Published:Updated:

"இந்த வயசுல குழந்தை தேவையானு கேட்டாங்க; எங்க முடிவுல...!" - மகன் வருகையால் மகிழும் சுபஶ்ரீ பெற்றோர்

மகனுடன் சுபஶ்ரீ பெற்றோர்...

"குழந்தையைத் தத்தெடுக்க ஆசைப்படுறவங்க, தங்களோட உறவினர்கள், நண்பர்கள்கிட்ட ஆலோசனை கேட்கிறது தப்பில்லை. ஆனா, யார் என்ன கருத்து சொன்னாலும், அதுல நல்லது கெட்டதைப் பக்குவமா புரிஞ்சுகிட்டு, உறுதியான இறுதிமுடிவை நாமதான் எடுக்கணும்."

"இந்த வயசுல குழந்தை தேவையானு கேட்டாங்க; எங்க முடிவுல...!" - மகன் வருகையால் மகிழும் சுபஶ்ரீ பெற்றோர்

"குழந்தையைத் தத்தெடுக்க ஆசைப்படுறவங்க, தங்களோட உறவினர்கள், நண்பர்கள்கிட்ட ஆலோசனை கேட்கிறது தப்பில்லை. ஆனா, யார் என்ன கருத்து சொன்னாலும், அதுல நல்லது கெட்டதைப் பக்குவமா புரிஞ்சுகிட்டு, உறுதியான இறுதிமுடிவை நாமதான் எடுக்கணும்."

Published:Updated:
மகனுடன் சுபஶ்ரீ பெற்றோர்...

2019-ம் ஆண்டு இதே செப்டம்பர் மாதம் நிகழ்ந்த பேனர் விபத்தால், ஐ.டி ஊழியர் சுபஶ்ரீ உயிரிழந்த சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது. எந்தக் காயத்துக்கும் அருமருந்து உண்டு என்பார்கள். அதுபோல புத்திர சோகத்தில் மீள முடியாமல் தவித்த சுபஶ்ரீயின் பெற்றோருக்கு, ஆறு வயது மகனின் வருகைக்குப் பிறகு, மகிழ்ச்சி துளிர்விட்டிருக்கிறது.

மகனுடன் சுபஶ்ரீ பெற்றோர்...
மகனுடன் சுபஶ்ரீ பெற்றோர்...

அந்தக் குடும்பம் இப்போது எப்படி இருக்கிறது என தெரிந்துகொள்ள, சென்னையை அடுத்த குரோம்பேட்டையிலுள்ள சுபஶ்ரீயின் பெற்றோர் வீட்டுக்குச் சென்றிருந்தோம். "அம்மாவும் அப்பாவும் உள்ள இருக்காங்க. வாங்க வீட்டுக்குள்ள போகலாம்" வீட்டு வாசலில் மழலை உபசரிப்புடன் வரவேற்ற சக்தி பிரணவ், நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறான்.

சுபஶ்ரீயின் புகைப்படங்கள், அவர் விட்டுச் சென்ற நினைவுப் பொருள்கள் எல்லாமே, அந்த வீட்டில் அவர் நீங்காமல் குடிகொண்டிருப்பதை நினைவுபடுத்துகின்றன. நீண்ட காலத்துக்குப் பிறகு, சுபஶ்ரீயின் பெற்றோரான ரவி - கீதா இருவரின் முகத்திலும் மத்தாப்பூ சிரிப்பைக் காண முடிந்தது. எல்லாம், பிரணவ் வருகையால் நிகழ்ந்த ஜாலம். 50 வயதைக் கடந்த நிலையில், குழந்தையைத் தத்தெடுத்திருக்கும் இவர்களின் முடிவு, சமூகத்துக்குப் பயன்தரும் நல்ல மாற்றத்துக்கான தொடக்கம்.

சக்தி பிரணவ்
சக்தி பிரணவ்

"சுபஶ்ரீ இறப்புக்கு அப்புறமா, அவ ரூம்ல சின்னச் சின்ன மாற்றங்களை மட்டுமே செஞ்சிருக்கோம். அவளோட எந்தப் பொருள்களையும் நாங்க எடுக்கலை. அவ ஆன்மா எங்களோடவே இருக்கிற மாதிரி ஃபீல் பண்றோம். அதனால, பொண்ணு விருப்பத்துக்கு ஏத்த மாதிரியே அவ ரூமை அப்படியேதான் வெச்சிருக்கோம்" என்று பேசிக்கொண்டே சுபஶ்ரீயின் அறைக்குள் நம்மை அழைத்துச் சென்றார் கீதா.

"அவளும் நானும் அக்கா தங்கச்சி மாதிரி அவ்ளோ ஃபிரெண்ட்லியா இருப்போம். என் கணவர்கிட்டயும் அவ ரொம்பவே பெட்டா இருப்பா. ஒத்த மகளைப் பறிகொடுத்துட்டு, திக்கற்ற நிலையில தவிச்சோம். இனி யாருக்காக வாழணும்ங்கிற தாழ்வுமனப்பான்மையில நிம்மதி இல்லாம ஒவ்வொரு நாளும்...." பேச முடியாமல் தழுதழுத்தபடியே உடைந்து அழுகிறார் கீதா.

மகனுடன் சுபஶ்ரீ பெற்றோர்...
மகனுடன் சுபஶ்ரீ பெற்றோர்...

"பொண்ணு இல்லாத இந்த வீட்டுல தனிமையையும் வெறுமையையும் தினமும் உணர்ந்தோம். சுபஶ்ரீ இழப்பிலிருந்து எங்களால வாழ்நாள் முழுக்க மீளவே முடியாது. ஆனாலும், அந்தச் சோகத்திலிருந்து விடுபடணும்னுதான் ஒரு பையனைத் தத்தெடுத்திருக்கோம். சுபஶ்ரீ போன பிறகு, முக்கியமான முடிவெடுக்கிறப்போல்லாம் அவகிட்ட சில சமிக்ஞைகள் மூலமா சம்மதம் வாங்குவேன். அதுபோல பையனைத் தத்தெடுக்கிற முடிவுக்கும், சுபஶ்ரீ போட்டோ முன்னாடி நின்னு சம்மதம் வாங்கினேன். இதுக்கான வழிகாட்டுதலுக்காக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சாரை அணுகினோம். அவர் உடனடியா உதவினார்.

பையன் வந்த பிறகு, மெள்ள மெள்ள இயல்புநிலைக்குத் திரும்பிட்டிருக்கோம். சுபஶ்ரீ தவறினதுலேருந்து எந்தப் பண்டிகையையும் நாங்க கொண்டாடலை. பையன் வந்த பிறகு, இந்த வருஷம்தான் சில பண்டிகைகளைக் கொண்டாடினோம்" நெகிழ்ச்சியாகக் கூறும் கீதா, மகள் இருக்கும்போது ஆரம்பித்துக்கொடுத்த ஸ்டேஷனரி ஷாப் ஒன்றை அவரின் பெயரிலேயே நடத்திவருகிறார். இவரின் கணவர், தனியார் நிறுவனத்தில் கணக்குப் பிரிவு அலுவலராக இருக்கிறார்.

சுபஶ்ரீ
சுபஶ்ரீ

தத்தெடுப்புக்கான நடைமுறைகளை விவரித்த ரவி, "அஞ்சு வயசுக்கு உட்பட்ட குழந்தையைத் தத்தெடுக்கிறதா இருந்தா, நடைமுறை செயல்பாடுகள் முடிய ஆண்டுக்கணக்குல காத்திருக்கணும். ஆனா, ஆறு வயது நிரம்பிய குழந்தையைத் தத்தெடுக்கிறதுன்னா, சராசரியா பத்து நாள்கள்ல எல்லா செயல்பாடுகளும் நிறைவடைஞ்சுடும். நாங்க பிரணவ்வைத் தத்தெடுக்க அணுகினப்போ, குழந்தைக்கு ஆறு வயசு பூர்த்தியாகலை. அதனால, சில காலம் காத்திருந்தோம். 'இந்த வயசுல உங்களால குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க முடியுமா?'னு சிலர் கேட்டாங்க.

யார் என்ன சொன்னாலும் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறதுல நாங்க உறுதியா இருந்ததுடன், நல்லா கவனிச்சுகிட்டா, இந்த வயசுலயும் நல்லபடியா குழந்தையை வளர்க்க முடியும்னு உறுதியோட இருந்தோம். பிரணவ் வந்த பிறகு, பல வருஷம் பின்னோக்கிப் போன உத்வேகம் எங்களுக்குக் கிடைக்குது. ஒண்ணாங்கிளாஸ் படிக்கிறான். இவ்ளோ சீக்கிரம் இவன் எங்ககிட்ட மிங்கிள் ஆவான்னு நாங்க எதிர்பார்க்கலை. அப்பா - அம்மான்னு ரொம்பவே அன்பா எங்களோடு பழகிறதோடு, எங்க வீட்டுச் சூழலையும் சுலபமா ஏத்துக்கிட்டான்" என்று கூறியபடியே மகனைக் கட்டியணைக்கிறார்.

மகனுடன் சுபஶ்ரீ பெற்றோர்...
மகனுடன் சுபஶ்ரீ பெற்றோர்...

"பேச்சு, குறும்புனு பல விஷயத்துலயும் சுபஶ்ரீயின் சாயல் இவன்கிட்டயும் தெரியுது. எந்த ஒரு பிரச்னையிலும் ஒரு கதவு அடைபட்டாலும், மற்றொரு கதவு திறக்கும்னு சொல்றபடி, பெண் குழந்தையை இழந்த எங்களுக்கு, ஆண் குழந்தையை வளர்க்கிற பொறுப்பைக் கடவுள் கொடுத்திருக்கார். எங்களை மாதிரி எதிர்பாராத விபத்தினால குழந்தையை இழந்தவங்க, குழந்தையில்லாத தம்பதிகள், தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கலாம். இதனால, நம்ம வாழ்க்கையில புது வசந்தம் பிறக்கிறதோடு, பெற்றோர் இல்லாத குழந்தைக்குக் கூடுதலான பாதுகாப்பும் சமூக அந்தஸ்தும் கிடைக்கும்.

குழந்தையைத் தத்தெடுக்க ஆசைப்படுறவங்க, தங்களோட உறவினர்கள், நண்பர்கள்கிட்ட ஆலோசனை கேட்கிறது தப்பில்லை. ஆனா, யார் என்ன கருத்து சொன்னாலும், அதுல நல்லது கெட்டதைப் பக்குவமா புரிஞ்சுகிட்டு, உறுதியான இறுதிமுடிவை நாமதான் எடுக்கணும்" என்று ஆலோசனை சொல்லும் கீதா, தங்களின் குழந்தை வளர்ப்பு நிலைப்பாட்டையும் விவரித்தார்.

"குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறவங்க, அந்தத் தகவலை குழந்தைகிட்ட சொல்லி வளர்க்கலாமா... வேண்டாமான்னு குழப்பமடைய வாய்ப்பிருக்கு. நாம உண்மையைச் சொல்லாம வளர்த்து, பிற்காலத்துல சொந்தக்காரங்க, நண்பர்கள், தெரிஞ்சவங்க மூலமா குழந்தைக்கு உண்மை தெரிய வந்தா, அது சில தர்மசங்கடங்களை உருவாக்க வாய்ப்பிருக்கு. அதனால, ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் எங்க பையனுக்குப் புரியுற வகையில, எல்லா உண்மைகளையும் பக்குவமா சொல்லித்தான் வளர்க்கப் போறோம். எந்த விதத்துலயும் சின்ன பாகுபாடுகூட இல்லாம, எங்க சொந்தப் பிள்ளையாதான் இவனை வளர்க்கப்போறோம்" என்று தன் மடியில் உறங்கிக்கொண்டிருந்த மகனைத் தட்டிக்கொடுத்தபடியே சொல்கிறார்.

"எங்க மகளின் இழப்புக்குப் பிறகு, பேனர் கலாசாரத்துக்கு எதிரா நல்ல மாற்றம் உருவாகியிருக்கு. பேனர் விபத்துகள் இப்போ குறைஞ்சுட்டாலும், தெரிஞ்சோ தெரியாமலோ சில பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் இன்னும்கூட பேனர் வைக்கிறதை வழக்கமா வெச்சிருக்காங்க. சந்தோஷத்துக்காகவும் பெருமைக்காகவும் வைக்கிற பேனரால, எங்கள மாதிரி வேறெந்த பெற்றோரும் கலங்கக்கூடாதுங்கிற எண்ணத்துல சொல்றோம். மத்தவங்களை பாதிக்கிற மாதிரி யாருமே பேனர் வைக்காதீங்க..." கைகூப்பியடியே வலியுறுத்தி முடிக்கிறார் ரவி.

மகிழ்ச்சிக்கான வழிகள் திறக்கட்டும்!