Published:Updated:

15 ஓவியர்கள், 15 சுவர்கள்.... சென்னை கண்ணகி  நகரை வண்ணமயமாக்கும் இளைஞர்கள்!

கண்ணகி நகர் சுவரோவியங்கள்
கண்ணகி நகர் சுவரோவியங்கள் ( Photo credit: RANGAPRASAD )

உதிர்ந்த வண்ணமும், இடிந்த சுவருமாய் இருந்த கண்ணகி நகர் ஹவுசிங் போர்டு ஏரியா, கடந்த ஜனவரியிலிருந்து பளிச் சுவரோவியங்களோடு புதுப்பொலிவு பெற்றிருக்கின்றன.

ஏட்டுக்கல்வியைத் தாண்டி, சமூகத்தோடு இயைந்த ஒரு கலையைக் குழந்தைகளுக்குப் புகுத்தும்போது, அது விதைக்கும் மாற்றம் தனிநபருக்கானது மட்டுமல்ல என்பதை மீண்டும் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன சென்னையின் கண்ணகி நகர் சுவரோவியங்கள். ஒரு பக்கம் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டும் மறுபக்கம் பெயின்ட் பிரஷ்ஷூமாய் மாலையில் கண்ணகி நகர் குழந்தைகள் குழுமியிருக்க, அந்தப் பக்கம் கடப்பவர்கள் எல்லாம் ஒரு நிமிடம் நின்று சுவரோவியங்களையும் அந்தச் சூழலையும் ரசித்துச் செல்ல தவறுவதேயில்லை.

பயிற்சியில் குழந்தைகள்
பயிற்சியில் குழந்தைகள்
Photo credit: RANGAPRASAD

உதிர்ந்த வண்ணமும், இடிந்த சுவருமாய் இருந்த கண்ணகி நகர் ஹவுசிங் போர்டு ஏரியா குடியிருப்புகள் தற்போது பளிச் சுவரோவியங்களோடு புதுப்பொலிவு பெற்றிருக்கின்றன. சென்னை மாநகராட்சியின் அழைப்பின் பேரில், ஸ்டார்ட் இந்தியா ஃபவுண்டேஷன் (st+foundation) என்ற அமைப்பு இந்தத் திட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறது. கண்ணகி நகரிலுள்ள எளிய மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தச் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இது குறித்து ஸ்டார்ட் இந்தியா ஃபவுண்டேஷனின் உறுப்பினர் சதீஷிடம் பேசினோம் ``ஓவியக்கலையைச் சுவரோவியங்கள் மூலமா, அடுத்த தலைமுறையிடம் எடுத்துப்போறதுக்கான சின்ன முயற்சிதான் இது. இந்த மாதிரியான சுவரோவியங்களை மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கறதுக்கான முயற்சிகள் தமிழகத்துல குறிப்பா, சென்னைல நடக்கறது இதுதான் முதல்முறைனு நினைக்கிறேன். இதுக்கு முன்னாடி டெல்லி, மும்பை, ஹைதராபாத், கோவால அந்தப் பகுதி மக்களோட வாழ்வியலைப் பிரதிபலிக்கற சுவரோவியங்களை வரைஞ்சு அந்தப் பகுதியை ஆர்ட் டிஸ்டிரிக்ட்டா (Art District) மாத்தினோம். அந்த வகையில இந்தியால சென்னை கண்ணகி நகர் ஏரியா எங்களுக்கு அஞ்சாவது ஆர்ட் ஏரியா.

கண்ணகி நகர்
கண்ணகி நகர்

இந்த ஏரியா குழந்தைகளுக்கு ஓவியம் மாதிரியான கலைகளைப் பத்தின புரிதலை ஏற்படுத்தி அதைக் கத்துக்கறதுக்கான ஒரு தூண்டுதலா இருக்கறது மட்டுமல்லாம, இதை அடிப்படையா வெச்சு வெளிய இருக்கிறவங்களுக்கு வொர்க்‌ஷாப், ஃபோட்டோவாக்னு எங்களால முடிஞ்ச வாய்ப்புகளை விரிவுபடுத்தியிருக்கோம். இதை ஒரு ஆர்ட் ஃபெஸ்டிவலாவே பண்ணிட்டு இருக்கோம்.

கண்ணகி நகர், அதைச் சுத்தி இருக்கிற பகுதிகளில் மட்டும் கிட்டத்தட்ட 24,000 குடும்பங்கள் வசிக்கறாங்க. இந்தக் கட்டடங்களோட சுவர்களில் இங்கே இருக்கும் மக்களோட வாழ்வியலை மையமா வெச்சு ஓவியங்கள் வரையலாம்னு முடிவு செஞ்சோம். 15 சுவர்கள் இப்போதைக்கு ஃபிக்ஸ் பண்ணியிருக்கோம். 5 இன்டர்னேஷனல் ஆர்ட்டிஸ்ட், வெவ்வெறு ஸ்டேட்ல இருந்து வந்திருக்க 5 இந்தியன் ஆர்ட்டிஸ்ட், சென்னையைச் சேர்ந்த 5 ஆர்ட்டிஸ்ட்னு மொத்தம் 15 ஆர்டிஸ்ட்ஸ் இருக்காங்க.

மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள்
மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள்

இந்த ஆர்ட் டிஸ்ட்ரிக்ட் புராஜெக்ட் பண்றதுன்னு முடிவானதும், எங்க அமைப்பு இந்த ஏரியாக்கு வந்து இங்க இருக்க மக்களோட பழகறது, அவங்களோட வாழ்வியலைத் தெரிஞ்சுக்கறது அதை வீடியோ, ஃபோட்டோஸ் எடுத்து எங்க ஆர்ட்டிஸ்ட்களுக்குக் கொடுப்போம். சென்னைல இருக்கும் தண்ணீர்ப் பிரச்னை, மக்களோட தொழில் எல்லாத்தையும் உள்ளே கொண்டு வரணுங்கறதுதான் நோக்கம்.

ஜனவரி கடைசியில ஆரம்பிச்சோம். மார்ச்ல முடிக்க பிளான் இருக்கு. அதுக்குப் பிறகு ஒவ்வொரு ஆறுமாசமும் ஒவ்வொரு சுவர்ல ஓவியங்கள் வரைய பிளான் இருக்கு"என்றார்.

இந்தச் சுவரோவியங்களுக்குக் கண்ணகிநகர் மக்கள் ரியாக்‌ஷன் என்ன என்றால், ``இந்த புராஜெக்ட் ஆரம்பிக்கும்போது, இந்தப் பகுதி மக்களுக்கு `நாங்க எதுக்காக இங்க வந்திருக்கோம்? சினிமா ஷூட்டிங்கா? என்ன நடக்குது'னு ஒரே குழப்பமா இருந்தாங்க. அதுக்குப் பிறகு நாங்க எங்க புராஜெக்ட்டை விளக்கிச் சொன்னதும், புரிஞ்சுக்கிட்டு எங்களுக்கு நல்லா ஒத்துழைப்பு கொடுக்குறாங்க. பசங்க ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடறது, சின்னச் சின்ன கடைகள் மக்கள் வெச்சிருக்கறதுன்னு எப்பயுமே மக்கள் ஸ்ட்ரீட்ல என்கேஜ்டா இருக்க ஏரியா இது. அதை நாங்க ஓவியங்களா கட்டடச் சுவர்கள்ல கொண்டு வந்த போது, ரொம்ப ரசிச்சாங்க".

கண்ணகி நகர்
கண்ணகி நகர்

``கண்ணகி நகர், அதைச் சுத்தி இருக்கும் பகுதிகள்னாலே பிரச்னைகள்னு அடுத்த தலைமுறைக்கும் போய்விடாமல், கலையை ஒரு மீடியமா பயன்படுத்த நினைக்கிறோம்.

இதே புராஜெக்ட் டெல்லில இருக்க லோதி நகர்ல முடிச்சதுக்குப் பிறகு, அங்கு வந்து ஓவியங்களைப் பார்த்துட்டுப் போற மக்களோட எண்ணிக்கை அதிகமாகியிருக்கு. இதேமாதிரியான மாற்றம், கண்ணகி நகர்லையும் சீக்கிரம் நடக்கும்" என்கிறார் நம்பிக்கையாக.

அடுத்த கட்டுரைக்கு