Published:Updated:

`ஒரு மாச வாழ்க்கையோடு அழ வச்சுட்டுப் போயிட்டாரே’ - கலங்கும் கோட்டைப்பட்டினம் மீனவரின் மனைவி!

மீனவர் ராஜ்கிரண் குடும்பத்தினர்
News
மீனவர் ராஜ்கிரண் குடும்பத்தினர்

``இலங்கை ராணுவம் சித்திரவதை செஞ்சு கொன்னுருக்கு. காலில் துப்பாக்கி குண்டு பாய்ஞ்ச தடம் இருந்துச்சு. முகத்தையும் சிதைச்சிருக்காங்க. வாயில் ஆசிட் ஊத்தி கொன்னுட்டு விபத்தில் செத்ததா பொய் சொல்லுறாங்க”

"உன் கூடவே இருக்கணும்னு ஆசையா இருக்கு. அதனால் இந்த முறை மட்டும், கடைசியா கடலுக்குப் போயிட்டு வந்திடுறேன்னு” சொல்லிச் சென்ற கணவர் ராஜ்கிரணின் உயிரற்ற உடல் மட்டுமே கரை வந்து சேர்ந்ததால், கண்ணில் நீர் வற்றும் அளவுக்கு அழுது தவிக்கிறார், மீனவரின் மனைவி பிருந்தா. இந்தத் தம்பதிக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது என்பது தான் வேதனையின் உச்சம்.

கடலுக்குள் விசைப்படகில் மீன் பிடிக்கச் செல்பவர்கள் இலங்கை ராணுவத்தின் பிடியில் சிக்காமல் இருக்க உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தொழில் செய்ய வேண்டியிருப்பது தொடர் கதையாகி வருகிறது. கடைசியாக, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற ராஜ்கிரண் என்பவரை இலங்கை கடற்படை பிணமாக அனுப்பி வைத்திருக்கிறது.

உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண்
உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண்

கடந்த அக்டோபர் மாதம் 18-ம் தேதி ராஜேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை ஓட்டிச் சென்ற ராஜ்கிரணுடன் சுகந்தன், சேவியர் ஆகியோரும் சென்றிருக்கிறார்கள். நடுக்கடலில் ராஜ்கிரண் சென்ற விசைப்படகைச் சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், சுகந்தன், சேவியர் ஆகியோரைக் கைது செய்தனர். படகு கவிழ்ந்ததில் ராஜ்கிரண் உயிரிழந்ததாகத் தெரிவித்து, அவரின் உடலை மட்டுமே அக்டோபர் 23-ம் தேதி அனுப்பி வைத்தது, இலங்கை கடற்படை.

கோட்டைப்பட்டினத்தில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இருந்த ராஜ்கிரணின் நண்பர்களிடம் பேசினோம். “இதய நோய் பாதிப்பு காரணமாக ராஜ்கிரணின் அப்பாவால் கடலுக்குச் செல்ல முடியாததால், கடந்த 10 வருடமாக ராஜ்கிரண் தொழிலுக்குச் சென்று வருகிறார். எல்லோருக்கும் உதவும் குணமுடைய அவருக்கு 45 நாள்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. அதற்குள்ளாகவே இப்படியொரு கொடூரம் நடந்து விட்டதே..” என்று வேதனைப்பட்டார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ராஜ்கிரணின் குடும்பத்தினரைச் சந்திக்க அவரின் வீட்டுக்குச் சென்றோம். சிறிய ஓட்டு வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் ராஜ்கிரணின் மனைவி பிருந்தாவுக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டுப் பேசினோம். நம்மிடம் பேசிய அவர், "லேப் டெக்னீசியன் கோர்ஸ் முடிச்சிட்டு திருப்பூர்ல வேலை செஞ்சுக்கிட்டிருந்தேன். அவர் எனக்கு மாமா முறை என்பதால் ஆவணி கடைசியில் கல்யாணம் நடந்துச்சு.

அவரைக் கல்யாணம் செஞ்ச பிறகு தான் எனக்கு கடல் தொழில் பத்தியே தெரியவந்துச்சு. அவர் என்னிடம், ‘இந்தத் தொழில் ரொம்ப கஷ்டம். இலங்கை கடற்படை பிடிச்சுச்சுன்னா என்ன வேணும்னாலும் நடக்கும்னு’ ஒரு நாள் சொன்னார். அதைக் கேட்டு நான் பயந்ததும், ’எனக்கு எதுவும் நடக்காது பிருந்தா. உனக்காகவாவது நான் பல வருஷம் வாழ்வேன்னு’ சொன்னார். ஆனா, ஒரு மாச வாழ்க்கையோடு என்னை அழ வச்சுட்டுப் போயிட்டாரே..” என்றவர், அதற்கு மேல் பேச முடியாமல் கதறி அழுதார்.

உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் உடல்
உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் உடல்

சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்து பேசிய பிருந்தா, "அப்பா, அம்மா மேல அவருக்கு கொள்ளை பிரியம். கடைசியா கடலுக்குப் போகும் போது கூட, ’அம்மா, அப்பாவ பத்திரமாப் பார்த்துக்கனு’ சொல்லிட்டுப் போனாரு. கல்யாணம் கட்டிக்கிட்ட நாள் முதலாவே ரொம்பப் பாசமா இருந்தாரு. என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுத்தாரு குடும்பத்தைக் கவனிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டியிருந்ததால் என்னோடு இருந்ததை விடக் கடலில் தான் அதிகம் இருந்தாரு.

என்னை வெளியே எங்கேயும் கூட்டிட்டுப் போகலையேங்கற வருத்தம் இருந்துச்சு. வெளியூருக்குச் சுற்றுலா கூட்டிட்டுப் போறதா சொல்லிக்கிட்டே இருந்தார். கடைசியா கடலுக்குப் போறதுக்கு முன்னாடி, ’முன்ன மாதிரி கடல் தொழிலில் வருமானம் இல்ல. அதனால கடைசியா இப்ப கடலுக்குப் போயிட்டு வந்துடுறேன். இனி வீட்டுலயே சின்னதா ஒரு பெட்டிக்கடை வச்சிக்கிட்டு உன் கூடவே முழுசா இருந்திடுறேன்னு’ சொல்லிட்டுப் போனவர், இப்படி வருவார்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலையே. அவர் இல்லாமல் எப்படி வாழப்போறேன்னு சொல்லிக் கதறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அங்கிருந்த ராஜ்கிரணின் அண்ணன் ராஜா, " நானும் 20 வருஷமா கடல் தொழில்ல இருந்தேன். நம்ம எல்லைக்குள் மீன் பிடிச்சாக் கூட இலங்கை கடற்படை டார்ச்சர் பண்ணுவாங்க. டீசல் விலையேற்றம், இலங்கை கடற்படை பிரச்னை காரணமா நான் விசைப் படகு தொழிலை விட்டுட்டு நாட்டுப்படகில் போய் மீன்பிடிக்கிறேன். என் தம்பியை இலங்கை ராணுவம் சித்திரவதை செஞ்சு கொன்னுருக்கு. அவன் இடுப்புல ஒரு காயம் இருந்துச்சு. காலில் துப்பாக்கி குண்டு பாய்ஞ்ச தடம் இருந்துச்சு. முகத்தையும் சிதைச்சிருக்காங்க. வாயில் ஆசிட் ஊத்தி கொன்னுட்டு விபத்தில் செத்ததா பொய் சொல்லுறாங்க. என் தம்பியோடு இலங்கை கடற்படை பிடிச்சுட்டுப் போன ரெண்டு பேரையும் பத்திரமா மீட்கணும். யாருமின்றி தவிக்கும் என் தம்பி மனைவிக்கு அரசு வேலை கொடுக்கணும்" என்று படபடத்தார் ராஜா.

ராஜ்கிரண் கடலுக்குச் சென்றபோது வேறொரு விசைப்படகில் சென்ற பிரபாகரன் என்பவரிடம் பேசினோம். ``நாங்க 18-ம் தேதி காலை 7 மணிக்கு மீன்பிடிக்க கிளம்பினோம். மாலை 4 மணிக்கு நடுக்கடலில் மீன் பிடிச்சுகிட்டிருக்கும் போது, இலங்கை நேவி வேகமாக வந்துச்சு. அவங்க வந்த வேகத்தைப் பார்த்துப் பயந்த நான் வலை, பலகை, மடி எல்லாத்தையும் உருவி போட்டுட்டு கரையை நோக்கி படகை திருப்பினேன்.

உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் உடல்
உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் உடல்

கொஞ்ச நேரத்தில் வாக்கி டாக்கியில் என்னிடம் பேசிய ராஜ்கிரண், ’இலங்கை நேவி எங்களை விரட்டுது. நீ சீக்கிரம் கரையோரம் போயிடுனு’ சொன்னாரு. பிறகு எந்தத் தகவலும் வரல. நான் எங்க போட்டுல மேலேறிப் பார்த்தப்ப இலங்கை நேவி போட்டும் ராஜ்கிரண் ஓட்டுன போட்டும் பக்கத்துல இருந்துச்சு. பிறகு போட்டை இழுத்துட்டுப் போனது தெரிஞ்சுது. ரோந்து வரும் போது, விசைப்படகுல நேவி போட் மோதி விபத்து ஏற்பட்டு கவிழ்ந்துச்சுன்னு சொல்றது அப்பட்டமான பொய். ரெண்டு பேரைக் கைது செய்த கடற்படையினர், தமிழக மீனவர்களைப் பயமுறுத்தறுதுக்காக ஒட்டுநர் ராஜ்கிரணை சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க. இத்தகைய கொடூரங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இயற்கைச் சீற்றத்துடன் போராடி உயிரைப் பணயம் வைத்து மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கும் வகையில் இலங்கை அரசுடன் பேசி முடிவெடுக்க வேண்டியது அவசியம்.