Published:Updated:

`தனக்குக் கிடைத்த நிதியுதவி மூலம் சேவை’ -மாற்றுத்திறனாளியை நெகிழ வைத்த மதுரை நேத்ரா

மாற்றுத்திறனாளிக்கு உதவி
மாற்றுத்திறனாளிக்கு உதவி

மதுரை நேத்ரா, தனக்கு அன்பளிப்பாகக் கிடைத்த பணம் மூலமும் பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறார். இவரது செயலால் மதுரை மக்கள் நெகிழந்து போகிறார்கள்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு, மகளின் எதிர்காலத்துக்கு சேர்த்த பணத்தின்மூலம் செலவு செய்த மதுரை மேலமடை சலூன் கடைக்காரர் மோகனை பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டியது சமீபத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் மகள் நேத்ரா, தனக்கு அன்பளிப்பாகக் கிடைத்த ரூ25,000-ஐ மாற்றுத்திறனாளி இளைஞருக்கு வழங்கி அனைவரையும் நெகிழவைத்துள்ளார்.

நேத்ரா
நேத்ரா
ஈ.ஜெ.நந்தகுமார்

சலூன் கடைக்காரர் மோகனை பிரதமர் பாராட்டிப் பேசிய பின் பல்வேறு தரப்பினரும் அவரைப் பாராட்டிவருகிறார்கள். அது மட்டுமில்லாமல், அவர் மகளின் எதிர்காலத்துக்கு உதவுவதாகவும் கூறிவருகிறார்கள். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோகன் உதவியதற்கு, ஒன்பதாவது படிக்கும் அவர் மகள் நேத்ராதான் காரணம் என்பதால், ஐநா-வின் கிளை அமைப்பொன்று நல்லெண்ணத் தூதராக சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

இதன் மூலம் மோகனுடன் அவர் மகள் நேத்ராவும் அனைவராலும் பாராட்டப்பட்டுவருகிறார். அவருடைய எதிர்கால கல்விச் செலவு அனைத்தையும் அரசே செய்யும் என்று முதலமைச்சர் அறிவித்தார். பல பிரபலங்கள், அமைப்புகள், மோகன் குடும்பத்திற்கு பல உதவிகளைச் செய்துவருகிறார்கள். தனக்கு வரும் உதவிகள் மூலம், கொரோனா நிவாரணங்களைக் கூடுதலாக வழங்கிவருகிறார்கள் மோகன் குடும்பத்தினர்.

மாற்றுத் திறநாளிக்கு உதவி
மாற்றுத் திறநாளிக்கு உதவி
ஈ.ஜெ.நந்தகுமார்

இந்த நிலையில் வேடசந்தூரை சேர்ந்த முருகேசன் என்பவர், கால்கள் செயலிழந்த நிலையில் வறுமையில் வாடுவதாகவும் எனக்கு உதவ வேண்டும் என்றும் சலூன் கடைக்காரர் மோகனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

உடனே முருகேசனை மதுரைக்கு இன்று வரவழைத்து உபசரித்தார் மோகன். அவரிடம், தனக்கு அன்பளிப்பாகக் கிடைத்த ரூ.25,000 -க்கான காசோலையை முருகேசனின் மருத்துவ செலவிற்காக நேத்ரா வழங்கினார். ஒரு மாதத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினார்.

மோகன் குடும்பத்தினர்
மோகன் குடும்பத்தினர்
ஈ.ஜெ.நந்தகுமார்

உதவுவதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தொடர்ந்து கொண்டிருக்கும் மோகன் குடும்பத்தினரை நினைத்து மதுரை மக்கள் நெகிழ்ந்துபோகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு