Published:Updated:

குட்டி குட்டி ஜூஸ்பெரி, குருவிமிட்டாய், வர்க்கி... 90'ஸ் கிட்ஸின் நாஸ்டால்ஜிக் மிட்டாய்க்கடை!

ஜூஸ் பொரி கடை
ஜூஸ் பொரி கடை

பெயர் பலகைகூட இல்லாத அந்த பேக்கரியில் குருவி ரொட்டி, ரஸ்க், பன், ஜூஸ்பெரி, சீரக மிட்டாய், வர்க்கி என 90'ஸ் அயிட்டங்கள் மனதை அள்ளுகின்றன.

``இந்தக் கடை ஜூஸ்பெரி குட்டி குட்டியாதான் இருக்கும். ஒரே வாய்ல போட்டுக்கலாம். ஆனா டேஸ்ட்டு செம!'' - சொல்லும்போதே எச்சில் ஊறுகிறது மதுரை மேலூர்வாசிகளுக்கு.

மேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து கக்கன் சிலையைக் கடந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ளது பெரிய பள்ளிவாசல். இதற்கு நேர் எதிராக கேக் டப்பா மாதிரி குட்டிக் கடையாகத் தென்படுகிறது அந்த பேக்கரி. அருகில் சென்றால் டீ, பன் வாசம் தூக்கி அடிக்கிறது. கூடவே ஆரஞ்சு, வெள்ளை, ரோஸ், மஞ்சள் என கலர் கலராக குட்டி குட்டி ஜூஸ்பெரிகள் கண்களை இழுக்கின்றன.

பளிங்கு மாதிரி மின்னும் கண்ணாடி பாட்டிலில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஜூஸ்பெரிகள், விரல் நுனி அளவுதான் இருக்கின்றன. அதன் சுவை பழக்கப்பட்டவர்களுக்கு, பார்க்கும்போதே அனிச்சையாக நாக்கில் சுவை உணர்வை தூண்டப்படும். ஒரு ஜூஸ்பெரிய எடுத்து வாயில் வைத்தால்... சர்ர்ர்ரெனக் கரைந்துவிடும்.

பாண்டித்துரை
பாண்டித்துரை

பெயர் பலகைகூட இல்லாத அந்த பேக்கரியில் குருவி ரொட்டி, ரஸ்க், பன், ஜூஸ்பெரி, சீரக மிட்டாய், வர்க்கி என 90'ஸ் அயிட்டங்கள் மனதை அள்ளுகின்றன. தொப்பி மாதிரி இருந்த கண்ணாடி ஜாடியின் மூடியைத் திறந்து, இரண்டு மஞ்ச கலர் ஜூஸ்பெரியை எடுத்து வாயில்போட்டோம். கடையின் உரிமையாளர் பாண்டித்துரை ரேடியோ சத்தத்தை குறைத்துவிட்டு நம்மிடம் பேசினார்.

``மதுரை, மேலூர் சொக்கம்பட்டி பக்கத்துலதான் எனக்கு வீடு. கிட்டத்தட்ட 50 வருஷத்துக்கும் மேல இந்தப் பள்ளிவாசலுக்கு முன்னாடி, இங்கதான் கடை வெச்சுருக்கோம். நாங்க அண்ணன், தம்பிங்க ஆறு பேரு, ஒரே ஒரு பொண்ணு. நான்தான் வீட்டுக்கு மூத்தவன்.

நான் மட்டும் சின்ன வயசுலயிருந்தே எங்கப்பாகூட சேர்ந்து பேக்கரியில இருந்துட்டேன். என் தம்பிங்க எலெக்ட்ரிக் கடை, போட்டோ ஸ்டூடியோனு தொழில் பண்றாங்க. ஆரம்பத்துல எங்க பேக்கரியில 15 பேர் வேலை செஞ்சாங்க. இப்ப நான் மட்டும்தான் இருக்கேன்.

மேலூர் சுத்துப்பட்டுல பல டீக்கடைக்கும், பெட்டிக் கடைக்கும் நம்ம கடையில இருந்துதான் சரக்கு போகும். கடையில வேலைசெய்தவங்க கிழக்க, தெக்கனு பன்னையும் வர்க்கியையும் கொண்டு சேர்த்தாங்க. அப்புறம் மேலூர்ல பெரிய பெரிய பேக்கரி எல்லாம் வந்துட, எங்க கடை சிறுசா போச்சு. இப்போ நான் மட்டும் கடையைப் பார்த்துக்கிறேன்.

ஜூஸ் பெரி
ஜூஸ் பெரி

வயசானதுக்கு அப்புறம் அப்பாவால கடைக்கு வர முடியல. பல வருசமா தொழில்ல இருந்தாலும அப்பா இல்லாம வேலைசெஞ்சது கை உடைஞ்ச மாதிரி இருந்துச்சு. அப்புறம் தொழிலைப் பழகிக்கிட்டேன்.

முன்ன பட்டர் பன், தேங்காய் பன் எல்லாம் போட்ருக்கோம். ஆனா, ஆட்கள் இல்லாம போனதுக்கு அப்புறம் அதையெல்லாம் குறைச்சுட்டேன். சீரக மிட்டாய், சூடன் மிட்டாய், குருவி பிஸ்கட்னு இப்படி இந்திய கம்பெனிகளோட அயிட்டங்களா பார்த்து கடையில வாங்கி வைப்பேன்'' என்றவர், தன் தயாரிப்புப் பொருளான ஜூஸ்பெரி, வர்க்கி, பன் பற்றிப் பேசினார்.

``எங்க கடை ஜூஸ்பெரியைப் பார்த்தாலே உங்களுக்குப் பிடிச்சிடும். குட்டி, குட்டியாதான் போடுவேன். பெருசா இருந்தா ஜூஸ்பெரி கடிக்கையில செதறும். எங்க ஊரு ஸ்கூல் பசங்களுக்கு பிடிச்ச ஸ்நாக்ஸு இது. நாலு அஞ்சு கலர்ல இருக்குறதால குழந்தைங்க கலருக்கு ரெண்டு, நாலுனு மிக்ஸ் பண்ணி வாங்கிட்டுப் போகுங்க.

குழந்தைகளுக்குக் கொடுக்கிற பொருள் என்பதால, ரொம்ப பக்குவமாத்தான் எசென்ஸ் (NNS - Nonnutritive sweeteners) சேர்ப்பேன். அதனால திகட்டல் இருக்காது. என்கிட்ட சின்ன பன், பெரிய பன்னு எல்லா அயிட்டமும் இருக்கு. சின்ன பனை டீ கிளாஸ்குள்ள விட்டு டீ தொட்டு சாப்பிடுற அளவுக்கு சின்னதா செய்வேன். அதுவே வர்க்கினா எண்ணெய் சேர்த்து, தட்டையா செஞ்சு, ரெண்டு வேக்காடு கொடுப்பேன். மெல்லிசா இருக்குறதால குழந்தைங்ககூட எளிமையா சாப்புடுவாங்க.

கடைக்கு காலையில 6, 7 மணிக்கெல்லாம் வந்துருவேன். ஈஸ்ட்டு போட்டு வேலைபார்க்க அப்பதான் சரியா இருக்கும். என் கடையில வாங்கி வெச்சு விக்கிற பொருள்கள் எல்லாம் ஒரு மாசம்வரை தாக்குப்பிடிக்கும். அதுக்கு மேல கெடாம இருக்குற பொருளுக்கு அதுக்குத் தகுந்த ரசாயனங்களைத்தானே சேர்ப்பாங்க? அதனால, அதையெல்லாம் வாங்க மாட்டேன்.

குட்டி குட்டி ஜூஸ்பெரி, குருவிமிட்டாய், வர்க்கி... 90'ஸ் கிட்ஸின் நாஸ்டால்ஜிக் மிட்டாய்க்கடை!

வேலைய முடிச்சுட்டு மதியம் சாப்பிட்டு குட்டி தூக்கம் போட்டுட்டு கடைக்கு வந்திருவேன். சாயங்காலம்தான் வியாபாரம் நல்லா இருக்கும். 6 மணிக்கு மேல என் ரெகுலர் கஷ்டமர் வர ஆரம்பிச்சிருவாங்க. கடையில எப்போதும் வானொலி சத்தம் கேட்கும்'' என்பவருக்கு, இசை ஆர்வம், புத்தக வாசிப்பு போன்ற முகங்களும் உள்ளன.

``கோடை பண்பலையில நிறைய முறை தொடர்பு கொண்டு பேசியிருக்கேன். அப்படிப் பேசி கிட்டத்தட்ட 8 தடவை பரிசு வாங்கியிருக்கேன். இந்தப் பழக்கத்தால எனக்கு புத்தக வாசிப்பும் அதிகமாச்சு. பயணக் கட்டுரைகள தேடித் தேடிப் படிப்பேன். கடையிலயும் வீட்டுலயும் நூத்துக்கணக்கான புத்தகங்கள் இருக்கு. தமிழ்வாணனின் புத்தகங்கள் ரெம்பப் பிடிக்கும். சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் எழுதின `அவர்களால் முடியும் என்றால், நம்மாளும் முடியும்' என்ற புத்தகம் விஜயா பதிப்பகம் மூலம் மேலூர்ல வெளியிட்டாங்க.

சைலேந்திர பாபுவிடம் புத்தகம் நினைவுப் பரிசு
சைலேந்திர பாபுவிடம் புத்தகம் நினைவுப் பரிசு

நிகழ்ச்சிக்கு நானும் போயிருந்தேன். சைலேந்திர பாபு எனக்கு அந்தப் புத்தகத்தை நினைவுப் பரிசா கொடுத்தார். அந்த அனுபவம் மறக்க முடியாதது. நான் புத்தகம் வாசிப்பதால எனக்குப் பல நண்பர்கள் இலவசமா புத்தகம் கொடுப்பாங்க. பதிலுக்கு நானும் ஒரு புத்தகம் கொடுத்துவிடுவேன்.

பள்ளிவாசலுக்கு எதிர் கடையா இருக்குறதால, பொதுவா தேர்தல் நேரத்துல ஓட்டு கேட்டு வர்ற வேட்பாளர்கள் எல்லாம் மசூதிக்கு போயிட்டு நம்ம கடைக்கு வருவாங்க. கம்யூனிஸ்ட் தோழர் மோகன் என் கடையில் இருக்கும் புத்தகங்கள பார்த்து ஆச்சர்யப்பட்டார்.

சொல்ல மறந்துட்டேன்... என் கடையில் ரொம்ப பழைய மாவு மெஷின் ஒண்ணு இருக்கு. 1982-லயே அதோட விலை 13,000 ரூபாய்.

அடுமனை
அடுமனை

10,000 லோன் போட்டு பாளையங்கோட்டையில இருந்து வாங்கியாந்தோம். ரெக் மிக்ஸ்னு சொல்லுவாங்க. அதுல பிசையுற மாவுல செய்யும் சரக்கு கண்ணாடி மாதிரி இருக்கும் (நேர்த்தியாக). இன்னவரைக்கும் அதுல ஒரு வேலைகூட வந்ததில்ல. அந்தக் காலத்துலயே மெஷின் வெச்சு பேக்கரி நடத்துன கடை நம்ம கடைதான். இன்னைக்கு பெருசா உயராம இருக்கலாம். ஆனாலும் என் கஷ்டமர்கள நான் இப்பவரை திருப்திப்படுத்துறது சந்தோசமா இருக்கு" என்றார் நிறைவுடன்.

அடுத்த கட்டுரைக்கு