Published:Updated:

12 அடி உயரத்தில் உலகை வசீகரிக்கும் பெருகவாழ்ந்தான் மண்குதிரைகள்!

சுடுமண் குதிரை
சுடுமண் குதிரை

`12 அடி உயரத்துக்கு, தத்ரூபமான மண்குதிரைகள் இங்கு மட்டுமே செய்யப்படுகின்றன. இது உலக அளவில் போற்றப்பட வேண்டிய அதிசயம்.’

பெருகவாழ்ந்தான்... பக்தியும், பாரம்பர்யமும், கலைநயமும் ஒன்று சேர்ந்த சுடுமண் குதிரைகள் செய்து இறைவழிபாடு செய்துவரும் ஓர் அழகிய கிராமம். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் அமைந்துள்ளது இந்தக் கிராமம். இக்கிராம மக்களின் தெய்வமான அய்யனார் வழிபாட்டுக்காக செய்யப்படும் மண் குதிரைகள் பற்றி `பெருகவாழ்ந்தான்' என்ற பெயரில் ஓர் ஆவணப்படத்தை எடுத்துள்ளார்கள். இந்த ஆவணப் படத்தில், வியப்பூட்டும் தகவல்கள் பல விரவிக் கிடக்கின்றன. எந்தவிதக் கருவிகளுமின்றி 12 அடி உயரத்துக்கு, தத்ரூபமான மண்குதிரைகள் இங்கு செய்யப்படுகின்றன. ``இது போற்றப்பட வேண்டிய அதிசயம்" என சிலாகிக்கிறார் பெருகவாழ்ந்தான் ஆவணப்படத்தின் படைப்பாளி நீலமேகம். பல நாள்கள் பெருகவாழ்ந்தான் கிராமத்திலேயே தங்கியிருந்து இதைப் பதிவு செய்துள்ளது இவரது ஆவணப்படக்குழு.

மண் குதிரை
மண் குதிரை

``மிகவும் உயரமான மண் குதிரைகள் செய்து, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு தூக்கிச் சென்று சூளையில் வைத்து சுட்டு, பஞ்சவர்ணம் பூசி வீதிகளில் பலபேர் ஒன்று சேர்ந்து தூக்கிச் செல்வதை வேறு எங்கும் நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. தலைமுறைகள் பல கடந்தும், கலாசார மாற்றங்கள் பல நிகழ்ந்தும் இன்றளவும் நமது பாரம்பர்யத்தைப் போற்றிப் பாதுகாக்கும் கிராமத்து மக்களின் வழிபாட்டை உலக அரங்கிற்கு கொண்டுசெல்லும் ஓர் புது முயற்சியாகத்தான் இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளோம்.

ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம், பெருகவாழ்ந்தான் கிராமத்தில் உள்ள அய்யனாருக்கு, குதிரை எடுப்புத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் தெய்வ வழிப்பாட்டோடு, கலை வழிபாடும் நிறைந்துள்ளது. திருவிழாவுக்கு முன்பு சாம்பான் என்று அழைக்கப்படும் தெய்வத்திடம் உத்தரவு பெற்ற பின்பு மண் குதிரைகள் செய்யப்படுகின்றன. தூய்மையான தரையில் வைக்கோல் தூள்கள் நிரப்பப்படுகின்றன. குதிரை செய்வதற்கான களிமண் ஆற்றிலிருந்து மூன்று வகையறாக்கள் மூலமாக ஆளுக்கு எட்டு கூடை வீதம் மொத்தம் 24 கூடைகள் ஆற்றிலிருந்து எடுத்துவரப்படுகின்றன. பிறகு நான்கு நாள்கள் அதை நன்கு காய வைப்பார்கள்.

நீலமேகம்
நீலமேகம்

குதிரைகள், எந்தவித கருவிகளும் இன்றி கைகளாலேயும், மனக்கணக்கின் மூலமாகவும் மிகவும் நேர்த்தியாகச் செய்யப்படுகின்றன. சிலை செய்யத் துவங்கும்போதே இறையருளால் மனதில் குதிரையின் உருவத்தை உருவகப்படுத்திக் கொண்டும், அளவுகளை மனக்கணக்கால் வடிவமைத்துக் கொண்டும் செய்யத் தொடங்குகின்றனர்.

உதாரணமாக, குதிரை தூக்கும்போது அதன் கால்களானது தரையில் உரசாமல் இருக்க வேண்டும் என்பதற்காக 3 சாண் உயரம் கொண்ட கால்கள் செய்யப்படுகின்றன. நன்கு காய்ந்தபிறகு அவை இரண்டரை அடியாகிறது. இன்று அதிகபட்சம் 12 அடி உயரமுள்ள குதிரை செய்யப்படுகிறது. ஒருகாலத்தில் 15 அடி உயர குதிரை வரையிலும் செய்திருக்கிறார்கள். குதிரைக்கு முத்து மாலை, ஊமத்தை மாலை, கேடயம், சேனம், கத்தி, சங்கிலி, பெல்ட் உள்ளிட்டவையும் மண்ணாலேயே மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்படுகிறது. மண் குதிரைகள் செய்யப்பட்டு, சூளையில் வைத்து சுடப்பட்டு புறப்பாட்டுக்குத் தயாராகும் முன்பு அதற்கு பஞ்சவர்ணங்கள் பூசி அழகுபடுத்துகின்றனர்.

பெருகவாழ்ந்தான் குதிரை எடுப்பு திருவிழா
பெருகவாழ்ந்தான் குதிரை எடுப்பு திருவிழா

அழகுற வடிவமைக்கப்பட்ட குதிரையை புறப்பாட்டின்போது குறுக்குக் கட்டைகளால் கட்டப்பட்டு மூலைக்கு எட்டு பேர் வீதமாக 64 பேர்கள் சேர்ந்து தூக்கிச் செல்கின்றனர். இதுவே, இந்தத் திருவிழாவின் முக்கிய அம்சம். காரணம், சுடுமண் குதிரைகள் பொதுவாக வேண்டுதலின் பெயரில் செய்து வழிபாட்டுக்கு நிறுத்தப்படுவதுண்டு. ஆனால், இங்கு 12 அடி உயரமுள்ள‌ மண் குதிரைகளை மக்கள் தூக்கிக்கொண்டு ஓடுவது கண்கொள்ளாக் காட்சி. அனைத்து தரப்பு மக்களும் சேர்ந்து எவ்வித ஏற்றத்தாழ்வுகளுமின்றி பண்டைக்காலம் தொட்டே திருவிழாக்களை நடத்தியுள்ளார்கள் என்பதை இது எடுத்துரைப்பதாக உள்ளது.

இரவு பத்து மணிக்கு தொடங்கும் திருவிழாவில் யார் யார் எப்போது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்பதும், பூஜை செய்ய வேண்டும் என்பதும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். மொத்தம் ஆறு இடங்களில் குதிரை நிறுத்தப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அப்போது வாணவேடிக்கைகள் விண்ணை அதிரச்செய்ய அதிர் வேட்டுக்கள் முழங்க, அய்யனார் கோயில் குதிரை மிக அழகாக மக்கள் வெள்ளத்தில் நீந்தி வரும்.

வகையறாவுக்கு இரண்டு குதிரைகள் வீதம் மொத்தம் பன்னிரண்டு குதிரைகளும், பாம்பு, தேள் போன்ற உருவங்களும் செய்யப்படுகின்றன. பொதுவாக கிழக்கு பார்த்துத்தான் குதிரையின் சிலை செய்யப்படுவது வழக்கம். மாறாக, ஒருமுறை 1984-ம் ஆண்டு வெயில் நன்றாகப்பட வேண்டும் என்று எண்ணி மேற்குப் பார்த்து சிலை செய்ததால் உடைந்துவிட்டதாகவும், அதனால் குதிரை எடுப்புத்திருவிழா ஒருமாத காலம் தாமதமானதாக இங்குள்ள மக்கள் தெரிவித்தார்கள்.

சோழர்கள் காலத்தில், எல்லைகளைக் கண்காணிக்கும் படைகள் பெருகவாழ்ந்தான் எல்லையில் தங்கியிருந்துள்ளார்கள். காவலுக்குச் சென்று திரும்பிவரும் வீரர்கள் உயிர்ச் சேதமின்றி வரும்போது தங்களைக் காத்த காவல் தெய்வம் அய்யனாருக்கு வேண்டிக்கொண்டு நன்றி தெரிவிக்கும் விதமாக குதிரைகளை மண் பொம்மைகளாகச் செய்து வைத்துள்ளனர். தமிழர்களின் வீரதீரச் செயல்களையும் பாரம்பர்யத்தையும் கலாசாரத்தையும் பறைசாற்றுவதாகவும் தங்களைக் காத்தருளும் தெய்வங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இன்றளவும் இந்தத் திருவிழா நடந்துவருகிறது.

சுடுமண் குதிரைகள்
சுடுமண் குதிரைகள்

பொதுவாக, கிராம தெய்வ வழிபாடு என்பது 32 பரிவாரங்கள் கொண்டது. அவற்றில் சேவகப் பெருமாள், அய்யனார், வீரனார், பூண்டிக்காரன், பெரிய கருப்பு, சின்னக் கருப்பு, பேச்சி முனீஸ்வரர், பெரியாச்சி போன்ற தெய்வ வழிபாடே எஞ்சியுள்ளது. இந்த தெய்வங்கள், ஆலய வழிபாட்டுக்கு முன்னரே ஏற்பட்ட வழிபாட்டு முறையாகும். இவையே இன்றளவும், கிராமக் கோயில்களாக குல தெய்வங்களாக வீற்றிருக்கின்றன” என்கிறார் நீலமேகம். கலையும், பக்தியும் ஒன்று கூடுமிடத்தில் ஊர் ஒன்று கூடும் என்பதும் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற வாழ்வியல் தத்துவம்!

அடுத்த கட்டுரைக்கு