிகன். ஆனால், அதற்காக பேனர் வைப்பதோ பால் அபிஷேகம் செய்வதோ, மண் சோறு சாப்பிட்டதோ கிடையாது. புதிதாக ரஜினி சாரின் படம் வெளியாகும்போது ஏழை, எளிய மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வாங்கிக் கொடுப்பேன்.

வறுமையில் வாடும் விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களை வாங்கிக் கொடுப்பேன். இதுமட்டும்தான் என்னுடைய செயல்பாடு. எனக்கு ரஜினி சாரை ரொம்பப் பிடிக்கும். அதனால் அவர் பெயரைச் சொல்லி சிறிய சிறிய உதவிகளைச் செய்வேன்.

மாதவன்
மாதவன்

அவரிடம் நான் பெரிதும் ரசித்தது அவரின் எளிமையும் சண்டைக் காட்சிகளும்தான். சினிமா டிக்கெட் விலை 45 பைசாவாக இருந்த காலம்முதல் ரஜினி சாரின் திரைப்படங்களைப் பார்த்து வருகிறேன். `பைரவி' படம்தான் என்னை அவரின் தீவிர ரசிகனாக மாற்றியது.

`அளவு சாப்பாடு 10 ரூபாய்தான்..!' -ரஜினி பிறந்தநாளையொட்டி `உழைப்பாளி உணவகம்' தொடங்கிய ரசிகர்

ராணுவ வீரன் என்ற திரைப்படம் பார்ப்பதற்காக, ஒருநாள் முழுக்க வேலை செய்து டிக்கெட்டுக்குக் காசு சேர்த்தேன். அந்தளவுக்கு தீவிர ரசிகனாக இருந்து வருகிறேன். அதனால்தான், அவர் நடித்த படங்களின் பெயரையே என் மகன்களுக்கும் வைத்தேன்.

விழா அழைப்பிதழ்
விழா அழைப்பிதழ்

மூத்தவன் பெயர் மன்னன் என்ற மோக மன்னன், இரண்டாவது பையன் பெயர் முத்து, மூன்றாவது பையன் பெயர் படையப்பா, கடைசி பையன் பெயர் பாபா. இப்படித் தலைவர் படத்தின் பெயரை வைத்து மகிழ்கிறேன்.

எனக்குக் கட்சியோ, பதவியோ தேவையில்லை. நான் ஒரு ரஜினி ரசிகன் அவ்வளவுதான். குடும்பத்தை நடத்துவதற்கு ரிக்‌ஷா வண்டி ஓட்டிப் பிழைக்கிறேன். எனக்குப் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அரசியல் கட்சியை ரஜினி தொடங்க வேண்டும் எனத் தொண்டர்கள் பேசுகிறார்கள். நான் அதைப் பெரிதாக நினைத்ததில்லை" என்றார் இயல்பாக.

அடுத்த கட்டுரைக்கு