Published:Updated:

கனவு நனவானது.. கனடா செல்லும் தேர்வில் தேர்ச்சி.. சுபஸ்ரீ குடும்பத்தை துரத்தும் சோகம்!

சென்னையில் சாலை விபத்தில் பலியான சுபஸ்ரீ கனடா செல்வதற்கான தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

SUBASREE
SUBASREE

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ரவி. இவரது ஒரே மகள் சுபஸ்ரீ பெருங்குடியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 12-ம் தேதி மாலை பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்கரணை ரேடியல் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபால் இல்லத் திருமண விழா பேனர் சரிந்து சுபஸ்ரீ வாகனத்தின் மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

SUBASREE
SUBASREE

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு சம்பந்தமாகப் பேனர் வைத்த அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளார். சுபஸ்ரீ பி.டெக் பட்டதாரி. ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுபஸ்ரீ-க்கு கனடாவில் பணியாற்ற வேண்டும் என விருப்பம். `தான் முதலில் கனடா போய் வேலைக்குச் சேர்ந்துவிடுகிறேன். அதன்பின் உங்களை அழைத்துச் செல்கிறேன்' எனப் பெற்றோரிடம் தெரிவித்து வந்துள்ளார். சுபஸ்ரீ மரணத்தின் கண்ணீருடன் அவரது பெற்றோர்கள் இதனை விவரித்தனர். கனடா செல்வதற்கான தேர்வைச் சமீபத்தில் அவர் எழுதியிருந்தார். அந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. சுபஸ்ரீ இதில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். தனது கனவுக்காக உழைத்து அதில் தேர்ச்சி பெற்றாலும் அதனை கொண்டாட சுபஸ்ரீ தற்போது இல்லை என்ற சோகம் அவரது குடும்பத்தை மேலும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

தயவுசெஞ்சு பேனர்   வைக்காதீங்கய்யா! - கதறும் சுபஸ்ரீ பெற்றோர்...