Published:Updated:

``இதுக இல்லைன்னா இன்னைக்கு நான் இல்ல; அதான் சமாதி கட்டுனேன்!" - 50 நாய்களும் தங்கசாமி ஐயாவும்

தங்கசாமி
தங்கசாமி

தன் 77 வயதில், 50 வருடங்களுக்கும் மேலாக நாய்களுடன் பயணித்து வருபவர். நாய்களுக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த மனிதர் தங்கசாமி ஐயா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``ஒரு மனுஷனை இன்னொரு மனுஷன் கொல்லும்போது சுத்தி இருக்க மனுஷன் பெரும்பாலும் வேடிக்கைதான் பார்ப்பான். ஆனா, அஞ்சறிவுன்னு சொல்றோமே இந்த நாய்ங்க... தங்களோட உசுரு போகுற வரை தனக்கு சோறுபோட்டவனை இன்னொருத்தன தொடவிடாது. இதோ நீங்க பார்க்குறீங்களே சமாதி, அதுல அந்தக் கடைசி ரெண்டு சமாதியில இருக்க நாய்க்குட்டிக, பொறந்து வெறும் 39-வது நாளுல, என்னைய அடிக்க வந்த மூணு பேரையும் மறிச்சு சமாளிச்சு என்னய காப்பாத்துனுச்சுக. சுத்தி இருந்த ஜனங்க வேடிக்கைதான் பார்த்துச்சு. அன்னைக்கு இந்த நாய்க்குட்டிக இல்லைன்னா இன்னைக்கு நான் இல்ல.

தங்கசாமி
தங்கசாமி

இதுக மேல பாசம் வைக்காம வேற யாரு மேல நான் வச்சுட முடியும் சொல்லுங்க? நாய நாயிதானேனு நினைச்சுடக் கூடாது. நம்மள காக்குற தோழன் அது. இந்த மண்ணு நாயி, நரி பூனைன்னு எல்லாருக்கும்தானே சொந்தம்? நான் இந்த நாய்கள சொந்தமாக்கிக்கிட்டேன்'' - வயது மூப்பின் காரணமாக வார்த்தைகள் மெது மெதுவாக விழுந்தாலும் தங்கசாமி ஐயாவின் சொற்களில் சத்தியம்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்த சித்தூர் கிராமத்துக்குள் நுழைந்தால், சிறு சிறு சமாதிகளுக்கு நடுவே ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகையின் அடியில் நாய்க்குட்டியுடன் அமர்ந்திருந்தார் தங்கசாமி ஐயா. கூன் விழுந்த தேகம், நரைத்துக் கலைந்த பார்வை மங்கிய முகம்... இதுதான் தங்கசாமி ஐயாவின் அடையாளம். தன் 77 வயதில் 50 வருடங்களுக்கும் மேலாக நாய்களுடன் பயணித்து வருபவர். நாய்களுக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த மனிதர்.

``தங்கசாமி ஐயாவுக்கு எப்படி நாய்கள் மீது பிரியம் வந்துச்சு?"

``சின்ன வயசுல நாய் மேல எல்லாம் எனக்கு பிரியம் இல்லப்பா. கூடப்பொறந்தவங்க பத்து பேருல நான் மட்டும்தான் விட்டேத்தியா திரிவேன். வீடு தங்க மாட்டேன். காளையார்கோவில், பட்டுக்கோட்டைனு சினிமா, நாடகம்னு பார்க்கக் கிளம்பிருவேன். இப்போ எனக்கு 77 வயசாகிப்போச்சு. அப்போ 27 வயசுல சரிதான்னு ஒரு நாய எடுத்து வளர்த்தேன். கொஞ்ச நாளுலேயே, பக்கத்துத் தோட்டத்துல காக்காவுக்கு வச்ச விஷத்துல, நான் வளர்த்த நாயி மாட்டிக்கிச்சு. நினைச்சு நினைச்சு சோறு தண்ணி இறங்கல. சுத்தி இருந்தவங்க அந்தத் தோட்டத்துலேயே அடக்கம் பண்ணிட்டாங்க. அதை மறக்குறதுக்கு இன்னொரு நாயி வளர்க்க ஆரம்பிச்சேன். அப்படியே ஒண்ணு, ஓண்ணா சேர்ந்து ஒரு கட்டத்துல 50 நாய் வரை வளர்த்தேன். எல்லாத்துக்கும் என் போக்குல நல்லம்மா, பாப்பா, துரைசாமின்னு மனுசப்பய பேரு வச்சுக்கிட்டேன். எல்லாம் கொஞ்ச காலம் இருந்தாக, அப்புறம் போயி சேர்ந்துட்டாக. இப்போ ஒரே ஒருத்தி மட்டும் என்கூட இருக்கா.''

சிலை
சிலை

``சிலை எழுப்புறதுக்கு என்ன காரணம்..?"

``ஒவ்வொரு நாயையும் என் புள்ள மாதிரிதான் பார்த்தேன். செத்துப்போச்சேன்னு மண்ணுல போட்டு போனா அது வாழ்ந்ததுக்கான அடையாளமே இல்லாம போயிருமேன்னு, நானே இறங்கி குழி தோண்டி பொதைச்சு மண்ணுலயே சிலை எழுப்பிருவேன். குழிக்குள்ள உடல தள்ளுறப்போ மனசு அவ்வளவு கனக்கும். அதுங்களுக்கு வச்ச சோத்து தட்டு முதற்கொண்டு அதே குழிக்குள்ள தள்ளி மண்ண மூடிருவேன். நீங்களே போயிட்டீங்க, இந்த தட்டுகள வச்சு நான் என்ன பண்ணப்போறேன்னு உள்ள போட்டு மூடிருவேன். இப்போவும் இந்த ஊருக்குள்ள புதுசா வர்றா சனம் எல்லாம், எதும் கோயிலான்னுதான் பார்க்க வருவாங்க. அது கோயில் இல்ல தாயி, என் புள்ளைகளோட சமாதின்னு சொல்லிருவேன்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``நாய்கள எப்படி பார்த்துக்கிட்டீங்க?"

``கிராமத்துல மக்கள் பணியாளர் வேலைக்குப் போவேன். ரேஷன்ல அரிசி போடுவாங்க. அது போக பால், ரொட்டினு மாசத்துக்கு 5,000 வரை செலவாகும். நானும் மனசாரதான் ஆக்கிப்போடுவேன். இன்னைக்கு எல்லாம் போச்சு. ஒரு கால் படி அரிசி மட்டும் பொங்குறேன். இந்த ஜீவனுங்க இல்லாம வாழ்க்கை ரொம்ப பயமா இருக்கு.''

``கடைசி வரை தனியாவே இருக்கோமேன்னு கஷ்டமா இல்லையா?"

``அம்மா இருந்த வரைக்கும் என்னய பூ மாதிரி பார்த்துக்கிச்சு. மரணப்படுக்கையில கெடந்தப்போ, நான் இல்லைன்னா யாரும் உன்னை பார்த்துக்க மாட்டாங்க, அதுக்காகத் தற்கொலை மட்டும் பண்ணிக்கிடாத, வாழ்க்கை முழுசுமே கஷ்டம் வந்தாலும் நீ வாழ்ந்து காட்டணும்'னு சொல்லிட்டுப்போச்சு. இன்னைக்கு வரைக்கும் இதே ஊர்லதான் சொந்தக்காரங்க இருக்காங்க. ஆனாலும் யாருகிட்டயும் போயி கையேந்துனது இல்ல.

தங்கசாமி
தங்கசாமி

எல்லாத்துக்கும் ஒரு வயசு இருக்குல்ல. என்னோட இள வயசுல கல்யாணப் பேச்சு எல்லாம் நடந்துச்சு. ஆனா, கல்யாணம் நடக்கல. நானும் அதோட விட்டுட்டேன். எனக்குனு துணைக்கு இந்த நாய்க்குட்டிக வந்துச்சு. என் வாழ்க்கையும் இதுகளோடவே போயிருச்சு. அவ்ளோ நாய்க்குட்டிகள் கூட இருந்தப்போ, தனியா இருக்கோமேனு என்னைக்கும் தோணுனது இல்ல. இதுக ஒண்ணொன்னா செத்துப்போகவும், இப்போ எனக்கே பயமா இருக்கு. இப்போ ஒரே ஒரு நாய் மட்டும் கூட இருக்கு. அஞ்சு நிமிஷம் அசந்து தூங்குனாலே உசுரோட இருக்கேனா, செத்துப்போயிட்டேனான்னு தலைய என் கழுத்துல வச்சு அசைச்சு பார்க்கும். இந்த நாயும் இல்லைன்னா நான் செத்தா கூட யாருக்கும் தெரியாது. உடம்பு அழுகுன பின்னாடிதான் ஊருக்குத் தெரியும். இந்த நாய் இருக்கும்போதே நான் செத்துப்போயிடணும். அதுவாச்சும் ஊளையிட்டு ஊரைக்கூட்டி, செத்துப்போயிட்டான்னு ஊருக்குத் தகவல் சொல்லும். அதுவும் இல்லைனா அனாதைப் பொணமாதான் போயிச்சேரணும். இந்த நெனப்பு மட்டும்தான் இப்போ எனக்கு இருக்கு.''

தங்கசாமி ஐயாவின் உள்ளங்கைகளுக்குள் தன் தலையைக் கொடுத்துச் தடவச் செய்கிறது அவர் நாய். அதற்கு ஆறுதல் என்று பெயர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு