Published:Updated:

குமரி: சிறுவனின் உயிரைக் காவு வாங்கியதா காய்ச்சல் ஊசி? - தலைமறைவான மருத்துவர்

மருத்துவமனையை முற்றுகையிட்ட மக்கள்
மருத்துவமனையை முற்றுகையிட்ட மக்கள்

ஊசி போட்ட இடத்தில் ஏற்பட்ட வலியால் இரவு முழுவதும் தூங்காமல் வலியால் துடித்த அபினேஷ் மயக்கநிலைக்குச் சென்றிருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தை அடுத்த கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் அகில். பால் வெட்டும் தொழிலாளியான இவருக்கு இரண்டு மகன்கள். அதில் இளைய மகனான 12 வயதான அபினேஷ் கடையாலுமூடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவருகிறார். சில நாள்களாகக் காய்ச்சலால் அவதிபட்டவரை பெற்றோர் கடையாலுமூட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 30-ம் தேதி சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர் லூக்கா என்பவர் சிகிச்சை அளித்திருக்கிறார். அப்போது மருத்துவர் ஊசி போட்டிருக்கிறார். பின்னர் அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

ஊசி போட்ட இடத்தில் கடுமையான வலி ஏற்பட்டதால் கடந்த 31-ம் தேதி மறுபடியும் சிறுவன் அபினேஷை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவர் மீண்டும் சிகிச்சையளித்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால் இரவு முழுவதும் தூங்காமல் வலியால் துடித்த அபினேஷ் மயக்கநிலைக்கு சென்றிருக்கிறார். கடந்த 1-ம் தேதி காலையில் மீண்டும் அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றிருக்கிறார்கள். மருத்துவமனையில் அபினேஷுக்கு குளூக்கோஸ் ட்ரிப் போடப்பட்டிருக்கிறது. அப்போது சிறுவனின் உடல்நிலை மேலும் மோசமாகியிருக்கிறது.

மரணமடைந்த சிறுவன் அபினேஷ்
மரணமடைந்த சிறுவன் அபினேஷ்

இதையடுத்து வேறு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்படி மருத்துவர் கூறியிருக்கிறார். பெற்றோர் உடனடியாக நாகர்கோவிலிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் சென்று சேர்வதற்கு முன்பாகவே சிறுவன் இறந்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோரும் உறவினர்களும் நேற்று மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து உறவினர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

`சிறுவனின் உடலைப் பிரேத பரிசோதனை செய்தால் உண்மை வெளியாகும். அதன் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்’ என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர். சிறுவனின் மரணம் மர்மச்சாவு என போலீஸார் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக மருத்துவர் லூக்கா என்பவர்மீது கடையாலுமூடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் மருத்துவர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இது குறித்து சிறுவன் அபினேஷின் உறவினர்கள் கூறுகையில், ``அபினேஷின் தந்தை புருஷோத்தமன் சலவைத் தொழில் செய்துவருகிறார். புருஷோத்தமன் வாய்பேச முடியாதவர். சிறுவனுக்குக் காய்ச்சல் என்றதும் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார். அந்த டாக்டர் ஊசி போட்டிருக்கிறார். தவறாக ஊசிபோட்டதால் சிறுவன் மரணமடைந்துவிட்டார். தலைமறைவாக இருக்கும் மருத்துவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு