Published:Updated:

காணும் பொங்கல்: 59 மாட்டுவண்டிகளில் சீறிப் பாய்ந்த 118 காளைகள்; களைகட்டிய மாட்டுவண்டிப் பந்தயம்!

மாட்டுவண்டிப் பந்தயம்
News
மாட்டுவண்டிப் பந்தயம்

தூத்துக்குடியில் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டுவண்டிப் போட்டி நடைபெற்றது. இதில், 59 மாட்டுவண்டிகளில் 118 காளைகள் சீறிப் பாய்ந்தன.

காணும் பொங்கல்: 59 மாட்டுவண்டிகளில் சீறிப் பாய்ந்த 118 காளைகள்; களைகட்டிய மாட்டுவண்டிப் பந்தயம்!

தூத்துக்குடியில் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டுவண்டிப் போட்டி நடைபெற்றது. இதில், 59 மாட்டுவண்டிகளில் 118 காளைகள் சீறிப் பாய்ந்தன.

Published:Updated:
மாட்டுவண்டிப் பந்தயம்
News
மாட்டுவண்டிப் பந்தயம்
பெரு நகரத் திருவிழாக்களில் ஆடம்பரங்கள் வரிசைகட்டும். ஆனால், இன்னமும் கிராமப் பகுதிகளில் பொங்கல் விழா, கோயில் திருவிழாக்களில் மாட்டுவண்டிப் பந்தயங்களை நடத்தி கால்நடைகளுக்கும் தங்களின் நெருக்கத்தைக் காட்டிச் சிலிர்க்க வைக்கிறார்கள் தெற்கத்தி மக்கள். 

தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பொங்கல் விழா மற்றும் கோயில் திருவிழாக்களின் போது மாட்டுவண்டிப் பந்தயம் நடத்தப்பட்டுவருகின்றன. இவ்வாண்டு காணும் பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கீழச் செக்காரக்குடியில் மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.  பெரிய மாட்டுவண்டி, சிறிய மாட்டுவண்டி, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளில் பந்தயம் நடத்தப்பட்டது.

மாட்டுவண்டியை இழுத்துச் செல்லும் சிறுவன்
மாட்டுவண்டியை இழுத்துச் செல்லும் சிறுவன்

இதில்,  தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாமல் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, தேனி, ராம்நாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 59  மாட்டுவண்டிகள், 118 காளைகள் கலந்துகொண்டன. பெரியமாட்டுவண்டிப் பிரிவில் 11 மாட்டுவண்டிகளும், சிறிய மாட்டுவண்டிப் பிரிவில் 16 மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டுவண்டிப் பிரிவில் 32 வண்டிகளும் கலந்துகொண்டன. கீழச்செக்காரக்குடி கிராமத்திலிருந்து பொட்டலூரணி வரையிலான சாலையில் பந்தயம் நடைபெற்றது. பெரிய மாட்டுவண்டிக்கு 14 கி.மீ தூரமும், சிறிய மாட்டுவண்டிகளுக்கு 10 கி.மீ தூரமும், பூஞ்சிட்டு மாட்டுவண்டிக்கு 8 கி.மீ தூரமும் போட்டிக்கான எல்லையாக அறிவிக்கப்பட்டது.

பந்தயம் தொடங்குவதற்கு முன்னர், வண்டிக்காரர்கள் தங்களின் காளைகளை வண்டியில் பூட்டி, சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து கற்பூர ஆரத்தி காட்டி தயார்  நிலையில் நிறுத்தி வைத்திருந்தனர்.  காளைகளும், 'நாங்கள் போடிக்குத் தயார்' என்பது போல கழுத்தை ஆட்டி மணிகளை ஒலிக்கச்செய்தன.  முதலில் பெரிய மாட்டுவண்டிப் பந்தயமும், இரண்டாவதாக சிறிய மாட்டுவண்டிப் பந்தயமும், இறுதியாக பூஞ்சிட்டு மாட்டுவண்டிப் பந்தயமும்  நடைபெற்றது.  பந்தய எல்லைகளை வந்தடைந்த முதல் மூன்று மாட்டு வண்டிகளின் சாரதிகள் (வண்டியை ஓட்டிச் செல்பவர்) வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.  

காளைகள்
காளைகள்

பெரிய மாட்டுவண்டிப் பந்தயத்தில் வெற்றிபெற்றவர்களுக்கு, முதல் பரிசாக ரூ.20,023-உம், இரண்டாம் பரிசாக ரூ.18,023-உம், மூன்றாம் பரிசாக ரூ.16,023-உம் வழங்கப்பட்டன.  சிறிய மாட்டுவண்டிப் பந்தயத்தில் வெற்றிபெற்றவர்களுக்கு, முதல்பரிசாக ரூ.14,023-உம், இரண்டாம் பரிசாக ரூ.13,023-உம், மூன்றாம் பரிசாக ரூ.12,023-உம் வழங்கப்பட்டன. இதேபோல, பூஞ்சிட்டு மாட்டுவண்டிப் பந்தயத்தில் வெற்றிபெற்றவர்களுக்கு, முதல்பரிசாக ரூ.9,023-உம், இரண்டாம் பரிசாக ரூ.8,023-உம், மூன்றாம் பரிசாக ரூ.7,023-உம் வழங்கப்பட்டன.

இதில் பெரிய மாட்டுவண்டிப்பிரிவில் மதுரை அவனியாபுரம் மோகன் சாமியின் வண்டியும், சிறிய மாட்டுவண்டிப் பிரிவில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த ஆனந்தின் வண்டியும், பூஞ்சிட்டு மாட்டுவண்டிப் பிரிவில் ஜக்கம்மாள்புரம் அஜித் குமாரின் வண்டியும் முதலிடத்தைப் பிடித்தது. சாலையின் இரண்டு புறமும்  ஆயிரக்கணக்கான சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என கிராம மக்கள் கைதட்டியும் ஆரவாரம் எழுப்பியும் மாட்டுவண்டிப் பந்தயத்தினை ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.  மாட்டுவண்டிப் பந்தயத்தில் கலந்துகொண்ட வண்டிக்காரர்களிடம் பேசினோம், “ஜல்லிக்கட்டோட இணைந்ததுதான் மாடுபிடி.  மாடுகளை வண்டியில பூட்டி ஓட்டுறதுக்குப் பேருதான் பந்தயம்.

மாட்டுவண்டிப் பந்தயம்
மாட்டுவண்டிப் பந்தயம்

பந்தய மாட்டுவண்டியை  ‘தட்டுவண்டி’ன்னு சொல்லுவோம். இப்போ ரேஸ் வண்டின்னு சொல்லுறாங்க. மாட்டுவண்டிகள்ல  காளைகள் சீறிப் பாய்ந்து ஓடுறதைப் பார்க்கும்போது மாட்டுவண்டியா, குதிரை வண்டியான்னு வியந்து பார்க்குற அளவுக்கு ஓடும். மாட்டைக் குளிப்பாட்ட, பயிற்சி கொடுக்க,  தீவனம் வைக்க, மேய்ச்சலுக்கு அழைச்சுட்டுப் போக, கை மருத்துவம் பார்க்கன்னு ஒரு குடும்பமே ஈடுபாடா இருப்போம்.

அந்த ஈடுபாட்டாலும், ஒற்றுமையினாலும்தான் பந்தயங்கள்ல கலந்துக்கிட்டு வெற்றி வாகை சூடமுடியுது. ஒவ்வொரு காளையையும் எங்களோட பிள்ளையா நினைச்சுதான் வளர்த்துட்டு வர்றோம். பந்தயத்துல கிடைக்குற பரிசுக்காகவோ, ரொக்கப் பணத்துக்காகவோ இதைச் செய்யல. ’உழுதவன் கணக்குக் போட்டா உழக்குக்கூட மிஞ்சாது’ன்னு சொல்லுற மாதிரி காளைகளுக்குப் தீவனம், பராமரிப்புச் செலவுகளைக் கணக்குப் போட்டா ஒத்த ரூவாகூட மிஞ்சாது.

மாட்டுவண்டிப் பந்தயம்
மாட்டுவண்டிப் பந்தயம்

ஆனா, எங்க ஊரு காளை வெற்றி வாகை சூடியிருக்குங்கிற பெருமை மட்டும்தான்.  பந்தயத்தோட முடிவுல ஊரு பெயரைச் சொல்லி நடுவர் மைக்குல சொல்லும் போதும், எங்களோட மாடுகளுக்குப் பரிவட்டம் கட்டி, மாலை போடும்போதும் அந்த சந்தோஷத்துக்கு அளவே இல்ல. மாவட்டத்துக்கும் பெருமை, ஊருக்கும் பெருமை, எங்களுக்கும் பெருமை. ஜல்லிக்கட்டு மாதிரி மாட்டுவண்டிப் பந்தயமும் ஒரு வீர விளையாட்டுப் போட்டிதான்” என்றனர்.