Published:Updated:

`150 ரூபா வித்த பூவை 20 ருபாய்க்கு வாங்க ஆள் இல்ல!' கோயம்பேடு பூ மார்க்கெட் நிலவரம்

கோயம்பேடு மார்கெட்
கோயம்பேடு மார்கெட் ( சே.பாலாஜி )

இந்த ஊரடங்கு காலத்தில் கோயம்பேடு சந்தையில் விற்பனை எப்படி இருக்கிறது? அங்கு மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்கின்றனரா? போன்றவற்றைத் தெரிந்துகொள்ள கோயம்பேடு சந்தைக்கு ஸ்பாட் விசிட் செய்திருந்தோம்.

நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் பரவலைத் தடுக்க ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அத்தியாவசியத் தேவைக்கான கடைகளைத் தவிர்த்து அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னையின் அடையாளங்களுள் ஒன்றான கோயம்பேடு மார்க்கெட் வழக்கமான பரபரப்பு இல்லாமல் காணப்பட்டது.

இந்த ஊரடங்கு காலத்தில் மக்களிடையே வழக்கத்தை விடவும் காய்கறி நுகர்வு அதிகரித்துள்ளது. காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது. அதனால், மக்கள் காய்கறிகளை வாங்குவதில் கூடுதல் முனைப்பு காட்டி வருகின்றனர்.

வேலை இழந்து தவிக்கும் மக்கள் தற்காலிக வருமானத்துக்காக காய்கறி வியாபாரிகளாக மாறி இருக்கின்றனர். மொத்தமாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வாங்கி, மக்களுக்குச் சில்லறை விலையில் விற்பனைசெய்து வருகின்றனர் .

கோயம்பேடு பூ மார்கெட்
கோயம்பேடு பூ மார்கெட்

நாள் முழுவதும் திறந்திருந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டின் உச்சக்கட்ட விற்பனை நேரம் காலை 3 முதல் 10 மணி வரைதான், இந்த நேரத்தில்தான் சென்னை வியாபாரிகள் தங்களின் விற்பனைக்குக் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் கோயம்பேடு மார்க்கெட், நாங்கள் சென்ற போதும் அப்படியே காணப்பட்டது. குறிப்பாக, காய்கறி மார்க்கெட்டில் வழக்கத்தை விடவும் அதிகமான மக்கள் காய்கறிகளை வாங்கக் குவிந்திருந்தனர். கூட்டத்தில் மக்கள் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு முகக்கவசங்கள்கூட அணியாமல் ஆபத்தான முறையில் முண்டியடித்து வாங்கிக்கொண்டிருந்தனர். அதேபோல் உணவகங்கள் மற்றும் பழச்சாறு கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பழ விற்பனை மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

அங்கிருந்து பூ மார்க்கெட்டுக்குச் சென்றோம். வழியெல்லாம் முந்தையநாள் பூக்கள் குவியல்களாய் குவிக்கப்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. மார்க்கெட்டுக்குள், வியாபாரிகள் தங்கள் கடைகளில் விற்பனைக்கு பலவித பூக்களை வைத்துக்கொண்டு வாங்க ஆள் இல்லாமல் சோகத்தோடு அமர்ந்திருந்தனர்.

65 வயது மதிக்கத்தக்க பூ வியாபாரியிடம் பேசச் சென்றோம். நாங்கள் அவர் அருகில் சென்றதும் உடனே எழுந்து நின்று, ``எத்தன கிலோ சார்? கிலோ 20 ரூபாதான்... ஒசூர் பூ அருமையா இருக்கு வாங்கிக்கோங்க" என்றார்.

நாங்கள் பூ வாங்க வரவில்லை என்பதைத் தெரிந்ததும், அவர் மீண்டும் உட்கார்ந்துவிட்டு ஒருவித விரக்தியுடனே நம்மிடம் பேசத் தொடங்கினார். ``சாமந்தி பூவுல பல ரகம் இருக்கு. ஆனா, என்கிட்ட இருக்கறது சாமந்தி பூ இல்ல, இது செண்டு மல்லி. ஒசூர் பகுதில இருந்துதான் இந்தச் செண்டு மல்லி பெரும்பாலும் இந்தியா முழுக்க சப்ளை ஆகுது.

இந்தச் செண்டு மல்லி பூக்களைப் பொறுத்தவரையில், கோயில் விழாக்கள், அரசியல் கட்சி, தனியார் நிகழ்ச்சிகளில் மேடை அலங்காரம் செய்ய அதிகளவு பயன்படுகிறது. கோயில்களில் சாமிக்குப் பூஜை செய்ய, மாலை கட்டவும் பயன்படும். இந்தச் செண்டு மல்லிப்பூ பெண்கள் தலைக்கு வெச்சுக்கப் பயன்படாது.

நான் இந்த வியாபாரத்தை, 40 வருஷமா பண்ணிட்டு இருக்கேன். கொத்தவால்சாவடில மார்க்கெட் இருக்கும்போதே, அங்கே இந்தப் பூ வியாபாரம் பண்ணிட்டு இருந்தேன். கொத்தவால் சாவடி எடுத்துட்டு, இங்க கோயம்பேடு மார்க்கெட்டை 1996 ல ஆரம்பிச்சாங்க. நான் 1997 லேருந்து இங்க கடைபோட்டுருக்கேன். இப்ப வரைக்கும் என் குடும்பத்த இந்தப் பூ வியாபாரம்தான் காப்பாத்திட்டு இருக்கு.

பூ வியாபாரி
பூ வியாபாரி

இந்தப் பூ மார்க்கெட்ல செண்டு மல்லி ரொம்ப பேர்ட்ட இருக்காது. என்கிட்ட கிடைக்கும்... என்ன விட்டா இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க. அவங்ககிட்ட கிடைக்கும். வெறும் கோயிலையும், பூமாலை கடைகளையும் நம்பிதான் என் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கேன்.

தினமும் காலைல 2 மணிக்கு எழுந்து, 3 மணிக்கெல்லாம் மார்க்கெட்டுக்கு வந்துடுவேன். அப்பதான் ஒசூர்ல இருந்து லாரி வரும். எல்லாத்தையும் இறக்கி வெச்சுட்டு திண்ணையில வியாபாரத்துக்கு உட்கார்ந்துடுவேன். 3.10-க்கு வியாபாரத்தைத் தொடங்கிடுவேன். என் கடையில இருந்ததுதான் பாரிஸ் காளிகாம்பாள் கோயிலுக்கு, திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலுக்கெல்லாம் மாலைக்கு பூ வாங்கிட்டுப் போவாங்க. காலைல 3 மணிக்குச் சந்தைக்கு வந்தா திரும்ப வீட்டுக்கு போறதுக்கு 11 மணி ஆகிடும். ஆனா, இந்த ஊரடங்கு தடை போட்டதுல இருந்து வியாபாரம் இல்லாம, தினமும் சாயங்காலம் 3 மணி வரைக்கும்கூட உக்காந்துட்டு இருக்கேன்.

நாற்பது வருஷமா இந்தப் பூ வியாபாரம் பண்ணிட்டு இருக்கேன். பரபரப்பா வியாபாரம் செஞ்சாலும் பெருசா லாபம் ஒண்ணும் கெடச்சுறாது. ஆனா, அந்த வருமானத்த வெச்சே என்னோட ரெண்டு புள்ளைங்கள கரையேத்தி விட்டுட்டேன்.

இந்த ஊரடங்கு அமல்படுத்தி என்னைக்கு கோயில் குளத்தை மூடுனாங்களோ, அன்னைக்கே என் வருமானம் ஒண்ணுமே இல்லாமப் போய்டுச்சு.

இன்னிக்கு வியாபாரம் பாத்தாதான் நாளைக்கு சோறு'ங்குற நிலைமைல வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்கேன். 21 நாள் வீட்ல உக்காந்துட்டு அரசாங்கம் தர 1000 ரூபாய வெச்சுட்டு எப்படி வயித்த கழுவ முடியும்.

கோயம்பேடு  பூ மார்க்கெட்
கோயம்பேடு பூ மார்க்கெட்

எங்கள நம்பி அங்க விவசாயிங்க இருக்காங்க. விளைச்சல் நல்லா இருக்கும்போது இந்த மாதிரி ஒரு நிலைமை வந்துடுச்சு. நாங்க முக்கியமா அவங்களுக்காகதான் இந்த நேரத்துலையும் வியாபாரம் செய்யறோம். காய்கறி அத்தியாவசியம்... ஆனா, பூ அப்படி இல்ல.

என் கடைக்குப் பின்னாடி போய்ப் பாருங்க தம்பி... நேத்து வந்த லோடு பூவ அப்படியே குப்பையிலே கொட்டி வெச்சுருக்கோம். காய்கறியைக்கூட பதப்படுத்தி கொஞ்ச நாள் வெச்சுக்கலாம். ஆனா, பூ அப்படியில்ல ஒருநாளுக்கு மேல தாங்காது. இல்லனா குப்பையிலதான் போடணும்.

சாதாரணமா செண்டு மல்லி ஒரு கிலோ 150 வரைக்கும்கூட போகும், ஆனா இப்ப கிலோ 20 ரூபா, 30 ரூபாய்க்கும் வித்துகிட்டு இருக்கேன். இவ்ளோ விலை கொறஞ்சும்கூட வாங்குறதுக்கு ஆள் இல்லாம குப்பைக்குத்தான் போகுது.

ஏதோ கடமைக்குனு வியாபாரம் பண்ணிட்டு இருக்கேன். பூவுக்கு வண்டி கூலி கொடுத்துட்டு அத வித்து லாபம் பாக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்பலாம் ஒரு நாளைக்கு நூறு ரூபா கிடைக்குறதே பெரிய விஷயமா இருக்கு.

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்குற என்ன மாதிரி வியாபாரிகளுக்கு அரசு ஏதாவது உதவி செஞ்சா நல்லா இருக்கும் தம்பி" என்றார் வேதனையுடன்.

இவரைப் போன்ற பல சாமானியர்களின் தொழிலும் பாதிக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கக்கூடிய ஒன்று.

அடுத்த கட்டுரைக்கு