Published:Updated:

`சித்த மருத்துவத்தை வளர்க்க எதுவும் செய்யவில்லை!' - மத்திய அரசை விமர்சித்த சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன்
News
சு.வெங்கடேசன்

``அனைத்து உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டை மறுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. இந்த மசோதாவிலும் அதையே செய்திருக்கிறது. சிறுபான்மை மற்றும் அடித்தட்டு மாணவர்களின் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி இந்த மசோதா பேச மறுக்கிறது."

மக்களுக்கான திட்டங்களில் மத்திய அரசு கடைப்பிடிக்கும் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்தும், தமிழகத்துக்கு நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை வலியுறுத்தியும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளது பலரின் ஆதரவையும் பெற்றுள்ளது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த 6 - ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த தேசிய மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான மசோதாவில் பேசிய சு.வெங்கடேசன், ``தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் சம்பந்தப்பட்ட மசோதாவில் ஆரம்பத்திலேயே என் அதிர்ச்சியை பதிவு செய்கிறேன். அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், என்.ஐ.பி.இ.ஆர் (NIPER - National Institute of Pharmaceutical Education and Research) கவுன்சிலில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்ததை இந்த மசோதா உறுதிப்படுத்தவில்லை என்பது அதிர்ச்சியானது. இப்படி இருந்தால் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு என்ன மரியாதை?

அதேபோல் அனைத்து உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டை மறுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. இந்த மசோதாவிலும் அதையே செய்திருக்கிறது. சிறுபான்மை மற்றும் அடித்தட்டு மாணவர்களின் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி இந்த மசோதா பேச மறுக்கிறது.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

புராண காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்பது போன்ற பழம் பெருமையை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ஒன்றிய அரசினர் பேசுவார்கள். பழம் பெருமை வேறு, நம் மரபு என்பது வேறு. மரபுக்கும் பெருமைக்கும் வித்தியாசம் இருக்கிறது. கால் நீட்டி உட்கார்ந்து பழைய கதையைப் பேசிக் கொண்டிருப்பது பழம் பெருமை. ஆனால், மரபு புதிய தலைமுறைக்கு புதிய அறிவைக் கொடுத்துக்கொண்டே இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏன் சொல்கிறேன் என்றால், இந்திய மருத்துவம், குறிப்பாக தமிழ் மருத்துவம், சித்த மருத்துவத்தைப் பற்றி ஆய்வுகள் வளர்ப்பதற்கான எந்த ஏற்பாடும் வழிமுறையும் இதிலே இல்லை.

மிக முக்கியமாக தமிழ் மருத்துவம், சித்த மருத்துவத்தைப் பற்றிச் சொல்வதென்றால், 2,000 ஆண்டுகளுக்கு முன்பே 8,000 மூலிகைகளுக்கு மேல் ஆய்வு செய்து மகத்தான மருத்துவ அறிவை விஞ்ஞானபூர்வமாக நிரூபித்தவர்கள்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவிருக்கும் இடம்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவிருக்கும் இடம்

`உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்' என்று ஓர் அறிவியல் தத்துவம். தாவரங்களிலே துவங்கி தாதுக்கள், கனிமங்கள் வரை பயன்படுத்திய முதல் மரபு, தமிழ் மரபான சித்த மருத்துவம் என்பதை பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆனால், இந்த தேசிய மருந்துசார் கல்வி ஆராய்ச்சிக் கழகம், இந்திய மருத்துவத்தை பேச மறுக்கிறது. தமிழ் மருத்துவத்தை பேச மறுக்கிறது.

இன்றைக்கு சர்க்கரை நோயாளிகளின் தலைமையகமாக இந்தியாவை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதற்கு நம்முடைய மருத்துவ மரபிலேயிருந்து எதைக் கண்டுபிடித்து இருக்கிறோம் என்பது ஒரு பெரிய கேள்வி. மேக் இன் இந்தியாவைப் பற்றி பிரதமர் அடிக்கடி பேசுகிறார். அதைவிட திங்க் இன் இந்தியா மிக முக்கியமானது.

கடந்த 10 ஆண்டுகளில் என்.ஐ.பி.இ.ஆர் மூலமாக 40 கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு காப்புரிமை உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இந்திய மருத்துவ மரபில் பல்லாயிரம் நோய்க்கூறுகள் பற்றிய குறிப்பும், அதற்கான மருத்துவ மேற்கோளும் இருக்கிறது என்பதை பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

மிக முக்கியமாக, 2011-ல் நம்முடைய 8-வது நிதிக்குழுவினால் 8 என்.ஐ.பி.இ.ஆர்-கள் உறுதிபடுத்தப்பட்டது. அதில் ஒன்று மதுரையில் அமையும் என்று அன்றைய ஒன்றிய அமைச்சரவை உறுதிபடுத்தியது.

ஆனால் இந்த 8 என்.ஐ.பி.இ.ஆர்-களில் 7 உடனடியாக தொடங்கப்பட்டது. ஆனால், மதுரை என்.ஐ.பி.இ.ஆருக்கு மட்டும் கடந்த 12 ஆண்டுகளாக எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

என்.ஐ.பி.இ.ஆருக்கு தேவையான 100 ஏக்கர் நிலத்தை எந்த மாநிலமும் தரவில்லை. தமிழக அரசு மட்டும்தான் மதுரையில் 116 ஏக்கர் நிலத்தை 8 ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு இரண்டாவது செங்கலுக்கு இத்தனை ஆண்டுகள் போராடிக் கொண்டிருக்கிறோம். அதேபோல என்.ஐ.பி.இ.ஆரும் ஆகிவிடக் கூடாது. உடனே தொடங்கப்பட வேண்டும்" என்று பேசினார்.