Published:Updated:

கொரோனா: 20,000 மருந்துப் பெட்டகங்கள்;`வளர்ச்சித் திட்டங்களைவிட இது முக்கியம்’ - எம்.பி சு.வெங்கடேசன்

மருந்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி
மருந்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி

சு.வெங்கடேசன், ``மக்கள்நலன் முக்கியம். அவர்களைப் பாதுகாக்கும் வகையில் நிதிகளை ஒதுக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் முதலில் 20,000 மருந்துப் பெட்டகங்களை வழங்க நிதி ஒதுக்கினேன்” என்கிறார்.

கொரோனா பெருந்தொற்று தமிழகத்தில் வேகமாகப் பரவி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பியுள்ள நிலையில், மரணங்களும் அதிகரித்துவருகின்றன. அதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தன் தொகுதியில் செயல்படுத்தியுள்ள திட்டம் அனைவராலும் பாராட்டப்படுகிறது.

மருந்துப் பெட்டகம்
மருந்துப் பெட்டகம்

கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படும் ஆரம்பநிலை நோயாளிகளுக்கும், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ளும் வகையில் சித்தா, ஹோமியோ, ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட மருந்துப் பெட்டகங்களை வழங்கும் ஏற்பாட்டை சு.வெங்கடேசன் செய்தார். இதற்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 20,00,000 ஒதுக்கியுள்ளார்.

பெரும்பாலான எம்.பி-க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை கட்டடம், சாலை அமைப்பதற்கு மட்டும் ஒதுக்கிவரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒதுக்குவதில்லை.

கடநத அலையின்போது தொகுதி மேம்பாட்டு நிதியில் முகக்கவசங்கள், மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்த சு.வெங்கடேசன், தற்போது மக்களைக் கொரோனாவிலிருந்து காப்பதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துப் பெட்டகங்களுக்காக நிதியை ஒதுக்கியுள்ளார்.

மருந்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி
மருந்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி

கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் முன்னிலையில் நடந்த நிகழ்வில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நம்மிடம் பேசிய சு.வெங்கடேசன், ``வளர்ச்சித் திட்டங்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்க வேண்டும்தான். அதே நேரத்தில் மக்கள்நலன் முக்கியம். அவர்களைப் பாதுகாக்கும் வகையிலும் நிதிகளை ஒதுக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் முதலில் 20,000 மருந்துப் பெட்டகங்களை வழங்க நிதி ஒதுக்கினேன்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

மதுரை மாநகராட்சிப் பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஐந்து நாள்களாக வீட்டில் தனிமையில் இருப்பவர்கள், மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நகர்நலப் பணியாளர்களுக்கும் வழங்கப்படவிருக்கிறது.

இதில் ஐந்து நாள்களாக வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு மண்டல மருத்துவ அலுவலர்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் அவரவர் வீடுகளுக்கு மருந்துப் பெட்டகம் கொடுக்கப்படவிருக்கிறது.

அதேபோல் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு வகைப்படுத்துதல் மையத்தில் இருப்பவர்களுக்கு மருத்துவர் ஆலோசனையின்படி மருந்துப் பெட்டகம் வழங்கப்படும். மருந்துப் பெட்டகங்கள் மாநகராட்சிப் பகுதிகளுக்கு 15 ஆயிரமும், ஊரகப் பகுதிகளுக்கு 5 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. அடுத்தகட்டமாக இந்த விநியோகத்தை அதிகமாக்கும் திட்டமுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு